பள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 27, 2021

Comments:0

பள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4

பள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4

மாணவர்களின் தரமான கல்விக்கு பள்ளியின் கட்டமைப்பு வசதி, மின்சார வசதி, கணினி வசதி, நூலக வசதி, இணையதள வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்றவை யாவும் முறையாக இருக்க வேண்டியது அவசியம். கொரோனா பேரிடர் காலத்தில் இவற்றின் முக்கியத்துவம் உணரப்பட்ட சூழலில், டிஜிட்டல் வசதிகளில் இந்தியா மெதுவாகவே நகர்ந்து வருவது அரசின் ஆய்வறிக்கை மூலமே வெளிச்சமாகிறது.

மத்திய அரசு வெளியிட்ட 'கல்வி ப்ளஸ் ஒருங்கிணைந்த தகவல் முறை' (UDISE+) 2019-20' ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் 2012-13-ம் ஆண்டுகளில் 54.6 சதவிகிதமாக இருந்த மின்சார வசதிகள் கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கையானது, 2019-20-ம் ஆண்டுகளில் 83.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 100 சதவிகித பள்ளிகளில் மின்சார வசதிகள் இருந்தாலும், மணிப்பூர், மத்தியப் பிரதேசம், மேகாலயா, திரிபுரா போன்ற மாநிலங்களில் 60-க்கும், 30-க்கும் குறைவான சதவிகிதத்தில் மட்டுமே பள்ளிகளின் மின்சார வசதிகள் உள்ளன. மின்சார வசதிகளே இல்லாத நிலை இருக்கையில், இங்குள்ள பள்ளிகளில் கணினி வகுப்போ, இணைய தள வசதியோ இருக்கும் என்பது கேள்விகுறியாக இருக்கிறது. மேகாலயா மாநிலத்தை எடுத்துக் கொண்டால், அங்குள்ள 14,730 பள்ளிகளில் வெறும் 3,391 பள்ளிகளில் மட்டுமே மின்சார வசதிகள் உள்ளது தெரியவந்துள்ளது. சுமார் 76.98 சதவிகித பள்ளிகளில் மின்சார வசதி இல்லாத அவல நிலை இங்குள்ளது. இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு, டெல்லி, கோவா, புதுச்சேரி, பஞ்சாப், சண்டிகர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே 100 சதவிகித மின்சார வசதிகள் உள்ளன. பெற்றோர்கள் அதிகம் நாடிச்செல்லும் தனியார் பள்ளிகளில் 89.23 சதவிகித பள்ளிகளில் மட்டுமே மின்சார வசதிகள் இருப்பதாகவும் ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

தற்போதைய டிஜிட்டல் உலகில் கணினி, செல்போன், இணையதளம் இல்லாமல் எந்த ஒரு செயலும் நடைபெறுவதில்லை. எந்த ஒரு வகுப்பைச் சேர்ந்த மாணவருக்கும் கணினி, இணைய வசதி நிச்சயம் தேவைப்படுகிறது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை 2012-13-ம் ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகளில் மட்டுமே அதிகளவில் கணினி வசதி இருந்தது. காலத்திற்கு ஏற்ப தற்போதுதான் நகரம், கிராமம் என ஓரளவுக்கு அனைத்து பள்ளிகளிலும் கணினி வசதி வந்து விட்டது எனலாம். இருந்தாலும் 2012-13ம் ஆண்டுகளில் பள்ளிகளில் 22.2 சதவிகிதமாக இருந்த கணினி வசதிகள் 2019-20ம் ஆண்டுகளில் 38.5 சதவிகிதமாக மட்டுமே உயர்ந்துள்ளது. இந்தியாவில் சுமார் 9,26,617 பள்ளிகளில் கணினி வசதி இல்லாதது பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் தடையாக இருக்கும் என்பதை நிச்சயமாக கூற முடியும். இந்தியாவைப் பொறுத்தவரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமே அதிகளவு கணினி வசதிகள் உள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. அதாவது அரசுப் பள்ளிகளில் 30.03%, அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 62.97%, தனியார் பள்ளிகளில் 59.88%, மற்றவையில் 29.71% பள்ளிகளில் கணினி வசதி உள்ளது தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், இங்கு 78.06 சதவிகித பள்ளிகளில் கணினி வசதி உள்ளது. அதிகபட்சமாக சண்டிகர் மாநிலத்தில் 99.56% பள்ளிகளில் கணினி வசதியானது உள்ளது. இந்திய மாநிலங்களில் அசாம், பீகார், மத்திய பிரதேசம், மேகாலயா, திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் 20 சதவிகிதம் மட்டுமே கணினி வசதி இருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா பேரிடர் காரணமாக, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆன்லைன் கல்வியானது நடத்தப்பட்டு வருகிறது. தற்போது விரைவில் பள்ளிகள் திறப்பதற்கான சூழ்நிலையும் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், இணையதள வசதி தொடர்பான அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரியவந்துள்ளது. இந்தியாவில், சுமார் 77.7 சதவிகித பள்ளிகளில் இணையதள வசதி இல்லை என தெரிகிறது. 2012-13ம் ஆண்டு கணக்கின்படி, இந்தியாவில் உள்ள பள்ளிகளில் 6.2 சதவிகிதம் மட்டுமே இணையதள வசதிகள் இருந்துள்ளன. ஆனால், இந்த எண்ணிக்கை 2019-20 காலகட்டத்தில் 22.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் இந்த சதவிகிதமானது மிகவும் யோசிக்கத்தகுந்தது எனவே சொல்லலாம். அதிலும், அரசுப் பள்ளிகளில் வெறும் 11.58 சதவிகித இணைய வசதிகள்தான் உள்ளன. தனியார்ப் பள்ளிகளைப் பொறுத்தவரை 50.16 சதவிகித பள்ளிகளில் இணைய வசதிகள் உள்ளன.

தமிழ்நாட்டில் 31.95 சதவிகித பள்ளிகளில் இணைய வசதி உள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 78.06 சதவிகித பள்ளிகளில் கணினி வசதி இருந்தாலும், 31.95 சதவிகித பள்ளிகளில் மட்டுமே இணையவசதி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் 100 சதவிகித இணைய வசதி உள்ளது. அது, சண்டிகர். இங்கு, 99.56 பள்ளிகளில் சதவிகித கணினி வசதியும், அனைத்து பள்ளிகளிலும் இணைய வசதி உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews