கரோனாவால் வறுமையில் தள்ளப்படும் பள்ளிக்குழந்தைகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 25, 2020

Comments:0

கரோனாவால் வறுமையில் தள்ளப்படும் பள்ளிக்குழந்தைகள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரோனா தொற்றின் காரணமாக வேலையின்மையும் வறுமையும் அதிகரித்துள்ளன. இந்த வறுமை குழந்தைகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்கிறது யுனிசெஃப் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை. குறுகிய காலத்திற்கு ஏற்படும் பட்டினியும், ஊட்டச்சத்துக் குறைபாடும் அவர்களை வாழ்நாள் முழுவதும் பாதிக்கும் அபாயம் உள்ளது. தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள ஒரு நீண்டகால நெருக்கடி குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்வைப் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என்கிறது அறிக்கை. தீவிரமாகும் வறுமை கரோனா தொற்று பரவுவதற்கு முன்பே உலகில் மூன்றில் இரண்டு குழந்தைகள் எவ்வித சமூகப் பாதுகாப்பும் இன்றியே இருந்தனர். இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமை மேலும் பல குடும்பங்களை வறுமையின் படியில் தள்ளியுள்ளது. அரசாங்கங்களின் போதுமான அக்கறையும் கவனமும் இல்லாததால் கோடிக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமலும், கல்வி, மருத்துவம், குடியிருப்பு, சுகாதார ஏற்பாடு இல்லாமலும் வதைபடுகின்றனர். இந்த நோய்த்தொற்றின் காரணமாக இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் மேலும் 12 கோடி குழந்தைகள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உரிய திட்டங்களை வகுத்து அரசுகள் செயல்பட்டால் இதை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்ற தீர்வையும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விரிவான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களே இந்த நெருக்கடியை உடனடியாக எதிர்கொள்வதற்கான வழியாகும். வேலைவாய்ப்பை உருவாக்குவதும், சமூகப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் வகையிலான பொருளாதாரத் திட்டமிடல்களை மேற்கொள்வதும், குழந்தைகள் பராமரிப்புத் திட்டங்கள், அனைவருக்குமான சுகாதாரத்தை மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என்றும் அறிக்கை வலியுறுத்தியுள்ளது. இந்தியாவும் வறுமையும் நாட்டில் 68.8 சதவீத மக்கள் ஒரு நாளைக்கு 140 ரூபாய்க்கும் கீழான வருமானத்தில்தான் வாழ்கின்றனர். முப்பது சதவீதமான மக்கள் ஒருநாளைக்கு 70 ரூபாய்க்கும் கீழான வருமானத்தில்தான் வாழ்கின்றனர் என்கிறது யுனிஃசெப் அறிக்கை. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் மிகச் சிறப்பாக பத்து சதவீதத்துக்கும் மேல் செல்வதாகச் சொன்னபோதும் இதுதான் பெரும்பகுதி இந்திய மக்களின் வாழ்நிலையாகியுள்ளது. இவர்கள் அனைவரையுமே வறுமையில் உள்ளவர்களாகவே யுனிசெஃப் அறிக்கை தெரிவிக்கிறது. வறுமைக்கோடு என்பதே இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு மாயக்கோடாகவே உள்ளது. கல்வி, மருத்துவம், உணவு, போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்டவற்றுக்கு ஒருவர் செலவு செய்யும் அளவை வைத்து இந்தியாவில் வறுமைக்கோடு தீர்மானிக்கப்படுகிறது. அவ்வப்போது நடத்தப்படும் தேசிய மாதிரி கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒரு குடும்பம் இவற்றுக்குச் செலவு செய்வதைக் கொண்டு வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களின் கணக்கு தெரிவிக்கப்படுவதுண்டு. அதேபோல் தனிநபரின் வருமானத்தைக் கொண்டும் அளவிடப்பட்டது. இந்திய திட்டக்குழுவே வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் பற்றிய தகவல்களைத் தெரிவிப்பதற்கான அங்கீகாரம் பெற்ற அமைப்பாகும். 1979- ம் ஆண்டு ஒய்.கே.அலக் தலைமையிலான ஒரு குழு வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களை அளவிடத் தனிநபர் உட்கொள்ளும் சத்தை (கலோரி) அளவாக வைத்தது. அது நகர்ப்புறத்தில் உள்ளவர்களில் 2400 கலோரிக்குக் கீழாகவும், கிராமப்புறத்தில் உள்ளவர்களில் 2100 கலோரிக்குக் கீழாகவும் உணவு எடுத்துக் கொள்பவர்களை வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களாக வகைப்படுத்தியது. அதன் பிறகு இந்தியாவின் வறுமையை அளவிட லக்தவாலா குழு 1993-ம் ஆண்டும், 2004-ம் ஆண்டு டெண்டுல்கர் குழுவும், 2011-ம் ஆண்டில் சி.ரங்கராஜன் குழுவும் அமைக்கப்பட்டது. டெண்டுல்கர் குழுவே 2004-05 இல் இந்தியாவில் வறுமையில் உள்ளவர்கள் 37.2 சதம் என்றது. டெண்டுல்கர் குழு கிராமப்புறப் பகுதியில் இருப்பவர் 27 ரூபாய்க்குக் கீழும், நகர்ப்புறப் பகுதியில் இருப்பவர் 33 ரூபாய்க்குக் கீழும் செலவு செய்பவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் என்று 2011-ம் ஆண்டு குறிப்பிட்டது. அதன்படி 2011-12 ஆண்டு இந்தியாவில் வறுமையில் உள்ளவர்கள் 21.9 சதம் என்றது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் இயக்குநர் சி.ரங்கராஜன் தலைமையிலான ஒரு குழு வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களாக வகைப்படுத்துவதற்கு டெண்டுல்கர் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட தொகை மிகக்குறைவு என்றது. எனவே ரங்கராஜன் தலைமையிலான குழு கிராமப்புற பகுதியில் இருப்பவர் 32 ரூபாய்க்குக் கீழும், நகர்ப்புறப் பகுதியில் இருப்பவர் 47 ரூபாய்க்குக் கீழும் செலவு செய்பவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் என்று வகைப்படுத்தியது. அதன்படியே 2011 -ல் 29.5 சதம் பேர் (சுமார் 37 கோடி) வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளனர் என்றது. இப்போது வறுமையைக் கணக்கெடுத்துக் கூறும் தேசிய திட்டக்குழுவையே அரசு கலைத்துவிட்டது. குழந்தைகளையாவது பசியிலிருந்து மீட்போம்! இப்படியான புள்ளி விவரங்களையே நாம் வைத்துள்ளோம், எப்படியானாலும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் பல கோடி மக்களைக் கொண்டு நாடாகவே நம் இந்தியா உள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாடுடைய மக்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்தியாவில் சுமார் 20 கோடி மக்கள் ஊட்டச்சத்துக் குறைபாடுடன் உள்ளனர் என்றும் அதில் ஆறு கோடி பேர் குழந்தைகள் என்றும் யுனிசெஃப் தெரிவிக்கிறது. உலக அளவிலான பசிக் குறியீட்டின் (Global Hunger Index) 2019 தகவலின்படி 117 நாடுகளில் இந்தியா 102-வது இடத்தில் உள்ளது. தெற்கு ஆசியக் கண்டத்தில் உள்ள பாகிஸ்தான், வங்கதெசம், இலங்கையைவிட இந்தியா பின்தங்கியுள்ளது. ஆனால், தெற்காசியாவின் முதல் பணக்காரர் இந்தியாவில்தான் உள்ளார். பசியோடு குழந்தைகள் தவிக்கும் தேசத்தில் பணம்படைத்தோர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பதும், பொருளாதார வளர்ச்சியில் முன்னேறுகிறோம் என்று கூறிக்கொள்வது பொறுமையாக இருக்காது. வேலைவாய்ப்பற்ற இக்கட்டான இக்காலச்சூழலில் சமூக நலத்திட்டங்களை விரிவுபடுத்தி மக்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை வழங்குவதும், வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுமே இப்போதைய அவசரத் தேவையாகும். குழந்தைகள் மையம் மற்றும் பள்ளிகளில் வழங்கப்பட்டுவந்த சத்துணவு கரோனாவால் தடைப்பட்டுள்ளது. குழந்தைகளின் பசியாற்றும் நோக்குடன் உடனடியாக அக்குழந்தைகளுக்குச் சத்துணவுக்கான பொருட்களை அவர்கள் இல்லம் தேடிக் கொடுப்பதையும் நமது அரசுகள் செய்வது அவசியமாகும். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மேலும் 12 கோடி குழந்தைகள் வறுமையால் பாதிக்கப்படுவார்கள் என்று யுனிசெஃப் விடுத்துள்ள எச்சரிக்கையை எதிர்கொள்வதற்கு இதுபோன்ற சமூகநலத் திட்டங்களே கைகொடுக்கும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews