அரசு பள்ளி ஆசிரியர்கள் மறுப்பு: கலெக்டர், கமிஷனரிடம் புகார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 12, 2021

Comments:0

அரசு பள்ளி ஆசிரியர்கள் மறுப்பு: கலெக்டர், கமிஷனரிடம் புகார்

அரசு பள்ளி ஆசிரியர்கள், தினமும் வேலைக்கு வர உத்தரவிட்ட கல்வி அதிகாரிகள் மீது, 'ஜாக்டோ - ஜியோ' சங்கங்கள் புகார் அளித்துள்ளன. மேலும், தினமும் வேலைக்கு வர, சங்க நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், ஜூன் 1 முதல், புதிய கல்வி ஆண்டு பணிகள் துவங்கின.அப்போது, கொரோனா ஊரடங்கு முழுமையாக அமலில் இருந்ததால், ஆசிரியர்கள் தினமும் சுழற்சி முறையில் மட்டும் பணிக்கு வந்தால் போதும் என, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் உத்தரவிட்டார்.

சுற்றறிக்கை

தற்போது, ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதால், பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட கல்வி பணிகளும் தீவிரமாகியுள்ளன. எனவே, தினமும் கல்வி பணிகளை மேற்கொள்ளவும், அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வர வேண்டும்.பள்ளியில் இருந்தவாறு, 'ஆன்லைன்' வகுப்புகளை நடத்த வேண்டும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.சி.இ.ஓ.,க்கள் மீது புகார்இந்த சுற்றறிக்கைக்கு, ஜாக்டோ - ஜியோவில் உள்ள ஆசிரியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.'கொரோனா தொற்று காரணமாக, ஆசிரியர்களின் உடல் நலன் பாதுகாப்பு கருதி, தினமும் பள்ளிக்கு வேலைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், ஆசிரியர்களை தினசரி வேலைக்கு வர உத்தரவிட்ட கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மீது, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமாரிடமும், அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடமும் புகார் அளித்துள்ளனர்.இதில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திர பானுரெட்டி, 'ஆசிரியர்கள் தினமும் வேலைக்கு வர வேண்டாம். ஏற்கனவே உள்ள உத்தரவுப்படி சுழற்சி முறையில் வரலாம்' என, அறிவுறுத்தியுள்ளார். மற்ற மாவட்டங்களிலும், ஆசிரியர் சங்கத்தினர் புகார் அளித்து விட்டு வேலைக்கு வர மறுத்துஉள்ளனர்.இந்த விவகாரம், பள்ளி கல்வித்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது. முற்றுப்புள்ளிஇது குறித்து பள்ளி கல்வி அலுவலர்கள் கூறியதாவது:மாநிலம் முழுதும் அரசின் பணிகள், 100 சதவீத அலுவலர்களுடன் நடந்து வருகின்றன. பள்ளி கல்வி அலுவலகங்களிலும் ஊழியர்கள் தினமும் பணிக்கு வருகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டும், தினமும் வேலைக்கு வர மறுத்துள்ளனர்.இதற்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், அரசு பள்ளியின் வளர்ச்சி பணிகள் பாதிக்கும்.சுழற்சி முறையில் தான் பணிக்கு வருவேன் என்றால், சம்பளத்தையும் சுழற்சி முறை நாட்களுக்கு மட்டுமே பெற்று கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர். நினைத்தது நடக்குமா?

அரசு பள்ளி ஆசிரியர்களின் நடவடிக்கைகளை பார்த்தால், முதல்வர் ஸ்டாலின் நினைத்தது போல், அரசு பள்ளிகளின் தரத்தையும், செயல்பாட்டையும் முன்னேற்ற முடியுமா என, சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மாதம், 90 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம்; கார், பைக், கம்ப்யூட்டர் வாங்கவும், திருமண செலவுக்கும், 14 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி; ஆண்டுக்கு, 210 நாட்கள் மட்டுமே வேலை; கோடை விடுமுறை, மருத்துவ விடுப்பு என, சலுகைகளை வாரி வழங்கினாலும், ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பணிக்கு வர மறுப்பது, அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews