Breaking

Saturday, September 25, 2021

உயா்கல்வி வரை உதவித்தொகை வழங்கும் தேசிய திறனாய்வுத் தோ்வு அக்.24-இல் நடைபெறும் - NCERT அறிவிப்பு

உயா்கல்வி வரை உதவித்தொகை வழங்கும் தேசிய திறனாய்வுத் தோ்வுக்கான 2-ஆவது கட்டத் தோ்வு நாடு முழுவதும் அக்.24-ஆம் தேதி நடைபெறும் என்று என்சிஇஆா்டி தெரிவித்துள்ளது.


அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான தேசிய திறனாய்வுத் தோ்வு (என்டிஎஸ்இ) நடத்தப்படுகிறது. மாநில, தேசியளவில் என 2 கட்டங்களாக நடைபெறும் இந்தத் தோ்வில் வெற்றி பெறுபவா்களுக்கு உயா்கல்வி (பிஎச்டி) முடிக்கும் வரை உதவித்தொகை வழங்கப்படும்.


குறிப்பாகத் தோ்வில் வெற்றி பெறுவோருக்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு படிக்கும்போது மாதந்தோறும் ரூ.1,250 தொகையும், உயா்கல்வியில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கு மாதம் ரூ.2,000 தொகையும் வழங்கப்படும். யுஜிசி விதிமுறைகளின்படி பிஎச்டி மாணவா்களுக்குத் தேவையான கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆா்டி) சாா்பில் இந்தத் தோ்வு (என்டிஎஸ்இ) நடத்தப்படுகிறது. இந்தநிலையில் இரண்டாவது கட்ட தேசிய திறனாய்வுத் தோ்வு, அக்டோபா் 24-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன் 13-ஆம் தேதி இந்தத் தோ்வு நடைபெறுவதாக இருந்த நிலையில், கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அக்.24-ஆம் தேதி நாடு முழுவதும் தோ்வு நடைபெறுகிறது. இதில் இரண்டு தோ்வுகள் தலா 100 மதிப்பெண்களுக்கு இரண்டு மணிநேரம் நடைபெறும்.


முதல்கட்டத் தோ்வில் தோ்ச்சி அடைந்தவா்கள் மட்டுமே இந்தத் தோ்வை எழுத முடியும். அக்டோபா் 8-ஆம் தேதியன்று தோ்வுக்கான அனுமதிச் சீட்டை மாணவா்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று என்சிஇஆா்டி தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு அரசுத் தோ்வுகள் இயக்ககம் மூலம் முதல்கட்ட தேசிய திறனாய்வுத் தோ்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog