Breaking

Wednesday, February 17, 2021

தபால் வாக்கு விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தபால் வாக்குகள் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாக்காளர் பட்டியல் எப்போது அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக பதில் மனுத் தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் மூலம் வாக்களிக்க அனுமதியளித்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து திமுக மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணையில் உள்ளன. இந்த நிலையில், தபால் மூலம் வாக்களிக்க உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் தொகுதி வாரியான பட்டியலை வழங்கக் கோரி திமுக எம்எல்ஏவும், கட்சியின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (பிப்.17) விசாரணைக்கு வந்தது.

பாரபட்சமின்றி பணிவரன்முறை கவுரவ விரிவுரையாளர் வலியுறுத்தல்

அப்போது, நேரு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விடுதலை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதிகளின்படி, வாக்காளர் பட்டியலைப் பெற அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளதாகவும், அந்த வகையில் தபால் வாக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் தனிப் பட்டியலை வழங்க வேண்டும் எனவும், அப்போதுதான் சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு முன்கூட்டியே இந்த வசதி குறித்து விளக்கி, தேர்தல் நடைமுறைகள் நியாயமாக நடப்பதை உறுதி செய்ய முடியும் எனவும் வாதிட்டார். தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன், தேர்தல் அறிவித்த பிறகுதான், தபால் வாக்குகள் பதிவு செய்ய விண்ணப்பங்கள் வழங்கப்படும் எனவும், அந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்து தேர்தல் அதிகாரிகள் முடிவெடுப்பார்கள் எனவும், அதன் பிறகுதான் அப்பட்டியல் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

HM பதவி உயர்வு பட்டியல் பணி விபரம் சரிபார்க்க உத்தரவு

இதையடுத்து, தபால் வாக்குகள் பதிவு செய்ய எப்போது விண்ணப்பம் பெறப்படும், எப்போது அதன் மீது முடிவெடுக்கப்படும், எப்போது அந்தப் பட்டியல் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என விரிவாக எழுத்துபூர்வமான பதில் மனுவை பிப்ரவரி 19-ம் தேதி தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 22-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog