சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் - விருப்பம் உள்ளவர்களுக்கு அழைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 03, 2021

Comments:0

சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் - விருப்பம் உள்ளவர்களுக்கு அழைப்பு

நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பில் பயிர் சாகுபடி செய்து லாபம் பெறும் வகையில் சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் கருவிகள் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் அதிகபட்சமாக சொட்டு நீருக்கு 1 ஹெக்டருக்கு ரூ.1,13,133 மானியமும், தெளிப்பு நீருக்கு 1 ஹெக்டருக்கு ரூ.36,176 மானியமும் வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில், சொட்டு நீருக்கு அதிகபட்சமாக 1 ஹெக்டருக்கு ரூ.87,880, தெளிப்பு நீருக்கு ரூ.28,101 மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் தோட்டக்கலைப் பயிர்களை அடங்கலில் பதிவு செய்வதுடன் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை, அடங்கல், கணினி சிட்டா, நில வரைபடம், சிறு, குறு விவசாயிகளாக இருப்பின் அதற்காக வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட சான்று ஆகிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுக வேண்டும். இத்திட்டத்தின் மூலம் பழச்செடிகள், காய்கறி பயிர்கள், வாசனை திரவியங்கள், மலைப்பயிர்கள், மலர்கள், மருத்துவ பயிர்கள் மற்றும் நறுமணப்பயிர்கள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் பயன் பெறலாம்.

மேலும், இத்திட்டத்தின்மூலம் நீர் சிக்கனம், உரம் சிக்கனம், கூலி ஆட்கள் குறைவு, சுலபமான களை மேலாண்மை, அதிகப்படியான மகசூல், வருவாய், தரமான விளை பொருட்கள் ஆகிய பயன்களை கொண்டுள்ளதால் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் மூலமாக எளிதாக பயன்பெறலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews