தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 24, 2022

Comments:0

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு.

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு புதிய உத்தரவு

கள்ளக்குறிச்சியில் சமீபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்,தமிழக அரசின் பள்ளிகல்விதுறை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி,

1. பள்ளிகளில் மாணவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளுதல், ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி விழுதல், சாலை விபத்து உள்ளிட்ட ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் (சிஇஓ) கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.

2. சிஇஓ-வின் அனுமதி பெற்ற பிறகே, ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குடிநீர், கழிப்பறை, ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் காலியிட விவரம் போன்ற எதையும் ஊடகங்களுக்கு சிஇஓ அனுமதியின்றி தெரிவிக்கக் கூடாது.

3. பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தால், சிஇஓ-க்கு முறைப்படி கடிதம் வாயிலாகவும், தொலைபேசியிலும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

4. மரத்தடியில் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தக்கூடாது. 5.சத்துணவு தரமாகவும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுகிறதா என்பதை தினந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும்.

6. பேருந்து மேற்கூரையின் மீது அமர்ந்து மாணவர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்கும் வகையில் காலை இறைவணக்கக் கூட்டத்தில் உரிய அறிவுரைகள் மாணவர்களுக்கு"வழங்கப்பட வேண்டும்.

7. பணியாளர்கள் அனைவரும் பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே பள்ளிக்கு வந்துவிட வேண்டும்.

8. ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது.

9. மாணவர்களை ஆசிரியர்கள் தங்களது சொந்த வேலைக்காக பள்ளியை விட்டு வெளியே அனுப்பக் கூடாது.

10. ஆசிரியர்கள் பள்ளியை விட்டு வெளியே செல்லும் முன், Movement Register-இல் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்

மேலும் பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டுமெனவும் இதன் மூலம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews