புதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது? - பகுதி 2 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 04, 2020

Comments:0

புதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது? - பகுதி 2

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதிய கல்விக் கொள்கையின் முதலாவது பகுதி பள்ளிக் கல்வியைப் பற்றியது. தற்போது நடைமுறையில் இருக்கும் 10 2 முறைக்கு மாற்றாக, 5 3 3 4 என்ற புதிய முறையை இது அறிமுகப்படுத்துகிறது. 10 2 முறையில் ஆறு வயது வரையிலான பாலர் பள்ளிகள் கணக்கில் கொள்ளப்படவில்லை. ஆனால், புதிய கல்விக் கொள்கையானது மூன்று வயதிலிருந்தே ஆரம்பக் கல்வி தொடங்கப்பட வேண்டும் என்கிறது. மூன்று வயதிலிருந்து ஆறு வயது வரையிலான பாலர் பள்ளியையும், ஆறு வயதிலிருந்து எட்டு வயது வரையிலான முதல், இரண்டாம் வகுப்புகளையும் உள்ளடக்கியதாக அடிப்படைக் கல்விக்கு ஐந்தாண்டு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையிலான மூன்றாண்டுகள் ஆயத்தக் கல்வி எனவும், ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையிலான மூன்றாண்டுகள் நடுநிலைக் கல்வி எனவும், ஒன்பதாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான நான்காண்டுகள் உயர்நிலைக் கல்வி எனவும் இனி மாற்றியமைக்கப்படும்.

மூன்று வயதில் அடிப்படைக் கல்வி

பள்ளிக் கல்வி பற்றிய முதல் பகுதியானது எட்டு அத்தியாயங்களை உள்ளடக்கியது. முதலாவது அத்தியாயம், குழந்தைகள் நலம்பேணுதல் மற்றும் கல்வி பற்றியது. குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் 85%-க்கும் அதிகமான வளர்ச்சி ஆறு வயதுக்கு முன்பே ஏற்பட்டுவிடுகிறது என்ற நரம்பியல் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு இளம் குழந்தைகளின் நலம்பேணுதல் மற்றும் கல்வி பேசப்படுகிறது. கற்றல் செயலில் அடிப்படையாக இந்தப் பருவம் முன்னிறுத்தப்படுகிறது. தற்போது சமூகப் பொருளாதார அளவில் பின்தங்கியிருக்கும் கோடிக்கணக்கான குழந்தைகள் அடிப்படைக் கல்விக்கான வாய்ப்பில்லாமல் இருக்கின்றனர். அடிப்படைக் கல்வியில் வலுவான முதலீடுகளைச் செய்வதன் மூலம் அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கச் செய்ய முடியும். முதல் வகுப்பு படிக்கத் தகுதியான வயது கொண்டவர்கள் அனைவரும் 2030-க்குள் தரமான அடிப்படைக் கல்வியைப் பெற வேண்டும் என்ற இலக்கை இந்தப் புதிய கல்விக் கொள்கை தீர்மானித்துக்கொண்டுள்ளதாகச் சொல்கிறது. தேசிய மற்றும் சர்வதேச அளவிலான முன்மாதிரிகளைக் கொண்டு எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு தேசிய அளவிலான பாடத்திட்டத்தை என்சிஇஆர்டி உருவாக்கும். இந்தக் கல்வித் திட்டத்தில் ஓவியம், கதை, பாடல்கள் உள்ளிட்ட உள்ளூர் மரபுகளும் பொருத்தமான வகையில் இணைத்துக்கொள்ளப்படும்; அடிப்படைக் கல்விக்காக என்சிஇஆர்டி வகுக்கும் வழிகாட்டும் நெறிமுறைகள் கல்வி நிறுவனங்களை மட்டுமல்லாது, பெற்றோர்களையும் வழிநடத்தும் வகையில் அமைந்திருக்கும் என்கிறது. அனைவருக்கும் தரமான அடிப்படைக் கல்வி கிடைக்கச் செய்வதற்காக அங்கன்வாடி மையங்கள் உயர்தரமான உள்கட்டமைப்பு, விளையாட்டு உபகரணங்கள், பயிற்சிபெற்ற ஆசிரியர்களைக் கொண்டதாக வலுப்படுத்தப்படும். அங்கன்வாடி மையங்கள் அருகிலிருக்கும் பள்ளி வளாகங்களுடன் ஒருங்கிணைக்கப்படும். பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஆசிரமச்சாலைகளிலும் இளம்குழந்தைகளின் நலம்பேணுதல் மற்றும் கல்விமுறை படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். அடிப்படைக் கல்விக்கான பாடத்திட்டங்களை வகுக்கும் பொறுப்பு, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்கிறது. எண்ணும் எழுத்தும்

இரண்டாம் அத்தியாயம் அடிப்படைக் கல்வியில் எழுதவும் படிக்கவும், எண்களைக் கூட்டிக்கழிக்கும் கணக்குகளைச் செய்யவுமான திறன்களை வளர்த்தெடுப்பதை உடனடிச் செயல்திட்டமாகக் கொண்டிருக்கிறது. 2025-க்குள் இந்த இலக்கை எட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பள்ளி மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகள் இந்தத் திறன்களில் மாணவர்களில் பெரும்பகுதியினர் பின்தங்கியிருப்பதை எடுத்துக்காட்டுகின்றன. அதைச் சரிசெய்யவே இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்கிறது. அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுக்கான தேசியத் திட்டத்தை வகுக்கும் பொறுப்பை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை ஏற்றுக்கொள்ளுமாம்.

மாணவர் ஆசிரியர் விகிதம் 30:1 ஆக உறுதிசெய்யப்படும். மாணவர்கள் விரும்பிப் படிக்கும் வகையிலும், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் எல்லா நிலைகளிலும் புத்தகங்கள் வெளியிடப்பட்டும்; அந்தப் புத்தகங்கள் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும். பொது மற்றும் பள்ளி நூலகங்கள் விரிவுபடுத்தப்பட்டு, வாசிப்புக் கலாச்சாரம் வளர்த்தெடுக்கப்படும். புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதற்கான தேசியக் கொள்கை ஒன்றும் வகுக்கப்படும். நன்கு பயிற்சிபெற்ற சமூகப் பணியாளர்களும் ஆலோசகர்களும் சத்துணவு மற்றும் குழந்தைகளின் உடல்நலம் பேணும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். குழந்தைகளுக்கு மதிய உணவோடு காலை உணவும் வழங்கப்படும். அனைத்து மாணவர்களுக்கும் தொடர்ச்சியான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இடைநிற்றலுக்கு முற்றுப்புள்ளி

மூன்றாம் அத்தியாயம், 2030-க்குள் அனைத்து மாணவர்களுக்கும் பாலர் பள்ளி தொடங்கி, பன்னிரண்டாம் வகுப்பு வரையில் தொழிற்கல்வி உள்ளிட்ட தரமான ஒருங்கிணைந்த கல்வியை அளிக்க வேண்டும் என்கிறது. இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரச்செய்வதோடு, இடைநிற்றலைத் தவிர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்கிறது. அதற்காகப் பள்ளி வளாகங்களுடன் இணைந்துள்ள பயிற்சிபெற்ற சமூகப் பணியாளர்கள் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதை உறுதிசெய்திட மாணவர்களோடும் பெற்றோர்களோடும் சேர்ந்து பணிபுரிவார்கள். சமூகப் பொருளாதார அளவில் பின்தங்கிய மாணவர்கள் தங்களது கல்வியைத் தொடரும் வகையில், தேசிய திறந்தநிலைப் பள்ளிக்கல்வி நிறுவனத்தால், திறந்தநிலை மற்றும் தொலைதூரப் படிப்புகள் நடத்தப்படும் என்று சொல்கிறது. மாநிலங்களும் திறந்தநிலைப் பள்ளிக்கல்விக்கான நிறுவனங்களை நடத்துவதற்கு ஊக்குவிக்கும்.

ஒருங்கிணைந்த கல்வி

நான்காம் அத்தியாயம், புதிதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் 5 3 3 4 முறையைப் பற்றி விரிவாக விளக்குகிறது. ஒவ்வொரு பாடத்திலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுக் கண்டறிதல், கண்டுபிடித்தல், பகுப்பாய்தல், விவாதித்தல், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணுதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்கிறது. பரிசோதனைகளின் வழியாகக் கற்றுக்கொள்ளவும், கற்பித்தலில் கலை, பண்பாடு ஆகியவற்றை உள்ளடக்கவும் முயலப்படும். விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். உயர்நிலைக் கல்வியில் மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான உடற்கல்வி, கைவினைக்கல்வி மற்றும் தொழிற்கல்வியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். எட்டாம் வகுப்பு வரையில் தாய்மொழியில் கற்பிக்கப்படுவதே விரும்பத்தக்கது என்றாலும் வாய்ப்புள்ள இடங்களில் குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரையிலாவது அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அறிவியல் உள்ளிட்ட அனைத்து தரமான பாடநூல்களும் உள்ளூர் மொழிகளிலும் கிடைக்கச்செய்ய வேண்டும். கற்பிக்கும் மொழியும் உள்ளூர் மொழியும் வேறுவேறாக இருக்கும்பட்சத்தில், ஆசிரியர்கள் இரண்டு மொழிகளிலும் கற்பிக்கும் முறையைப் பின்பற்ற வேண்டும். மாநிலங்கள் மூன்றுமொழிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு வாய்ப்பாக மற்ற மாநிலங்களுடன் இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும். பன்மொழிக் கலாச்சாரத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் ஊக்குவிக்கும் வகையில் மூன்றுமொழிக் கொள்கை தொடரும்; எந்தெந்த மொழிகள் என்பதை மாநிலங்களே முடிவெடுத்துக்கொள்ளலாம் என்கிறது புதிய கல்விக் கொள்கை. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews