கல்விமுறையினை முழுமையாக மாற்றியமைத்தல் என்பது நீண்ட காலம் தாமதமாகிவிட்ட நிலையில், இந்தியா உலக அளவில் வல்லரசாக உருவெடுக்க உள்ள சரியான சந்தர்ப்பத்தில், இந்தப் புதிய கல்விக் கொள்கை வெளிவந்துள்ளது.
ஒரு கல்விக் கொள்கையின் வெற்றி வகுப்பறையில் தான் நிர்ணயிக்கப்படும். இதுவரை கல்வி முறை பல்வேறு பங்குதாரர்களை மையமாகக்கொண்டு, மாணவர் சமூகத்தைப் புறக்கணித்து, நிறைய குழப்பங்களை உருவாக்கி இருந்தது.
புதிய தேசிய கல்விக் கொள்கையானது அதன் உண்மையான பங்குதாரர்களான மாணவர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்வதற்காக இறுதியாக அதன் அமைப்பை மாற்றிக் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த கல்விக்கொள்கை ஆசிரியர்கள் மீது நம்பிக்கையும், எதிர்ப்பார்ப்பையும் வைத்துள்ளது. இது மாற்றத்தை உண்மையிலே உள்ளார்ந்ததாகவும், பொருளுள்ளதாகவும் ஆக்குகிறது.
கற்றல், கற்பித்தல்
சமீபத்திய கற்றல் கற்பித்தல் உத்தியில் வந்துள்ள புதுமைகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பையும் பயிற்சியையும் ஆசிரியர்களுக்கு வழங்குகிறது. விமர்சன சிந்தனை, விசாரணை அடிப்படையிலான சிந்தனை கொண்ட சிறந்த ஆசிரியர்களை உருவாக்க பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்ட நான்காண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சி அளிக்கிறது. இதன்மூலம் திறமையான ஆசிரியர் சமூகம் உருவாகும் என்று நம்பிக்கையை தருகிறது.
கல்வி கொள்கை ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல், ஆசிரியர் பயிற்சி மற்றும் தொடர்ச்சியான கற்றல் ஆகியவற்றிற்கான வாய்ப்பு களை வழங்குவதற்கு வலுவான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. திறமையானவர்களை ஊக்குவிக்க நிறுவன தலைமைத்துவத்தை நோக்கி ஆசிரியர்களை நகர்த்துவதன் மூலம், தொழில்வளர்ச்சிக்கான உண்மையான பாதையை உருவாக்கியுள்ளது
இதன் மற்றொரு சிறப்பம்சம்.ஆசிரியர்களின் தொழில்திறன் ,தகுதியின் அடிப்படையில் ஆசிரியர்களின் இயக்கத்திறனை ஊக்குவிக்கும் வகையில் தலைமைப்பண்பு மற்றும் மேலாண்மைத் திறன் கொண்ட ஆசிரியர்களுக்கு கல்வி சார்ந்த அரசு துறைகளில் தலைமைப் பெறுவதற்கான பயிற்சி அளிப்பதன் மூலம் ஆசிரியர்களின் தொழில் திறன் மதிக்கப்படும் என்கிறது இக்கல்விக்கொள்கை.
இக்கல்விக் கொள்கை கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆசிரியர்களுக்கு உள்ளூர் வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது. கிராமப்புறத்தில் சேவைபுரியும் ஆசிரியர்களுக்கு ஊக்கதொகை, வீட்டு வாடகைப்படி உயர்த்தி தரும் எனக் கூறுகிறது. டிரான்ஸ்பர் கேட்டு விண்ணப்பிக்க அவசியம் அளிக்காத இந்தக்கல்விக் கொள்கையை ஆசிரியர்கள் வரவேற்கின்றனர்.
பொருளாதரத்தில் பின் தங்கியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத்தொகை, கல்வி உதவித்தொகை, பள்ளிச் சென்று வருவதற்காக மிதிவண்டிகள் எனும் பல்வேறு வெற்றிகரமான திட்டங்கள் பலப்படுத்தப்படும் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
மும்மொழிக் கொள்கை
இக்கல்விக் கொள்கை மும்மொழிக் கொள்கை செயல்படுத்துவதில் மிகுந்த நெகிழ்வுத் தன்மை கடைப்பிடிக்கப்படும் என்கிறது. எந்த ஒரு மொழியும் மாநிலத்தின் மேல் திணிக்கப் படாது. மும்மொழி கற்றல் என்பது மாநிலம் , மண்டலம், மற்றும் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப மொழிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதேப்போல் மாணவர்கள் தான் கற்கும் மொழியில் ஒன்று அல்லது மேற்பட்ட மொழிகளை மாற்றிக்கொள்ள நினைக்கும் பட்சத்தில் 6 ம் அல்லது 7 ம் வகுப்பில் மாற்றிக்கொள்ளலாம் என்பது போன்ற உறுதி மொழி களை அளிப்பதால் மும்மொழிக் கொள்கை ஏற்றுக் கொள்வதாக உள்ளது.
அறிவியல், கணிதப்பாடங்களின் பாடப்புத்தகங்கள் இருமொழி களில் அமைந்திருக்கும் என்பது வரவேற்கத்தக்கது. இந்திய சைகை மொழி நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியாக வரையறுக்கப்படும் என்பதுடன், பிராந்திய சைகை மொழிகள் கற்றுக்கொடுக்கப்படும் என்பது கேட்கும் திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு வரபிரசாதம் ஆகும்.
டிஜிட்டல் கல்வி
புதிய கல்விக் கொள்கை டிஜிட்டல் மற்றும் தொலைதுாரக் கற்றலில் கவனம் செலுத்துகிறது. அதன்வழியாக மொத்த சேர்க்கை விகிதத்தை 50% வரை அதிகரிக்கிறது. குழந்தை திருமணம் (குறிப்பாக பெண் குழந்தைகள்) மற்றும் குழந்தைத் தொழிலாளர் போன்ற பள்ளியை விட்டு வெளியேறுவதற்கான காரணங்கள் கொள்கையில் கவனிக்கப்படவில்லை. திறந்தவெளி தொலை துாரக் கற்றல் படிப்புகளின் வேலைவாய்ப்பு பற்றிய தெளிவு இதில் இல்லை என்ற குறைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதற்கான தெளிவை விரைவில் பின் இணைப்பாக வழங்கும் என்று எதிர்பார்ப்பு உண்டு. கிராமங்களில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு போதிய அளவில் இல்லாததது, ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களை மேலும் பிரிக்க வழிவகுக்கும். பள்ளி கல்வித் துறையின் ஒருங்கிணைந்த மாவட்ட தகவலின் படி 9.85% அரசு பள்ளிகளில் கணினி மற்றும் 4.09% பள்ளிகளில் இணைய இணைப்பு உள்ளது. ஆனால் புதிய கல்விக் கொள்கை, ஆன்லைன் கல்வியின் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறது. இதனை சரிசெய்ய வலுவான உள்கட்டமைப்பு உருவாக வேண்டும்.
அதற்கான நிதியை உறுதி செய்யும் வகையில், புதிய கல்வி கொள்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% கல்விக்குச் செலவிட பரிந்துரைக்கிறது.கற்றலுக்கான சூழல்தேசிய கல்வி கொள்கையின் மற்றுமொரு நல்ல விஷயம் என்னவெனில் பல்கலைகளுடனான இணைப்பு முறை படிப்படியாக அகற்றப்படும். இதனால் நிறுவனங்கள் தாங்களாகவே பட்டங்களை வழங்கலாம் என்பதாகும். நம் பண்டைய பல்கலைகளின் மீது நம்பிக்கை கொண்ட இக்கொள்கை, பிறநாடுகளில் இருந்து பல்கலைகளை அழைப்பதை விட நமது பல்கலைகளை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.
நமது உள்நாட்டு ஆராய்ச்சி, உள் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். கற்றலுக்கான வலுவான சுற்றுச்சூழலை உருவாக்க வேண்டும். இதனால் உலக கல்வியின் தனித்தன்மையில் இந்தியா தனக்கான சரியான இடத்தை மீட்டு எடுப்பதை உறுதி செய்யும்.கட்டாய இலவசக் கல்வி உரிமைச்சட்டம் 12ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் என்பதால் இக்கொள்கை பள்ளிச் செல்லும் அனைத்து குழந்தைகளின் கல்விக்கு உறுதியளிக்கிறது.
இருப்பினும் மோசமான உள்கட்டமைப்பு, மோசமான ஆராய்ச்சி வசதிகள், ஆசிரியர்களின் பற்றாக்குறை, சுகாதாரமற்ற அரசு பள்ளிகள், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இடைநிற்றல் போன்ற உண்மையான பிரச்னைகளையும் இது தவறவிடக்கூடாது. சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள், கணிதவியலாளர்கள், விஞ்ஞானிகள் போன்றோர்களை பெற்ற ஒரு நாடு என்ற வகையில், கல்வியின் உண்மையான பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசை திருப்ப ஒரு கவனச்சிதறலாக அல்லாமல், இக்கல்விக் கொள்கையானது இந்தியா இழந்த பீடத்தை மீட்டெடுக்க ஒரு மைல்கல்லாக இருக்க வேண்டும்.
இந்த அரசு அதற்கான உறுதியை வழங்கும் என்ற நம்பிக்கையில், மகத்தான இக்கல்விக் கொள்கை வரவேற்கதக்கதே.
-க.சரவணன்,
கல்வியாளர்மதுரை. saran.hm@gmail.com
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.