கல்லூரிக் கனவில் காத்திருக்கும் மாணவர்கள்: பைசா செலவில்லாமல் படிக்க வைக்கும் மாற்றம் அறக்கட்டளை- எப்படி விண்ணப்பிக்கலாம்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 27, 2020

கல்லூரிக் கனவில் காத்திருக்கும் மாணவர்கள்: பைசா செலவில்லாமல் படிக்க வைக்கும் மாற்றம் அறக்கட்டளை- எப்படி விண்ணப்பிக்கலாம்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்வி என்ற செல்வத்தை மட்டும் யாராலும் அழிக்க முடியாது என்பது சான்றோர் வாக்கு. இந்தக் கரோனா சூழலில் கல்வி என்ற அடிப்படைத் தேவையைக் கூட நிறைவேற்ற முடியாமல் பல்வேறு குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். மாணவர்களிடம் திறமை, உழைப்பு, அறிவு ஆகிய அனைத்தும் இருந்தும்கூடப் பொருளாதாரம் என்ற ஒற்றைக் காரணியால் உயர்கல்வி தடைபடுவதைக் கண்கூடாகக் காண முடிகிறது. குறிப்பாகப் பெண் குழந்தைகள் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே பல்வேறு அறக்கட்டளைகள் மாணவர்களின் கல்லூரிப் படிப்புக்காக உதவித் தொகை வழங்கி வருகின்றன. இந்நிலையில் 'மாற்றம்' என்னும் அறக்கட்டளை யாரிடமும் ஒரு பைசா கூட நன்கொடை பெறாமல், மாணவர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்காமல் படிக்க வைத்து வருகிறது. தமிழகம், பெங்களூரு, டெல்லியில் உள்ள பல்வேறு கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் இலவச சீட்டுகளைப் பெற்று இதைச் சாத்தியமாக்கியுள்ளது 'மாற்றம்'. இதுகுறித்து அறக்கட்டளையின் நிறுவனரும் தன்னம்பிக்கைப் பேச்சாளருமான சுஜித் குமார் 'இந்து தமிழ்' இணையத்திடம் விரிவாகப் பேசினார். ''2013-ல் மதுரையில் ஒரு நிகழ்வில் பேசியபோது நான்கு வீடுகளில் வீட்டு வேலை செய்துகொண்டே 12-ம் வகுப்பில் 1,154 மதிப்பெண்கள் பெற்ற மாணவியைப் பார்த்தேன். அவருக்கு உதவ ஆசைப்பட்டு, வழக்கமாக நான் பேசும் கல்லூரியில் இலவசமாக சீட் கேட்டேன். ஒரு சீட்டுக்குப் பதிலாக 20 சீட்டுகள் கிடைத்தன. அப்போது தொடங்கிய பயணம் இன்று மாற்றம் அறக்கட்டளையாக, 900-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் வெற்றிகரமாகச் சென்று கொண்டிருக்கிறது. கரோனா காலத்தில் பெரும்பாலான மக்கள் பொருளாதார ரீதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோலக் கல்லூரிகளில் போதிய இடங்கள் இருந்தும் அதுகுறித்த தகவல் கிராமப்புற மாணவர்களுக்குச் சென்று சேர்வதில்லை. என்னிடம் மதிப்பெண்கள் இருக்கின்றன. ஆன்லைன் வகுப்புகளுக்கோ, கல்லூரியில் சேரவோ வழியில்லை என்னும் மாணவர்கள் எங்களை அணுகலாம்.
யாருக்கு இலவச சீட்டுகள்?
பெற்றோர் இல்லாத குழந்தைகள், தாய்/ தந்தை இல்லாதவர்கள், பெண் குழந்தைகள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். மாணவர்களின் பின்னணி அனைத்தும் ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு வைத்து அவர்களைத் தேர்ந்தெடுத்து, படிக்க வைக்கிறோம். திறமையான மாணவர்களுக்கு இளங்கலை பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகள், நர்சிங் படிப்புகளை இலவசமாகக் கற்க வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறோம். சாய்ராம் கல்லூரி, வேல்டெக், எம்ஜிஆர் ஜானகி கல்லூரி, இந்துஸ்தான், ஜேப்பியார், கலசலிங்கம் பல்கலைக்கழகம், கற்பகம் பல்கலைக்கழகம், எஸ்ஆர்எம், குமரகுரு கல்லூரி, நேரு கல்லூரி, சோனா கல்லூரி, விவேகானந்தா, எஸ்விஎஸ் உள்ளிட்ட 37 கல்லூரிகள் எங்களுக்கு இலவச சீட்டுகளை வழங்கியுள்ளன. கல்விக் கட்டணத்துடன் மாணவர்களுக்கான போக்குவரத்துக் கட்டணம், விடுதி, உணவுக் கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்தும் அவர்கள் படித்து முடிக்கும்வரை இலவசம். அறக்கட்டளையில் நாங்கள் தேர்வு செய்து படிக்க வைக்கும் மாணவர்கள் முதலிடம் பெற்று, எங்களுக்கும் அவர்கள் படிக்கும் கல்லூரிக்கும் பெருமை தேடித் தருகின்றனர். இதனால் கல்லூரிகள் எங்களுக்கு இலவச சீட்டுகளை வழங்குவதில் ஆர்வமாக இருக்கின்றன. ஆண்டுதோறும் எங்களுக்குக் கிடைக்கும் இலவச இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது'' என்று பெருமிதம் கொள்கிறார் சுஜித் குமார். அறக்கட்டளையால் படிக்க வைக்கப்படும் மாணவர்களுக்கு வார இறுதி நாட்களில் சிறப்பு வேலைவாய்ப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பயிற்சி வகுப்புகளை மாற்றம் அறக்கட்டளை நபர்களோடு, பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் சிறப்பு வல்லுநர்கள் இணைந்து நடத்துகின்றனர். இதன்மூலம் மாணவர்களின் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. மாற்றம் அறக்கட்டளையால் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்து மேலும் பேசும் சுஜித்குமார், ''4 வீடுகளில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த பெண் இன்று பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார். கண் பார்வையற்ற பெண், சர்வதேசப் பள்ளியில் ஆசிரியராக மாறியுள்ளார். 4 ஆண்டுகள் தினந்தோறும் 16 கி.மீ. நடந்து பள்ளிப் படிப்பை முடித்தார் மலை கிராம சிறுமி ராணி தேவி. அவரைப் படிக்க வைத்து பன்னாட்டு நிறுவனத்தில் வேலை வாங்கிக் கொடுத்ததால் அதே கிராமத்தைச் சேர்ந்த 36 மாணவிகள் தற்போது உயர்கல்வி படிக்கின்றனர். அறக்கட்டளை மூலம் இதுவரை 935 மாணவர்கள் படித்து முடித்து/ படித்து வருகின்றனர். தற்போது உண்மையிலேயே தகுதிவாய்ந்த, திறமையான மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அத்தகைய மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்ற 'மாற்றம்' காத்திருக்கிறது'' என்றார் நிறுவனர் சுஜித் குமார்.
கூடுதல் விவரங்களுக்கு: 9551014389
மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி: https://www.maatramfoundation.com/admissions/ 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews