பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து - தமிழக அரசு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 05, 2021

Comments:0

பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து - தமிழக அரசு அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு.
மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலையின் காரணமாக பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் இப்பெருந்தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் செவ்வனே செய்து , அதில் வெற்றியும் பெற்று வருகிறது.
இந்நிலையில் , பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவர்களின் கல்வியிலும் , பாதுகாப்பிலும் மிகுந்த அக்கறை கொண்ட தமிழ்நாடு அரசு , பொதுத் தேர்வுகள் தொடர்பாக பல்வேறு தரப்பினரையும் கலந்து ஆலோசித்து தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக , ஒன்றிய அரசு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மூலம் ( CBSE ) பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு நடக்கவிருந்த பொதுத்தேர்வை ஏற்கெனவே ரத்து செய்துள்ளது. பல்வேறு மாநிலங்களும் இதே காரணத்திற்காக , தத்தமது மாநில பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்துள்ளன . இப்பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து , கடந்த மூன்று தினங்களாக பள்ளியளவில் தொடங்கி , மாவட்டம் மற்றும் மாநில அளவில் மாணவர்கள் , பெற்றோர்கள் , ஆசிரியர்கள் , ஆசிரியர் சங்கங்கள் , கல்வியாளர்கள் , பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் , ஊடகவியலாளர்கள் , பொது சுகாதாரம் மற்றும் உளவியல் நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் கருத்துக்கள் கவனமுடன் கேட்டறியப்பட்டன. பல்வேறு தரப்பினரும் பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ஆதரவாகவும் , மறுத்தும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தாலும் , அனைத்துத் தரப்பினரும் மாணவர்களின் உடல் மற்றும் மன நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக உள்ளனர். கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை , மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் தீவிரமாக இருந்து வருகிறது , இதைத் தொடர்ந்து மூன்றாவது அலையும் வர வாய்ப்புள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்போதுள்ள விதிகளின்படி , 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த இயலும் என்ற நடைமுறை இருப்பதால் அவ்வயதுக்குக் குறைவான , தடுப்பூசி போடப்படாத மாணவர்களை தேர்வு எழுத ஒரே நேரத்தில் வரச்செய்வது , தொற்றினை அதிகரிக்கச் செய்யலாம் என்றும் வல்லுநர்கள் அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
மாநில கல்வித் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மட்டுமே உயர்கல்வி வாய்ப்புகளுக்கான தகுதியாக கருதப்பட வேண்டும் என்ற கொள்கை நிலைப்பாட்டில் இந்த அரசு உறுதியாக இருப்பினும் , தேர்வினை மேலும் தள்ளிவைப்பது , மாணவர்களை மனதளவில் பாதிப்பிற்கு உள்ளாக்கும் என்று மருத்துவர்கள் கருதுவதால் , அவர்களது அறிவுரை மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் வரப்பெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில் , பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது . இந்நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு செய்ய , பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் தலைமையில் , உயர்கல்வித் துறை செயலாளர் , சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் , பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும் . இக்குழு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து , விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். இக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் , பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்களைக் கொண்டு மட்டுமே , தமிழகத்திலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும். பெருந்தொற்றின் காரணமாக , தமிழ்நாட்டில் பொதுத் தேர்வுகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் , அகில இந்திய அளவில் நடத்தப்படும் “ நீட் ” போன்ற நுழைவுத் தேர்வுகளை நடத்துவது உகந்ததாக இருக்காது என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது.
இது குறித்த அறிவிப்புகள் இதுவரை எதுவும் வெளிவராத நிலையில் , உயர்கல்விக்காக நடத்தப்படும் பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி , மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் , மாணவர்களின் உடல் நலன் மற்றும் மனநலனைக் கருத்தில் கொண்டு மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டாலும் , மாநில கல்வித் திட்ட அடிப்படையில் , உயர்கல்வி சேர்க்கை எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்யும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews