வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பு பெற்ற மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அன்புமணி இன்று (செப். 27) வெளியிட்ட அறிக்கை:
"தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் பட்டப்படிப்பு இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்துவதில் நிகழ்ந்த குளறுபடிகள் காரணமாக, வெளிநாடுகளில் உயர்கல்வி கற்க வாய்ப்பு கிடைத்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தேர்வுகளை நடத்துவதில் நடந்த குழப்பங்களுக்குத் தீர்வு காண அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரம் மாணவர்களின் உயர்கல்வி கனவு கருகிவிடும்.
இந்தியாவைச் சேர்ந்த, குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்வது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பாவின் பிற நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் மழைக்கால பருவப் படிப்புகளில் சேர தமிழகத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இறுதிப் பருவத் தேர்வு இல்லாமல், அதற்கு முந்தைய பருவத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களுக்கு மாணவர் சேர்க்கை கிடைத்துள்ளது. அவர்கள் முதல் பருவத்திற்கான கட்டணத்தையும் ஏற்கெனவே செலுத்தி விட்டனர்.
அக்டோபர் பிற்பகுதியில் வகுப்புகள் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு ஒரு வாரம் முன்னதாக அவர்கள் இறுதிப் பருவத் தேர்வுகளில் வெற்றி பெற்று, தற்காலிகப் பட்டச் சான்றிதழ்களை (Provisional Certificate) தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அவர்களின் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுவிடும்.
அதுமட்டுமின்றி, வெளிநாடுகளில் படிக்க இடம் கிடைத்த மாணவர்கள் விசா உள்ளிட்டவற்றைப் பெறவும் தற்காலிகப் பட்டச் சான்றிதழ்கள் அவசியம் ஆகும். ஆனால், மாணவர் சேர்க்கை, விசா அனுமதி உள்ளிட்ட அனைத்தும் சாத்தியமாகுமா? என்பது தெரியாமல் தமிழ்நாட்டு மாணவர்கள் பதற்றத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இறுதிப் பருவத் தேர்வுகள் தொடங்கிவிட்டன. பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களில் இம்மாத இறுதிக்குள்ளாகவும், சில பல்கலைக்கழகங்களில் அடுத்த மாதத் தொடக்கத்திலும் இறுதிப் பருவத் தேர்வுகள் நிறைவடையவுள்ளன. இந்தத் தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்பதைப் பொறுத்தே மாணவர்களின் உயர்கல்வி எதிர்காலம் அமையும்.
அக்டோபர் மாதம் 5-ம் தேதிக்குள் இறுதிப் பருவத் தேர்வுகளின் முடிவுகளை வெளியிட்டு, தற்காலிகப் பட்டச் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கினால் மட்டும்தான் அவர்களின் வெளிநாட்டு உயர்கல்வி கனவு சாத்தியமாகும். இதைச் சாத்தியப்படுத்துவது கடினமானது அல்ல.
பெரும்பான்மையான பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில்தான் இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்துகின்றன. அவற்றின் முடிவுகளை ஒரு சில நிமிடங்களில் தொகுத்துப் பட்டியலிட்டு விடலாம்.
சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்கள் விடைத்தாளில் தேர்வு எழுதும் முறையில் தேர்வை நடத்துகின்றன. அத்தேர்வுகளின் விடைத்தாள்களை விரைந்து திருத்தி முடிவுகளை அறிவிப்பதுதான் சற்று சவாலான விஷயம் ஆகும்.
அந்தப் பல்கலைக்கழகங்களிலும் 90% மாணவர்கள் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து அனுப்பும்படி பணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதால் பல்கலைக்கழக நிர்வாகங்கள் நினைத்தால், விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளை உடனடியாகத் தொடங்கவிடலாம்.
அவ்வாறு செய்வதன் மூலம் தேர்வுகள் முடிந்த சில நாட்களில் முடிவுகளை அறிவித்து, அடுத்த சில நாட்களில் தற்காலிகப் பட்டச் சான்றிதழ்களை ஆன்லைன் முறையில் அனுப்பினால் கூட, மாணவர்கள் வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.
ஒருவேளை அக்டோபர் 5-ம் தேதிக்குள் தற்காலிகப் பட்டச் சான்றிதழ் வழங்கப்படாவிட்டால், வெளிநாடு சென்று உயர்கல்வி கற்க தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பட்டியலிட முடியாதவையாகும்.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பு பெற்ற மாணவர்கள் நடப்புப் பருவத்தில் சேரத் தவறினால் ஓராண்டு படிப்பை இழக்க நேரிடும்; மேலும், அடுத்த ஆண்டில் புதிதாகப் பட்டம் பெறுவோருக்கு மட்டும்தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால், இப்போது உயர்கல்வி கற்க வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு இந்த வாய்ப்பு மறுக்கப்படலாம். அதனால் அவர்களின் உயர்கல்வி கனவு கருகிவிடக் கூடும்.
அதுமட்டுமின்றி, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்க இடம் கிடைத்த மாணவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட நாடுகளின் வங்கிகளில் கணக்குத் தொடங்கி ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கி வைப்பீடு செய்துள்ளனர். அதற்காக அவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி விடும்.
இதற்கெல்லாம் மேலாக அனைத்து மாணவர்களும் முதல் பருவக் கட்டணமாக லட்சக்கணக்கில் பணம் செலுத்தியுள்ளனர். இடம் கிடைத்த மாணவர்கள் குறித்த காலத்திற்குள் சேரவில்லை என்றால் அவர்கள் செலுத்திய கட்டணத்தைத் திரும்பப் பெற முடியாமல் போய்விடும்.
அதேபோல், உயர்கல்வி கற்பதற்காக Clarendon Scholarship of Oxford, Erasmus Mundus scholarship of EU, Adelaide Scholarship of Australia போன்ற கல்வி உதவித்தொகையை இழக்க நேரிடும். இதுபோன்ற இழப்புகளை பல ஏழை மாணவர்களின் குடும்பங்களால் தாங்க முடியாது.
எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் அக்டோபர் முதல் வாரத்திற்குள் இறுதிப் பருவத் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்; தற்காலிகப் பட்டச் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். அதன் மூலம் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பு பெற்ற மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்க வேண்டும்".
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.