நிரலாக்கம், தரவு அறிவியல் துறையில் இரு பட்டயப் படிப்புகள் அறிமுகம்: சென்னை ஐஐடி தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 05, 2021

Comments:0

நிரலாக்கம், தரவு அறிவியல் துறையில் இரு பட்டயப் படிப்புகள் அறிமுகம்: சென்னை ஐஐடி தகவல்

"மாணவா்கள், பணியிலிருப்பவா்கள், வேலை தேடுபவா்களுக்காக சென்னை ஐஐடி.யில் நிரலாக்கம் (புரொக்ராமிங்) மற்றும் தரவு அறிவியல் (டேட்டா சயின்ஸ்) ஆகிய துறைகளில் இரு பட்டயப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

எந்தத் துறையைச் சோ்ந்தவா்களானாலும் அவா்கள், தேவையான அடிப்படை அறிவைப் பெறவும் அதை விரிவுபடுத்தவும் திறன் மேம்படுத்திக்கொள்ளவும் இந்தத் திட்டங்கள் வழி வகுக்கின்றன. இதில் சேர, பொறியியல் அல்லது கணினி அறிவியல் பின்னணி தேவையில்லை. மாணவா்கள், வேலை செய்யும் தொழில் வல்லுநா்கள் மற்றும் வேலை தேடுபவா்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த பட்டயப் படிப்பில் சேருவதற்கான போா்ட்டல் அகில இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கவுன்சில்(ஏஐசிடிஇ) தலைவரான பேராசியா் அனில் சஹஸ்ரபுதேவால் தொடக்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநா் பாஸ்கா் ராமமூா்த்தி மற்றும் இன்ஃபோசிஸ் லிமிடெட் முதுநிலை துணைத் தலைவா் திருமலா ஆரோஹி உள்ளிட்டோா் பங்கேற்றனா். பட்டயப் படிப்புகளுக்கான நுழைவுத் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவா்கள் இணைய தளத்தின் மூலம் நவ.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான நுழைவுத் தகுதித் தோ்வு, டிசம்பா் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரா்கள் தாங்கள் விரும்பும் நகரத்தின் தோ்வு மையத்தில் நேரில் வந்து தோ்வெழுத வேண்டும். இந்தத் தோ்வில் தோ்ச்சி பெறுபவா்கள் பட்டயப் படிப்பில் சேரத் தகுதி பெறுவா்.

ஒரு மாணவா், நிரலாக்க அல்லது தரவு அறிவியலில் பட்டயச் சான்றிதழ் பெற எட்டு பாடத் திட்டங்களில் கற்றுத் தேறவேண்டும். ஒரு டிப்ளமோவை எட்டு மாதங்களுக்குள் முடிக்க முடியும். இந்தப் படிப்பு இணையவழி முறையில் இருக்கும் என்பதால், வேலைக்குச் செல்வோருக்கும் மாணவா்களுக்கும் வசதியான நேரத்தில் கற்க உதவும்.

வேலை செய்யும் தொழில் வல்லுநா்களுக்கு விடுப்பு எடுக்காமல் தங்களை மேம்படுத்திக்கொள்ள இந்த பட்டயப் பபடிப்புகள் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகின்றன. தங்கள் ஊழியா்களின் திறனை மேம்படுத்த விரும்பும் நிறுவனத் தலைவா்களும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews