ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக ரூ. 12 லட்சம் மோசடி: அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 15, 2021

Comments:0

ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக ரூ. 12 லட்சம் மோசடி: அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது

திருவள்ளூர் அருகே ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக தம்பதியிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த அரசு பள்ளி தலைமை ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான தனியார் மெட்ரிக் பள்ளி துணைமுதல்வரை தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ள அத்திமாஞ்சேரி பேட்டையைச் சேர்ந்தவர் நித்தியானந்தம் (32). இவரது மனைவி தேவிகா (30). தம்பதியரான இவர்கள் இருவரும் அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலையில் சேர முயற்சி செய்து கொண்டிருந்தனர். இது குறித்து அறிந்த திருவாலங்காடு ஒன்றியம் கோபாலகிருஷ்ணாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவரும், திருத்தணி அமிர்தபுரம், பஜார் தெருவைச் சேர்ந்தவருமான வெங்கடேசன் (52), திருத்தணி கெங்குசாமி நாயுடு மெட்ரிக் பள்ளியில் தற்காலிக துணை முதல்வராக பணியாற்றி வரும் டி.வி.வெங்கடேசன், ஆர்.கே.பேட்டை, செராத்தூர் காலனியைச் சேர்ந்த சிறுகுமி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் அருள் ஆகிய 3 பேரும் சேர்ந்து தம்பதியரை அணுகியுள்ளனர்.

அப்போது, தம்பதியரிடம் கல்வித்துறையில் பெரிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். அதனால், உங்களுக்கு அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். எனவே ஆசிரியர் பணி கிடைக்க வேண்டுமானால் ரூ.12 லட்சம் தரவேண்டும் என தெரிவித்தார்களாம். இதை உண்மையென நம்பிய நித்தியானந்தம் கடந்த 2019-இல் ரூ.12 லட்சத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட மேற்குறிப்பிட்ட 3 பேரும் நம்பும் வகையில் பணி நியமன ஆணையையும் வழங்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து பணியில் சேர முயற்சித்த போது போலியான பணி நியமன ஆணை என்பதும், ஏமாற்றப்பட்டதும் தெரியவந்தது. பின்னர், இது தொடர்பாக தம்பதியர் மேற்கண்ட 3 பேரிடமும் பணம் கேட்ட போது காலதாமதம் செய்து வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்கள் இருப்பிடத்திற்கு சென்று பார்க்கையில் தலைமறைவானதும் தெரியவந்தது. இதனால் பாதித்த தம்பதி இருவரும் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 12 லட்சம் பெற்று மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் செய்தனர்.

அதைத் தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில், சார்பு ஆய்வாளர் குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இதில் திருத்தணி அருகே பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியரான வெங்கடேசனை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கெங்குசாமி நாயுடு மெட்ரிக் பள்ளியின் துணை முதல்வர் வெங்கடேசன், சிறுகுமி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் அருள் ஆகிய 2 பேரை குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews