ஓராண்டை நிறைவு செய்துள்ள கல்வி தொலைக்காட்சிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில், '`கல்வித் தொலைக்காட்சி' இன்றுடன் முதலாம் ஆண்டினை பூர்த்தி செய்கிறது என்ற செய்தியும், இந்தத் தொலைக்காட்சி இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது என்ற செய்தியும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியினை அளிக்கிறது,' எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
''கல்விச் செல்வம் காலத்தால் அழியாதது. அந்தச் செல்வம் நாட்டிலே, பாறைக்கடியிலே சுரங்கத்திலிருக்கும் தங்கக் கட்டிகளாக இருக்கக்கூடாது. அதை எடுத்துப் பயன்படுத்திப் பளபளப்புள்ள, நல்ல ஒளியுள்ள தங்கமாக ஆக்கவேண்டும்'' என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். எனது தலைமையிலான மாண்புமிகு அம்மாவின் அரசு, பேரறிஞர் அண்ணா அவர்களின் அமுதமொழிக்கு செயல்வடிவம் கொடுக்கும் பணியினை அர்ப்பணிப்போடு செய்து வருகின்றது.
''எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்'' என்பதை தாரக மந்திரமாக கொண்ட மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள், ஏழை, எளிய மாணவ மாணவியர் கல்வி அறிவை பெறவேண்டும் என்பதற்காக, இந்தியாவிலேயே எந்த மாநிலமும் சாதித்திராத அளவிற்கு கட்டணமில்லா கல்வியுடன் கூடிய விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், புத்தகப் பை, மடிக்கணினி, மிதி வண்டி, ஊக்கத் தொகை என பல்வேறு சலுகைகளை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்க உத்தரவிட்டு, நடைமுறைப்படுத்தினார்கள்.
இவையெல்லாம் மாண்புமிகு அம்மா அவர்களின் சீரிய சிந்தனையில் உதித்த தொலைநோக்குத் திட்டங்கள் ஆகும். இதனை நன்கு உணர்ந்த நான், 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ஆம் நாள், கல்வித் தொலைக்காட்சி வாயிலாக கற்றல்-கற்பித்தல் என்ற திட்டத்தை துவக்கி வைத்தேன். இதனைத் தொடர்ந்து, 2019-2020 ஆம் கல்வியாண்டின் இறுதிவரை அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் சார்ந்த பகுதிகள் குறைவான கால அளவில் வீடியோ பதிவுகளாக எடுக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாயிலாக ஒளிபரப்பப்பட்டு வந்தது.
இந்தச் சூழ்நிலையில், மனிதகுலம் இதுவரை சந்தித்திராத கோவிட்-19 என்னும் கொடும் தொற்றுநோய் உலகத்தையே முடக்கிப் போட்டதன் காரணமாக, புதிய கல்வி ஆண்டை துவங்குவது என்பது மிகப் பெரும் சவாலாக இருந்தபோதிலும், இந்தச் சவாலை எதிர்கொண்டு, இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில், மாணவர்கள் தங்கள் கற்றலை தங்கள் இல்லங்களிலிருந்தே தங்கு தடையின்றி பெறும் வகையில், கல்வித் தொலைக்காட்சி மாற்றி அமைக்கப்பட்டு, பள்ளிகளுக்கான பாட அட்டவணைப் போன்று கல்வித் தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு அட்டவணை, வகுப்பு வாரியாக, பாட வாரியாக, வார நாட்களுக்கு தயாரிக்கப்பட்டு இரண்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் வீடியோ பாடப்பதிவுகள் தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வகையில் தயாரிக்கப்பட்ட அனைத்து வீடியோ பாடப் பகுதிகளிலும் ணுசு QR Code விரைவுக்குறியீடு உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. இப்புதிய வடிவில் தயாரிக்கப்பட்ட பாடங்களை கல்வித் தொலைக்காட்சியின் வாயிலாக ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சியை நான் 14.7.2020 அன்று தொடங்கி வைத்தேன். தமிழ்நாடு அரசின் இந்த முயற்சிகளுக்கு உறுதுணையாக 11 தனியார் மற்றும் கேபிள் தொலைக்காட்சிகளிலும், Airtel DTH-லும் கல்வித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை முதல் நாள் பார்க்கத் தவறியவர்கள், மறுநாள் முதல் கல்வித் தொலைக்காட்சியின் YouTube Channel வழியாக பாடங்கள், படித்து பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. கல்வித் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அட்டவணை மற்றும் இதர தகவல்கள் கல்வித் தொலைக்காட்சியின் இணைய தளத்திலும் கிடைக்கிறது. 1 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கான கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் ஆரம்பமாகும்.
பனிரெண்டாம் வகுப்பு பாடங்களை பொறுத்தவரை, அவர்களுக்கான பாடங்கள் தமிழ்நாடு அரசால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விலையில்லா மடிக்கணினிகளில் 2939 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள Hi Tech ஆய்வகங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளது. இதற்காக திட்டமிடப்பட்ட 1498 வீடியோ பாடங்களில் முதற்கட்டமாக 414 வீடியோ பாடங்கள் 4,20,624 மாணவர்களின் மடிக்கணினியில் பதிவேற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளது என்பதையும், மீதமுள்ள பாடங்கள் வரும் மாதங்களில் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டிலேயே முதன் முறையாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளி வேலை நாட்களில் பாடங்கள் நடத்தப்படுவதைப் போன்று ஒளிபரப்பு அட்டவணை தயாரிக்கப்பட்டு, பாடவாரியாக தலைப்பு வாரியாக பாடம் நடத்துவதும், 10-ம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சைகை மொழியில் பாடம் ஒளிபரப்புவதும் கல்வித் தொலைக்காட்சியின் தனிச் சிறப்பாகும். ''மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பதுபோல, அறிவை வளர்த்துக் கொண்டு பலன் பெற வேண்டும்'' என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிக்கேற்ப, கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்களை மாணவ, மாணவியர் நன்கு கற்று, தங்கள் அறிவை வளர்த்து பலன் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை.
`கல்வித் தொலைக்காட்சி' இன்றுடன் முதலாம் ஆண்டினை பூர்த்தி செய்கிறது என்ற செய்தியும், இந்தத் தொலைக்காட்சி இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது என்ற செய்தியும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியினை அளிக்கிறது. ஓராண்டு நிறைவு செய்த கல்வித் தொலைக்காட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்தினையும், பாராட்டினையும் தெரிவித்துக் கொள்வதோடு, இதனை சிறப்பாக செயல்படுத்தி வருகின்ற மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், அலுவலர்கள், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவ, மாணவியர் நலன் கருதி, எனது தலைமையிலான அரசு இதுபோன்ற எண்ணற்ற சாதனைகளை புரியும் என்பதையும் இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.'
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups