அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 01, 2021

Comments:0

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி யூனியன் பிரதேசம், முறையாக கடந்த 1954ம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி விடுவிக்கப்பட்டு, இந்திய அரசுடன் இணைந்தது. இந்த நாளை ஆண்டுதோறும் புதுச்சேரி விடுதலை நாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வகையில் நிகழாண்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் விடுதலை நாள் விழா திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

முதல்வர் என்.ரங்கசாமி தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு முதல்வர் ஏற்றார். இதனைத்தொடர்ந்து முதல்வர் என். ரங்கசாமி விடுதலை நாள் விழா உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களில் சிறந்த மாநிலமாக புதுச்சேரி மாநிலம் விளங்கி வருகிறது. எனது அரசு பொறுப்பேற்ற 6 மாத காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாரட்டும் வகையில் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றி உள்ளது. அரசுத் துறைகளில் காலியாக உள்ள பத்தாயிரம் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

மூடப்பட்டுள்ள கூட்டுறவு நியாய விலைக்கடைகளை திறந்து பொருள்கள் விநியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும், புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை தரும் விதத்தில் சுற்றுலா உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 70% மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததே பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அச்சமோ, தயக்கமோ இல்லாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும், கரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிலையிலிருந்து ரூ.50 ஆயிரம் வழங்கல் திட்டம் கடந்த மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் கரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மேலும் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பண்டிகைகள் வருவதால் பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என முதல்வர் ரங்கசாமி கேட்டுக் கொண்டார். இந்த விழாவில் புதுவை சட்டப்பேரவை தலைவர் ஆர். செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சிவா, அமைச்சர்கள் ஏ நமச்சிவாயம், சாய் ஜெ. சரவணகுமார் மற்றும் எம்எல்ஏக்கள், தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார் உள்ளிட்ட அதிகாரிகள், தியாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews