பகுதிநேர ஆசிரியர்களைச் சிறப்பு ஆசிரியர்களாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 09, 2021

Comments:0

பகுதிநேர ஆசிரியர்களைச் சிறப்பு ஆசிரியர்களாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!

கடந்த 10 ஆண்டுகளாக அரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியம் பெற்று பணிபுரியும் பனிரெண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த ஐந்து நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் போராட்டத்திற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். 'அனைவருக்கும் கல்வி திட்டத்தின்' கீழ் கடந்த 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் ரூ 5000 தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்களில் தற்போது 12917 பேர் மட்டுமே பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். 10 ஆண்டுகளை கடந்த நிலையிலும் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படாததால் இவர்களுக்கு காலமுறை ஊதியம் கிடைக்கவில்லை. ரூ 7700/ மட்டுமே தொகுப்பு ஊதியமாக பெற்று வருகின்றனர். இதனால் இவர்களின் குடும்பங்கள் மிகுந்த இன்னல்களைச் சந்தித்து வருகின்றன.
இவர்கள் பெரும்பாலும் ஏழை எளிய விவசாயக் குடும்பத்தை சார்ந்த முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆவர். தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென பலமுறை கல்வித் துறைக்கும் தமிழக அரசுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 2017-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய மூன்று மாதங்களில் கமிட்டி அமைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இந்நாள் வரையிலும் கமிட்டியும் அமைக்கப்படவில்லை அவர்களது கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. வாரத்தில் மூன்று அரை நாட்கள் மட்டுமே இவர்களுக்கு பணி வழங்கப்படுகிறது. இளங்கலை, முதுகலை பட்டதாரி பகுதிநேர ஆசிரியர்களான இவர்களுக்கு தனியார் துறை நிறுவனங்களில் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்படுகிற உரிமைகள் கூட வழங்கப்பட வில்லை என்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஆகவே, தமிழக முதலமைச்சர் அவர்கள் பகுதிநேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் அவர்களை உடனடியாக சிறப்பு ஆசிரியர்களாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்: தொல்.திருமாவளவன், நிறுவனர்-தலைவர், விசிக.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews