சிறு செயற்கைக்கோள் ஏவும் திட்டத்திற்கு விக்கிரமசிங்கபுரம் மாணவி தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 06, 2021

Comments:0

சிறு செயற்கைக்கோள் ஏவும் திட்டத்திற்கு விக்கிரமசிங்கபுரம் மாணவி தேர்வு

அம்பாசமுத்திரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு சாதனை நிகழ்வாக 100 சிறு செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தில் பங்கேற்க நெல்லையைச் சேர்ந்த மாணவி முத்து அபிராமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு பிப். 7 ஞாயிற்றுக்கிழமை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தயாரிக்கும் 100 சிறு செயற்கைக் கோள்கள் ஏவும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கிராமப்புறங்களில் உள்ள வெளியுலகில் அறியப்படாத திறமை மிகுந்த கிராமப்புற மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கத்தில் அனைத்திந்திய அளவில் கிராமப்புறங்களிலிருந்து ஆயிரம் மாணவர்கள், மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறு செயற்கைக்கோள் தயாரிக்கப் பயிற்சி வழங்கப்பட்டது. இதையடுத்து பலூன் மூலம் செலுத்தப்படும் ஃபெம்டோ எனப்படும் சிறு செயற்கைக்கோள்களை மாணவர்கள் தயாரித்தனர். சென்னை நல்லோர் வட்டம் அமைப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் குழுவில் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து விக்கிரமசிங்கபுரம், சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளி மாணவி முத்து அபிராமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 6 நாள்கள் செயற்கைக் கோள் தயாரிக்க பயிற்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து விவசாயம், சுற்றுச் சூழல், புவிவெப்பம், கதிர்வீச்சு ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் தயாரித்த 100 சிறு செயற்கைக் கோள்கள் பலூன் மூலம் ஞாயிற்றுக்கிழமை ஏவப்படுகிறது. இந்த நிகழ்வு உலக சாதனை பதிவு அமைப்பான கின்னஸ், இந்திய சாதனைப் பதிவு அமைப்பு, ஆசியா சாதனைப் பதிவு அமைப்பு உள்ளிட்டவை கண்காணித்து சாதனையாகப் பதிவு செய்யவுள்ளன. விக்கிரமசிங்கபுரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவி முத்து அபிராமி இந்திய அளவில் வெளியிடப்படும் மாணவர் கடமை என்ற மின்னிதழின் ஆசிரியராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முத்து அபிராமி தந்தை காசிவிஸ்வநாதன் மகள் விக்கிரமசிங்கபுரத்தில் சிறு விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews