மத்திய அரசு வசமாகும் பங்குகள்.. வோடஃபோன் ஐடியா இனி என்னாகும்? ஒரு விரிவான அலசல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 12, 2022

Comments:0

மத்திய அரசு வசமாகும் பங்குகள்.. வோடஃபோன் ஐடியா இனி என்னாகும்? ஒரு விரிவான அலசல்

மத்திய அரசு வசமாகும் பங்குகள்.. வோடஃபோன் ஐடியா இனி என்னாகும்?

ஒரு விரிவான அலசல்.. 

அரசுக்கு செலுத்தவேண்டிய AGR நிலுவைத்தொகை மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டண பாக்கிகளுக்கான வட்டித்தொகைக்கு பதிலாக, 35.8% பங்குகளை அரசிடம் கொடுக்க முடிவுசெய்திருக்கிறது வோடஃபோன் ஐடியா (Vi). 

■ இதன்மூலம் வோடஃபோன் ஐடியாவின் முன்னணி பங்குதாரராக மாறவிருக்கிறது மத்திய அரசு. ஏன் இப்படி தனியார் டெலிகாம் நிறுவனப் பங்குகளை வாங்குகிறது மத்திய அரசு என்பது குறித்தும், வோடஃபோனுக்கும், அரசுக்கும் இதனால் என்ன லாபம் என்பது குறித்தும் இந்த Thread-ல் பார்ப்போம்.

■ இதுபற்றி புரிந்துகொள்ள வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பிரச்னைகளையும் சுருக்கமாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

என்ன பிரச்னை?

இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கும், மத்திய அரசுக்கும் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவந்த பிரச்னை, AGR (Adjusted gross revenue) தொடர்பானது. டெலிகாம் நிறுவனங்களின் லாபத்தைக் கணக்கிடுவது தொடர்பாக ஏற்பட்ட இந்தப் பிரச்னையில், இறுதியாக 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

■ இதன்படி, டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்கு மொத்தமாக 92,000 கோடிக்கும் மேலாக செலுத்த வேண்டும். ஏர்டெல், வோடஃபோன், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் சேர்த்து இந்த தொகை.

■ இதில் வோடஃபோன் ஐடியாவின் பங்கு மட்டும் சுமார் 58,000 கோடி ரூபாய்க்கும் மேல்.

■ இந்த தொகையை 2021 முதல் 2031 வரை அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் கொஞ்சம் கொஞ்சமாக இந்நிறுவனங்கள் செலுத்தவேண்டும். இதில்தான் வோடஃபோனுக்கு சிக்கல்.

2016-ம் ஆண்டு ஜியோவின் வருகைக்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய வாடிக்கையாளர்களை இழந்தது வோடஃபோன். இந்தப் போட்டியை சமாளிக்க, 2018-ம் ஆண்டு பிரிட்டனின் வோடஃபோன் நிறுவனம், இந்தியாவின் ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஐடியா நிறுவனத்துடன் இணைந்து வோடஃபோன் ஐடியாவாக (Vi) மாறி, இந்தியாவின் 3-வது பெரிய டெலிகாம் நிறுவனமாக உருவானது.

ஜியோவின் வருகையால் தத்தளித்து வந்த, அந்நிறுவனத்திற்கு 2019-ம் ஆண்டு வந்த AGR தீர்ப்பு மற்றுமொரு இடியாக இறங்கவே, வேறு வழியே இல்லாமல் அரசின் உதவியை நாடியது.

■ பிற டெலிகாம் நிறுவனங்களும், இதேபோல AGR தொகையைச் செலுத்த அரசிடம் சலுகைகள் கேட்டன.

இந்த நிலையில்தான் மத்திய அரசு, டெலிகாம் நிறுவனங்கள் AGR தொகையைச் செலுத்துவதற்கு 2021-ல் சில சலுகைகளை அறிவித்தது. இதன்படி, டெலிகாம் நிறுவனங்கள் நிலுவைத்தொகையை 4 ஆண்டுகள் கழித்து செலுத்த தொடங்கலாம்.

■ (2021-லேயே தொடங்குவதற்கு பதிலாக, 2025-லிருந்து). இப்படி தாமதமாகச் செலுத்தப்படும், தொகையின் வட்டித்தொகையை, நிறுவனங்களின் பங்குகளை அரசுக்கு அளித்தும் கழித்துக் கொள்ளலாம்.

■ இதில் முதல் ஆப்ஷனை மட்டும் தேர்ந்தெடுத்தது ஏர்டெல். இரண்டு ஆப்ஷன்களையும் தேர்ந்தெடுத்தது வோடஃபோன் ஐடியா.

என்ன காரணம்?

■ அதிகப்படியான கடன் சுமைதான் முதல் காரணம். இதனால், நீண்டகால அடிப்படையில் புதிய முதலீடுகளைத் திரட்ட முடியாமலும், 5G உள்ளிட்ட எதிர்கால தேவைகளில் முதலீடு செய்ய முடியாமலும் தவிக்கிறது வோடஃபோன் ஐடியா.

■ எனவே, உடனடியாக ஏதாவது செய்து, கம்பெனியைக் காப்பாற்றுவதே அதன் முதல் நோக்கம். அதற்காகத்தான் இப்போது அரசிடம் சுமார் 16,000 கோடி ரூபாய் வட்டித்தொகைக்கு பதிலாக 36% பங்குகளை அளிக்க முடிவுசெய்திருக்கிறது.

அரசு ஏன் வோடஃபோனுக்கு உதவ வேண்டும்?

வோடஃபோனின் நிலையைப் பார்த்து உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ யாரும் முதலீடு செய்யத் தயாராக இல்லை.

■ ``நிலை இப்படியே போனால், அரசும் உதவவில்லை என்றால், தினசரி நடவடிக்கைகளைக்கூட தொடர முடியாமல், கம்பெனியை மூடவேண்டியதுதான்” என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசிடம் நேரடியாகவே முறையிட்டார் வோடஃபோன் இந்தியாவின் முன்னாள் தலைவர் குமார் மங்கலம் பிர்லா.

■ மேலும், ``10-க்கும் மேற்பட்ட டெலிகாம் நிறுவனங்கள் இருந்த இடத்தில் தற்போது 3 தனியார் நிறுவனங்களே இருக்கின்றன. இது இன்னும் குறைந்தால், இந்த துறைக்கும், வாடிக்கையாளர்களுக்கும் நல்லதல்ல; போட்டிகளற்ற சந்தை, ஆதிக்கத்திற்கே வழிவகுக்கும்” என நினைக்கிறது மத்திய அரசு.

■ மேலும் வோடஃபோனுக்கு கடன்கொடுத்த வங்கிகளுக்கும் அந்நிறுவனத்தின் சரிவால் சிக்கல் ஏற்படும். இதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்துதான், வோடஃபோனுக்கு கைகொடுக்க நினைக்கிறது அரசு.

இனி வோடஃபோன் தப்பித்து விடுமா?

இல்லை.. வோடஃபோனின் பிரச்னை யானைப்பசி என்றால், அரசின் இந்த உதவி சோளப்பொறிதான்.

அரசின் இந்த உதவி மூலம், இப்போதைக்கு சிறிய இளைப்பாறுதல் மட்டுமே வோடஃபோனுக்கு கிடைத்திருக்கிறது. 

இதை வைத்துக்கொண்டு புதிய முதலீடுகளைத் திரட்டுவது, சேவையை மேம்படுத்தி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மற்றும் சராசரி வருமானத்தை (ARPU) உயர்த்துவது, 5G ஏலம், 5G-க்கான உள்கட்டமைப்புகள் என எதிர்காலத்திற்கு தயாராவது போன்றவைதான் அந்நிறுவனத்தைக் காப்பாற்றும்.

அதற்கு அந்நிறுவனம் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய.

BSNL போல, வோடஃபோனும் இனி அரசு நிறுவனமா?

இல்லை.. வோடஃபோன் ஐடியா இன்னமும் தனியார் நிறுவனம்தான். அதேசமயம் அதன் 35.8% பங்குகள் மட்டும் அரசுக்கு சொந்தமாகும்.

■ வோடஃபோன் (28.5%) மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்தை (17.8%) விட, அந்நிறுவனத்தில் அரசே பெரிய பங்குதாரராக இருந்தாலும்கூட, நிர்வாகம் மொத்தமும் வோடஃபோன் ஐடியா குழுமத்திடம்தான் இருக்கும். எனவே, அரசு வெளியிலிருந்து மட்டுமே வழிநடத்த முடியும்.

■ ``இதைத்தாண்டி, அரசே நிர்வாகத்தை நடத்த நினைப்பது சரியாக இருக்காது; இதற்கு முன்பு அப்படி அரசு நடத்தியவை, இன்று நல்ல நிலையில் இல்லை; எனவே அப்படி செய்யாமல் இருப்பதே நல்லது.” என்கின்றனர் நிபுணர்கள்.

■ எனவே, எதிர்காலத்தில் வோடஃபோன் ஐடியா மீண்டெழுந்தால், ஒரு பங்குதாரராக அரசுக்கு லாபம். நிறுவனத்திலிருந்தும் வெளியேறிவிடும். இல்லையெனில், டெலிகாம் துறைக்கும், அரசுக்கும் இந்த முயற்சிகள் சறுக்கல்தான்.

■ இதேபோல, அரசுக்கு செலுத்தவேண்டிய 850 கோடி ரூபாய்க்கு பதிலாக, சுமார் 9.5% பங்குகளை அரசுக்கு விட்டுத்தர முடிவு செய்துள்ளது மகாராஷ்டிராவைச் சேர்ந்த டாடா டெலிசர்வீசஸ். ``இப்படி பங்குகளைத் தர விருப்பமில்லை” எனச் சொல்லிவிட்டது ஏர்டெல்.

நன்றி: தி சப்ஜெக்ட் லைன்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews