அரசுப் பள்ளிகளின் இன்றைய நிலைக்கு யார் பொறுப்பு? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 21, 2020

Comments:0

அரசுப் பள்ளிகளின் இன்றைய நிலைக்கு யார் பொறுப்பு?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மக்களின் கல்வியும் நலமும்தான் நாட்டின் கண்கள். நாட்டின் மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் அவையே ஆணிவேர். அது வளர்ந்த நாடாக இருந்தாலும் சரி, வளரும் நாடாக இருந்தாலும் சரி. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், கல்விக்கும் உடல்நலனுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டன. அவற்றுக்கான திட்டங்கள் தொலைநோக்குப் பார்வையில் வரையறுக்கப்பட்டன. மிகுந்த நேர்மையுடனும் சமரசமற்ற முனைப்புடனும் அவை செயல்படுத்தப்பட்டன. இன்று நமது நாட்டின் பெருமைக்கும் ஏற்றத்துக்கும் காரணமாக இருக்கும் கேந்திரிய வித்யாலயா, ஐஐடிகள், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி போன்றன அவற்றுக்குச் சான்றாக இன்றும் உயர்ந்து நிலைத்து நிற்கின்றன. இந்திய மனிதவளத்தின் மேன்மை

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்திய மனிதவளத்துக்கு எப்போதும் அதிக முக்கியத்துவமும் மதிப்பும் வழங்கப்படுகின்றன. உலகின் எந்த நாடாக இருந்தாலும் சரி, அவற்றின் ஆராய்ச்சிப் பிரிவுகளில் முக்கியப் பங்களிப்பவர்களாக இந்தியர்களே உள்ளனர். 20-ம் நூற்றாண்டின் அபரிமிதத் தொழில்நுட்ப வளர்ச்சியும், விஞ்ஞானத்தின் அசாத்திய கண்டுபிடிப்புகளும், இந்திய மனிதவளத்தின் பங்களிப்பின்றி நிகழ்ந்திருக்கச் சாத்தியமில்லை என்பதே நிதர்சனம். ஏன், நாசா, சிலிக்கன் வேலி போன்றன இன்று அடைந்திருக்கும் செழிப்பையும் வளர்ச்சியையும் மதிநுட்பமும் தேர்ந்த தொழில் அறிவும்கொண்ட இந்தியாவின் மனிதவளமின்றி எட்டியிருக்குமா என்பது சந்தேகமே.

உலகை ஆளும் இந்தியர்கள்

இன்று, மைக்ரோசாஃப்ட், கூகுள் உள்ளிட்ட உலகின் மிகப் பெரிய தனியார் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பிலும் முக்கியப் பதவிகளிலும் இந்தியர்களே வீற்றிருக்கின்றனர். இன்று இருப்பது போல், அவர்கள் காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி கிடையாது, தகவல்களையும் தரவுகளையும் நேரடியாகக் கையில் அளிக்கும் இணைய வசதி கிடையாது. அவர்களில் பெரும்பாலானோர் செல்வச் செழிப்போ வசதி வாய்ப்போ இல்லாத குடும்பங்களைச் சார்ந்தவர்கள் என்பதால், புத்தகங்களை வாங்குவது, அவர்களுடைய கனவிலும் சாத்தியமற்ற ஒன்று. அவர்களுடைய பெற்றோர்களுக்குப் படிப்பறிவு இருந்திருக்குமா என்பதுகூடச் சந்தேகமே? இதையெல்லாம் மீறியே அவர்கள் இன்று சாதித்திருக்கிறார்கள். தலைவர்களின் சேவை

ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்த இவர்களுக்கு இன்றைய இந்த உயர்ந்த நிலை எப்படிச் சாத்தியமானது? இவர்கள் எப்படி உருவானார்கள்? இந்த நிலையை அவர்கள் எப்படி எட்டினார்கள்? இந்திய அரசின் கல்வி நிறுவனங்கள் ஆற்றிய சேவையின் பலனே இவர்கள். நாட்டின் கல்வி அமைப்பைக் கட்டமைக்க அயராது உழைத்த தலைவர்களின் தன்னலமற்ற சேவையின் விளைவே இவர்களுடைய ஏற்றம். அந்தத் தலைவர்களின் உழைப்பின் மீது ஏறி நின்று தேரோட்டும் இன்றைய ஆட்சியாளர்கள், அவர்களைத் தூற்றுகிறார்கள் என்பது வேறு விஷயம்.

இன்றைய கல்வியின் நிலை

மருத்துவம் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்ட பின்னும், கல்வி அரசின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்பு கூட, அரசுப் பள்ளிகளே மாணவர்களின் / பெற்றோர்களின் முதன்மைத் தேர்வாக இருந்தன. கட்டமைப்பிலும், ஆசிரியர்களின் தகுதியிலும் திறனிலும் இன்றும் அரசுப் பள்ளிகளே சிறந்ததாகத் திகழ்கின்றன. இருப்பினும், இன்று மாணவர்களின் முதன்மைத் தேர்வு என்ற நிலையை அரசுப் பள்ளிகள் இழந்து பரிதாபமாக நிற்கின்றன. குளுகுளு ஏசி வகுப்பறைகளும் நுனி நாக்கு ஆங்கிலமும் மட்டும் தரமான கல்வியை வழங்கிவிடும் என்ற நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கை சமூகத்தில் ஆழமாகப் புரையோடியிருப்பதால்தான் என்னவோ, அரசுப் பள்ளிகளில் படிப்பதை இழுக்காகக் கருதும் மனப்பாங்கு மக்களிடம் தழைத்தோங்கி நிற்கிறது. தனியார் பள்ளிகளில் படிப்பதே சமூக அந்தஸ்தின் அடையாளம் என்று இன்று கருதப்படுகிறது. காசு கொடுத்து வாங்குவதற்கு, கல்வி ஒன்றும் நுகர்வுப் பொருள் அல்ல என்றாலும், நமது நாட்டில் கல்வியின் நிலை அப்படித்தான் உள்ளது. கோலாச்சும் தனியார் பள்ளிகள்

மாணவர்களிடம் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் மாணவர்களுக்குச் சீருடை வழங்கப்படுகிறது. கல்வியில் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் சமச்சீர் கல்வித்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளியோ அரசுப் பள்ளியோ, எல்லாப் பள்ளிகளும் ஒரே பாடத்திட்டத்தைத்தான் பின்பற்ற வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஊதியம், தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தைவிடப் பன்மடங்கு அதிகமாக இருப்பதால், அரசுப் பள்ளிகளில் தகுதியான / திறன்மிக்க ஆசிரியர்களுக்குப் பஞ்சமில்லை.
தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகள் மாணவர்களின் படிப்புக்காகச் சொத்தை எழுதிக் கேட்கவில்லை. கணிசமான கட்டணத்தை வசூலிக்கும் எத்தனையோ தனியார் பள்ளிகளில், மாணவர்கள் விளையாடுவதற்கு ஏற்ற விளையாட்டுத் திடலே இல்லை என்பதே நிதர்சனம். தகுதியற்ற ஆசிரியர்களைக் கொண்ட தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. இவற்றை எல்லாம் மீறியே இன்று தனியார் பள்ளிகள் நமது நாட்டில் கோலாச்சி வருகின்றன,

சுய பரிசோதனை தேவை

தனியார் பள்ளிகளைப் போன்று திறன்மிக்க மாணவர்கள் மட்டும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படுவதில்லை. வசதி, பெற்றோரின் கல்வியறிவு, மாணவரின் அறிவுத் திறன் போன்ற எவையும் அங்கே கருத்தில் கொள்ளப்படுவதில்லை. சொல்லப்போனால், எந்தவிதப் பாகுபாடுமின்றி அனைத்து வகை மாணவர்களும் அரசுப் பள்ளியில் அனுமதிக்கப்படுகின்றனர். அந்த மாணவர்களின் தேர்ச்சிக்காக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எடுக்கும் முனைப்பும் சிரத்தையும் கேள்விக்கு அப்பாற்பட்டது. அப்படியிருக்க, அரசுப் பள்ளிகளின் இன்றைய அவல நிலைக்கு யார் பொறுப்பு என்பதை அரசு ஆராய வேண்டும். கல்வி அமைப்பில் மிகுந்த தாக்கத்தைத் தனியார் நிறுவனங்கள் ஏற்படுத்தும்போது, ஏன் அது தம்மால் முடியவில்லை என அரசு தன்னைச் சுய பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இந்தக் கரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் வழியே தனியார் பள்ளிகள் கல்வியை முன்னெடுத்துச் செல்லும்போது, தூர்தர்ஷன் கையிலிருந்தும், ஏன் தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்குக் கல்வியை வழங்கவில்லை என்று தன்னை நோக்கி அரசு கேள்வி கேட்க வேண்டும்.

அரசின் பொறுப்பு

கல்வி நிர்வாகத்தில் புரையோடி இருக்கும் நிர்வாகத் திறனின்மையையும் திட்டமிடலின் போதாமையையும் அரசு உடனடியாகக் களையவில்லை என்றால், அறிவின் அடிப்படையில் இல்லாமல், வசதியின் அடிப்படையில் கல்வியைப் பெறும் ஒரு தலைமுறை உருவாகிவிடும். அது சாதி, மத பேதம் கொண்ட சமூகத்தைவிட ஒரு மோசமான சமூகத்தை உருவாக்கிவிடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தொடர்புக்கு: mohamed,hushain@hindutamil.co.in 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews