வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கும் துணை மருத்துவப் படிப்புகள்; ஓர் அறிமுகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 25, 2020

Comments:0

வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கும் துணை மருத்துவப் படிப்புகள்; ஓர் அறிமுகம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அலோபதி, பல் மருத்துவம், சித்த மருத்துவம் உள்ளிட்ட ஆயுஷ் மருத்துவம் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகள் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகின. நாடு முழுவதும் தேர்வு எழுதிய 14 லட்சம் மாணவர்களில் மொத்தம் 7,71,500 பேர் (56.44%) தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு 48.57% ஆக தேர்ச்சி விகிதம் இருந்தது. இந்த ஆண்டு 8.87 சதவீதத் தேர்ச்சி அதிகரித்துள்ளது. அதாவது 2020-ம் ஆண்டில் 57.44% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். எனினும் நீட் தேர்வில் தேர்ச்சி என்பது மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி மட்டுமே. மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களைக் கொண்டு மட்டுமே கலந்தாய்வில் மருத்துவ இடம் உறுதி செய்யப்படும். இந்நிலையில் நீட் தேர்வில் இந்த முறை தோல்வி அடைந்த மாணவர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். மருத்துவப் படிப்புகளில் ஆர்வம் கொண்டோர், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (பிஎன்ஒய்எஸ்) எடுத்துப் படிக்கலாம். இதற்கு நீட் நுழைவுத் தேர்வு தேவையில்லை. அதேபோல நல்ல எதிர்காலத்தை அளிக்கக் கூடிய செவிலியர், ஃபார்மஸி படிப்புகள், மருத்துவ ஆய்வகப் பணியாளர் உள்ளிட்ட ஏராளமான துணை மருத்துவப் படிப்புகளும் உள்ளன. இதுகுறித்து அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவரும் மருத்துவருமான ரவி ஷங்கர் கூறியதாவது:
நீட் தேர்வின் மூலம் 2 சதவீத மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்குள் நுழைகின்றனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் கிடைக்கவில்லையென்றால் வேறு மருத்துவப் படிப்புகள் இல்லையென்றுதான் பெரும்பாலானோர் நினைக்கின்றனர். ஆனால், அவற்றைத் தாண்டி ஏராளமான படிப்புகள் குவிந்துகிடக்கின்றன. முதலாவதாக நர்ஸிங் படிப்புக்கு எப்போதுமே கூடுதல் வரவேற்பு உண்டு. மக்கள்தொகை தொடர்ந்து அதிகரிப்பதால், செவிலியர் தொழிலுக்கு எப்போதுமே தேவை அதிகம். அதேபோல வெளிநாடுகளிலும் நல்ல வேலைவாய்ப்பு உண்டு. இதற்கு பி.எஸ்சி நர்ஸிங் அல்லது எம்.எஸ்சி நர்ஸிங் படிக்க வேண்டும். டிப்ளமோ படிப்பையும் முடிக்கலாம். பி.எஸ்சி. படிப்புகளில் ரேடியோதெரபி, ரேடியாலஜி, கார்டியாக் டெக்னாலஜி, க்ரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி, டயாலிசிஸ் டெக்னாலஜி, ரெஸ்பிரேட்டரி தெரபி, ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி உள்ளிட்ட ஏராளமான பிரிவுகள் உள்ளன. இந்தப் படிப்புகளை அரசுக் கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் படிக்க முடியும். பார்மஸி
பார்மஸி எனப்படும் மருந்தியல் படிப்புகளுக்கும் தேவை அதிகம். இதில் இளங்கலைப் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பைப் படிக்கலாம். சொந்தமாக மருந்தகங்களை வைக்க இப்படிப்பு கட்டாயம். இதுதவிர்த்து மருந்து விற்பனைப் பிரதிநிதி, மருந்தகங்களில் பணி, அரசு, தனியார் மருத்துவமனைகளில் மருந்தாளுநர் வேலை ஆகியவற்றை இப்படிப்புகள் மூலம் பெறலாம். வெளிநாடுகளில் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் தொடர்பான வேலைகளுக்கும் இப்படிப்பு உதவும். அதேபோல டெக்னீஷியன் தொடர்பான படிப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நல்ல எதிர்காலம் உண்டு. எக்கோ கார்டியோ கிராபி, கீமோ டயாலிசிஸ் ஆகியவற்றில் டெக்னீஷியன் படிப்பை முடித்தால் முறையே இதய நிபுணர், சிறுநீரக நிபுணர்களுக்கு உதவியாளராகப் பணியாற்றலாம். வருங்காலத்தில் இத்தகைய படிப்புகளுக்குத் தேவை அதிகமாகி விடும். துறைசார் நிபுணத்துவம் தேவை என்பதாலேயே இதுதொடர்பாகப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மயக்கமருந்தியல், ஆய்வகவியல், தியேட்டர் உதவியாளர், இசிஜி, ரேடியாலஜி, லேபராட்டரி டெக்னாலஜி ஆகியவற்றில் டிப்ளமோ படிப்பு முடித்தால் அந்தந்தத் துறை சார் மருத்துவர்களுக்கு உதவியாளராகவும் ஆய்வகங்களிலும் பணியாற்ற முடியும். இவற்றுக்கு அரசுப் பணிவாய்ப்புகளும் உண்டு. ஆப்டோமெட்ரி அதேபோல கண்கள் தொடர்பான டிப்ளமோ படிப்பான ஆப்டோமெட்ரியைப் படிப்பவர்கள், கண்களைப் பரிசோதிப்பது, குறைபாடுகளைக் கண்டறிவது போன்றவற்றில் ஈடுபடுவார்கள். கண் மருத்துவம் பெரும்பாலும் அனைத்து மருத்துவமனைகளிலுமே இருப்பதால் தேவை அதிகமாக உள்ளது. இவர்கள் கண் மருத்துவர்களுக்கு உதவியாளர்களாகவும் பணியாற்றலாம்.
உயிரி தொழில்நுட்பவியல்
இதுதவிர்த்து உயிரி தொழில்நுட்பவியல் (பயோ டெக்னாலஜி) துறையையும் நிறையப் பேர் தேர்ந்தெடுக்கின்றனர். புது நோய்களுக்கு மருந்து, தடுப்பூசியைக் கண்டுபிடிப்பது உள்ளிட்ட ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட வேண்டியிருக்கும். தற்போது வேகமாக வளர்ந்து வரும் துறையில் இதுவும் ஒன்று''. இவ்வாறு மருத்துவர் ரவி ஷங்கர் தெரிவித்தார். பிற படிப்புகள்
துணை மருத்துவப் படிப்புகளைத் தாண்டி மருத்துவ உளவியல், பிசியோதெரபி, நியூட்ரிஷியன் உள்ளிட்ட பட்டப் படிப்புகளையும் எடுத்துப் படிக்கலாம். இந்தப் படிப்புகளுக்கு அரசுப் பணி கிடைக்கவும் வாய்ப்புண்டு. இவற்றைத் தவிர பயோமெடிக்கல் இன்ஜீனியரிங், மரபணுவியல் தொடர்பாகவும் படிக்கலாம். இவற்றுக்கு வெளிநாடுகளிலும் ஆராய்ச்சிப் பணி நோக்கிலும் அதிக வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. மாணவர்கள் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் படித்தால் மருத்துவத் துறை என்றில்லை, எந்தத் துறையிலும் ஜொலிக்கலாம்.
க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு ramaniprabhadevi.s@hindutamil.co.in 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews