தனியார் பள்ளிகளுக்கான நிரந்தர அங்கீகாரம் நிறுத்தம் :27 ஆண்டுக்கு முந்தைய அரசாணை மாற்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 19, 2021

Comments:0

தனியார் பள்ளிகளுக்கான நிரந்தர அங்கீகாரம் நிறுத்தம் :27 ஆண்டுக்கு முந்தைய அரசாணை மாற்றம்

'இனி புதிதாக எந்த தனியார் பள்ளிக்கும், நிரந்தர அங்கீகாரம் கிடையாது; மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, 27 ஆண்டுகளுக்கு முந்தைய அரசாணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் காகர்லா உஷா பிறப்பித்துள்ள அரசாணை: வழிகாட்டு முறை

கடந்த 1974 முதல், தனியார் சுயநிதி மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் நர்சரி பள்ளிகளுக்கு, பள்ளி கல்வி துறையால், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்தது. அதன்பின், 10 ஆண்டு களுக்கு மேலாக அங்கீகாரம் பெற்று இயங்கும் பள்ளிகளுக்கு, சில நிபந்தனைகளுடன் நிரந்தர அங்கீகாரம் வழங்க, 1994ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இதன்படி, மாணவர்களின் பாதுகாப்புக்கு ஏற்ற வசதிகள் உள்ள கட்டடம், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு துறைகளிடம் இருந்து பெறும் தகுதி சான்றிதழ்கள் அடிப்படையில் அங்கீகாரம் நீட்டிக்கப்படும்.

இதில் தவறுகள் கண்டறியப்பட்டால், அங்கீகாரம் எந்த நேரமும் ரத்து செய்யப்படும் என்ற விதிகள் பின்பற்றப்படுகின்றன.அதன்பின் பல இடங்களில் பள்ளிகளின் கட்டடங்கள், வகுப்பறைகளின் உள்கட்டமைப்பு வசதி பற்றாக்குறை மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தான பல சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பல்வேறு வழிகாட்டு முறைகளை அரசு அறிவித்தது.

கும்பகோணம் தீ விபத்து

ஒரு தனியார் பள்ளி வாகனத்தில் ஏற்பட்ட விபத்தில் மாணவி ஒருவர் பலியானார். இதையடுத்து, பள்ளி வாகனங்களுக்கு தனியாக சிறப்பு சட்டம், 2012ல் அமல்படுத்தப்பட்டது. ஒரு தனியார் பள்ளியின் நீச்சல் குளத்தில் மாணவர் ஒருவர் மூழ்கி இறந்ததையடுத்து, பள்ளிகளின் நீச்சல் குளங்களுக்கான சட்டம், 2015ல் கொண்டு வரப்பட்டது.இந்நிலையில், 1994ம் ஆண்டு சட்டத்தின்படி, தங்கள் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் எனக்கோரி, தனியார் பள்ளிகள் தரப்பில் 2016ல், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், இந்த பிரச்னை குறித்து ஆறு வாரங்களில் முடிவு எடுக்க உத்தரவிட்டது. இயக்குனர் கடிதம்

இந்நிலையில், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் அளித்துள்ள கடிதத்தில், 2004 ஜூலை 16ல் கும்பகோணத்தில் இயங்கிய ஸ்ரீகிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், தீ விபத்து நடந்த சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்தில், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் 94 குழந்தைகள் உயிரிழந்தன; 18 குழந்தைகள் மோசமான தீக்காயத்தால் பாதிக்கப்பட்டன. எனவே, நிரந்தர அங்கீகாரம் வழங்கும் அரசாணையை, மாணவர்களின் பாதுகாப்பு கருதி ரத்து செய்யுமாறு கோரியுள்ளார்.

அங்கீகாரம் மாற்றம்

இதைத் தொடர்ந்து இந்த அரசாணை பிறப்பிக்கப்படுகிறது.பழைய அரசாணையின்படி, ஏற்கனவே நிரந்தர அங்கீகாரம் பெற்ற பள்ளிகள், அரசு துறைகள் வழங்கும் தகுதி மற்றும் கட்டட உறுதி சான்றிதழ்களை முறையாக புதுப்பித்து, தொடர்ந்து தாக்கல் செய்யும் பட்சத்தில், அதன் நிரந்தர அங்கீகாரம் நீட்டிக்கப்படும். ஏற்கனவே நிரந்தர அங்கீகாரம் பெற்ற பள்ளிகளை தவிர, மற்ற தனியார் பள்ளிகளுக்கு இனி மூன்று ஆண்டுகளுக்கான தொடர் அங்கீகாரம் மட்டுமே வழங்கப்படும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews