ஜெயலலிதாவை காப்பாற்றியிருக்கலாம்: அதிர்ச்சிதரும் தகவல் வெளியானது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 18, 2022

Comments:0

ஜெயலலிதாவை காப்பாற்றியிருக்கலாம்: அதிர்ச்சிதரும் தகவல் வெளியானது

ஜெயலலிதாவை காப்பாற்றியிருக்கலாம்: அதிர்ச்சிதரும் தகவல் வெளியானது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தபடி இருதய அறுவைசிகிச்சை செய்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அனைவரும் அவருக்கு ஆஞ்சியோ செய்ய பரிந்துரைத்தனர். ஆனால், ஜெயலலிதாவின் இறுதி மூச்சு வரை அது செய்யப்படவில்லை என்று விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது. இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையின் 553வது பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல் அதிர்ச்சி தருவதாக உள்ளது.

அதாவது, அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட மருத்துவர் சமின் சர்மா, ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்ய பரிந்துரை செய்தார். அதனை ஜெயலலிதாவும் ஏற்றுக் கொண்டதாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. பிறகும் அவருக்கு ஆஞ்சியோ செய்யப்படாதது ஏன்? என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. அமெரிக்காவிலிருந்து வந்த மருத்துவர் சமின் சர்மா ஆஞ்சியோ செய்ய பரிந்துரை செய்தும், அதனை ஜெயலலிதாவும் ஏற்றக் கொண்ட பிறகு, அந்த சிகிச்சையை அளிக்காமல், பிறகு லண்டனிலிருந்து நுரையீரல் நிபுணரான டாக்டர் பாபு ஆபிரகாம், ஏன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவை அழைக்க வேண்டும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

எனவே, ஆஞ்சியோவைத் தவிர்ப்பதற்காக, அதிகாரம் பெற்ற சிலருக்கு உதவுவதற்காக, மருத்துவர் ரிச்சர்ட் பீலே கூறியதை அறுவை சிகிச்சையைத் தள்ளிப்போடலாம் என்று கருத்து தெரிவித்ததாக திரித்துக் கூறி தந்திரமாக செயல்பட்டுள்ளார் மருத்துவர் பாபு ஆபிரகாம் என்று விசாரணை ஆணையம், அவர் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறது. சூழ்நிலைகளிலிருந்து பெறப்படும் நியாயமான மற்றும் தவிர்க்கமுடியாத அனுமானம் என்னவெனில், சரியானநேரத்தில் ஆஞ்சியோ செய்யப்படாமல் இருக்க ஒருவரால் திறமையாக உத்தி கையாளப்பட்டுள்ளது.

மற்றொருபக்கம், அமெரிக்காவிலிருந்து வந்த சமின் சர்மா, அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரசல் மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்ய பரிந்துரை செய்தும், அவருக்கு செய்யப்படவில்லை. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்து, இருதய அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று அறிக்கை ஒரு அதிர்ச்சிகரமான தகவலை இங்கே பதிவு செய்துள்ளது.

ஜெயலலிதா இறந்த பிறகும், உடனடியாக இறப்பை அறிவிக்காமல், மருத்துவர் பாபு ஆபிரகாம் சிபிஆர் மற்றும் சில மருத்துவ நடவடிக்கைகளை செய்து நேரத்தைக் கடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.

பொதுவாக ஒரு நோயாளியின் இதயம் செயலிழந்ததும், சிபிஆர் உள்ளிட்ட நடைமுறைகளை செய்து பார்த்துவிட்டு, 45 நிமிடத்துக்குப் பிறகும் இதயம் இயங்கவில்லையென்றால், நோயாளி இறந்ததாக அறிவிப்பார்கள். ஆனால் ஜெயலலிதா விஷயத்தில் அவ்வாறு அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமின் சர்மா, ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்யப்படாதது ஏன்? அதைச் செய்யவிடாமல் தடுத்தது யார்? என்ற கேள்விகள் தொடர்கின்றன. இந்த கேள்விகளுக்கு விடை காண, சசிகலா மற்றும் சசிகலாவின் உறவினரும் மருத்துவருமான சிவக்குமார் உள்பட நான்கு பேரிடம் விசாரணை நடத்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஓ. பன்னீர்செல்வத்துக்கு அனைத்தும் தெரியும் அப்போதைய துணை முதல்வராக இருந்ததால் அனைத்தையும் அறிந்திருந்த ஓ. பன்னீர்செல்வம், முதல்வர் பதவியை விட்டு விலகியதும் தர்மயுத்தத்தைத் தொடங்கினார். தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, எந்த சந்தேகமும் இல்லையென்றும், வதந்திகளுக்காகத்தான் இந்த ஆணையத்தின் நியமனம் தேவைப்பட்டது என்றும் கூறினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews