பள்ளிக்கூடங்களை மீண்டும் திறப்பது எப்போது? WhatsApp Viral - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 10, 2020

Comments:0

பள்ளிக்கூடங்களை மீண்டும் திறப்பது எப்போது? WhatsApp Viral

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சீனப் பள்ளி மாணவன் ஒருவன் பள்ளிக்குச் செல்லும் காணொலி ஒன்று வாட்ஸ் அப்பில் பரவலாகி இருக்கிறது. எட்டு வயது மதிக்கத்தக்க அந்தச் சிறுவன் தாயுடன் பள்ளியை நோக்கி நடந்து வருகிறான். முகக் கவசம் அணிந்திருக்கிறான். முதுகில் குட்டி பள்ளி பை மாட்டி இருக்கிறான். சிவப்பு சட்டை, சாம்பல் நிற கால்சட்டை, கருப்பு காலணி சகிதமாக உற்சாக நடைபோட்டு வருகிறான். பள்ளியின் நுழைவாயிலை நெருங்கியதும் தெருவில் தீட்டப்பட்டு இருக்கும் வெள்ளை கோட்டுக்கு முன்பாக அவனுடைய தாய் நின்றுவிடுகிறார். பள்ளி கதவருகே முகக் கவசம் அணிந்தபடி நிற்கும் ஒரு பெண் சிறுவனின் காலணியில் கிருமி நாசினியைப் பீச்சுகிறார். அடுத்து தன்னுடைய முகக்கவசத்தை அவிழ்த்து அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெட்டியில் சிறுவன் போடுகிறான். அடுத்த எட்டு வைத்ததும் மேஜை மீது இருக்கும் சேனீடைசர் கருவி, சுத்திகரிப்பு புகையைப் பீச்சி அடிக்கும் மற்றொரு கருவி ஆகியவற்றின் மூலம் கிருமி நீக்கம் செய்யப்படுகிறான். கடைசியாக பார்க்க விளையாட்டு சாதனம் போல அழகாக இருக்கும் உடல் வெப்பத்தைச் சோதிக்கும் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டு வகுப்புக்கு அன்புடன் அழைத்துச் செல்லப்படுகிறான்.
சீனாவின் அனுபவ பாடம் ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 27-ம் தேதி அன்று சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய், குவான்சோ பகுதிகளில் பள்ளி இறுதியாண்டு மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுவிட்டன. மேலே குறிப்பிட்டதுபோல இங்குள்ள பள்ளிக்கூடங்களிலும் அத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகள் முறைப்படி பின்பற்றப்படுவதைக் காட்டும் காணொலிகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. காலை கூட்டத்தில் நிற்கும் போதுகூட வரையறுக்கப்பட்ட இடைவெளியில் நிற்பது, வகுப்பறையில் மாணவர்கள் உட்கார்ந்து படிப்பதற்கான கூடுதல் இடவசதி, உணவு கூடத்திலும் அருகருகில் உட்கார்ந்தாலும் தடுப்பு வசதிகளை செய்திருப்பது என பள்ளி வளாகம் முழுவதையும் புதிய இயல்புக்கு மாற்றி இருக்கிறார்கள். கரோனாவின் தோற்றுவாயாக கண்டறியப்பட்டு இருக்கும் வுஹான் மாகாணத்தில்கூட இரண்டு நாட்களுக்கு முன்பாக அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்த மாகாணத்தில் மட்டுமே 121 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் 57 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். கரோனா பிடியில் முதலில் மாட்டிக் கொண்ட நாடு தன் பள்ளி மாணவர்களை தற்போது இவ்வாறு சிறப்பாக பள்ளிக்கு மீண்டும் அழைத்துச் செல்லத் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் பள்ளிகளை எப்போது, எப்படி திறப்பது என்பது குறித்த பேச்சு சூடுபிடித்துள்ளது. ஆங்காங்கே ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில் நாட்டின் தலைநகரமான டெல்லியில் பள்ளிகளை விரைவில் திறந்து மாணவர்களை இரண்டாக பிரித்து ஒரு நேரத்தில் 50 சதவீதம் மாணவர்களை வரவழைத்து வகுப்புகள் தொடங்கலாம் என்று பரிந்துரைத்திருக்கிறது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம். அதேபோல காலதாமதமாக பள்ளிகளைத் தொடங்கவிருப்பதால் பாடத்திட்டத்தை குறை க்கவிருப்பதாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த அறிவிப்புகள் ஒட்டுமொத்த நாட்டுக்கானவை அல்ல. இந்த இரண்டு அறிவிப்புகளுமே சி.பி.எஸ்.இ. பள்ளிகளில்தான் நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகள். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி, அரசு உதவி பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவர்களின் கல்வியை மீட்டெடுக்க என்ன செய்யலாம் என்று பள்ளி ஆசிரியர்கள் சிலருடன் உரையாடினோம்
சமூக இடைவெளி சாத்தியமா? "என்.சி.இ.ஆர்.டி. நிறுவனம் சொல்வது போல 50 சதவீத மாணவர்களுடன் ஜூன் மாதத்திலேயே பள்ளிகளைத் திறப்பது என்பதெல்லாம் எத்தனை இடங்களில் சாத்தியம் என்பது கேள்விக்குறியே. உதாரணத்துக்கு எங்களுடைய பள்ளி இருக்கும் ராயப்புரம் வீதியை எடுத்துக்கொண்டால் கரோனா நோய் தொற்று பரவல் காரணமாக இங்கு உள்ள பல தெருக்கள் அடைக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்க இங்குள்ள பள்ளிக்கூடத்தை எப்படி மீண்டும் திறக்க முடியும்? ஒரு வேளை நோய் தொற்றில் இருந்து விடுபட்ட அல்லது பதிப்பு இல்லாத பசுமை பகுதியில் உள்ள பள்ளிகளை மட்டும் திறப்பது பற்றி யோசிக்கலாம். ஆனாலும் நம்முடைய அரசு உதவி பள்ளிகளை எடுத்துக் கொண்டால் ஒரு வகுப்பறைக்கு 80-ல் இருந்து 100 மாணவர்கள் வரை இருப்பார்கள். அவர்களில் பாதி பேரை மட்டுமே ஒரு நேரத்தில் வர வழைத்தால்கூட சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது எவ்வளவு தூரம் சாத்தியம்? 6-ம், 7-ம், 8-ம் வகுப்பு மாணவர்களுக்குக் காலை வேளை வகுப்பு, 9-ம், 10-ம், பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு மதிய வேளை வகுப்பு என்று பிரித்து வைத்துக்கொள்கிறோம் என்றே வைத்துக் கொள்வோம். அதில் 50 சதவித மாணவர்கள் ஒரு நாள் வருவார்கள் மீதமுள்ள மாணவர்களுக்கு அடுத்த நாள் வகுப்பு. இப்படி வைத்துக் கொண்டால் ஒரே பாடத்தை ஆசிரியர்கள் மீண்டும் மீண்டும் நடத்த வேண்டும். அது அவர்களின் வேலைப் பளுவை அதிகரிக்கும். போதாதகுறைக்கு பாடத்திட்டத்தை முழுவதுமாக முடிக்க நேர அவகாசம் போதாது. இந்நிலையில் பாடத்திட்டத்தைக் கட்டாயம் குறைத்தாக வேண்டும்" என்கிறார் சென்னையில் உள்ள அரசுதவி பெறும் பள்ளி ஆசிரியை பிரியசகி.
பெரும் சுமையான பாடத்திட்டம் "தமிழக பள்ளிகளைப் பொறுத்தவரை பத்தாம் வகுப்பு தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து மட்டுமே எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறோம். அனைத்து மாணவர்களுக்கான கல்வி குறித்த உரையாடலே இங்கு தொடங்கவில்லை. இணைய வழி அல்லது தொலைக்காட்சி மூலம் வகுப்பு எடுக்கும் முயற்சியானது அனைவரையும் சென்றடையக் கூடியதல்ல. இங்கு எத்தனை சதவீதம் பேருக்கு இணைய வசதி, தொலைக்காட்சியும் கேபிளும் இருக்கிறது? ஒரு குழந்தைகூட விடுபட்டு விடாத அளவு இணைய வசதி செய்து கொடுத்துவிட்டு பாடங்களை நடத்தட்டும். பள்ளிகளைத் தொடங்கலாம் பாதி பேரை வகுப்புக்கு வரவழைக்கலாம் என்கிற யோசனையை தமிழகத்துக்குப் பொருத்திப் பார்ப்போம். இதைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால் நாம் யோசிக்க வேண்டியது குழந்தைகள் பள்ளிக்கு எப்படி வருவார்கள் என்பதைத்தான். ரயில், பேருந்து போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் காலை நேரத்தில் எப்படி முண்டியடித்துக் கொண்டு நெரிசலுக்கு இடையில் செல்வோம் என்பது எல்லோருக்கும் தெரியும். 50 பேர் உட்கார்ந்து பயணம் செல்லக்கூடிய பேருந்தில் 100 பேர் சவாரி செய்வதுதான் இங்கு நிதர்சனம். அப்படி இருக்கும்போது சமூக விலகலை கடைப்பிடிப்பது என்ற பேச்சுக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்? அதேபோல வகுப்பறையில் மாணவர்களை எப்படி உட்கார வைத்து பாடம் நடத்துவது என்பதையும் தாண்டி கழிவறையில், மைதானத்தில் அவர்களுடைய பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கைகழுவி தூய்மையாக இருக்க சோப், தண்ணீர் வசதி இப்படி ஒட்டுமொத்தமாக சீன பள்ளிகள் செய்திருப்பது போல ஒரு புதிய அமைப்பை உருவாக்க வேண்டும். அதற்கு அனைவரும் தயார்ப்படுத்தப்பட வேண்டும். பள்ளி சீருடையுடன் முகக் கவசம் கொடுக்க வேண்டும். அதன் பராமரிப்பு குறித்து தெளிவுபடுத்த வேண்டும். பள்ளி திறப்பதற்கு முன்பே அனைத்து நடைமுறைகள் குறித்தும் எல்லா ஆசிரியர்களுக்கும் பயிற்சி, உளவியல் சார்ந்த பாதிப்புகள் குறித்த பயிற்சி அகியவையும் முக்கியம்.
அதேபோல கரோனா பாதிப்பு இல்லை என்றாலும் நம்முடைய புதிய பாடத்திட்டத்தினால் மிகப் பெரிய பாரம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தலையில் சுமத்தப்பட்டுவிட்டது. 9-ம் வகுப்பை எடுத்துக் கொண்டால் ஐந்து பாடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 1500 பக்கங்கள் பாடப்புத்தகங்களில் உள்ளன. இத்தனை பக்கங்களை ஒரு கல்வியாண்டுக்குள் ஆசிரியர்கள் நடத்தி முடிப்பதும் மாணவர்கள் படித்து முடிப்பதும் பெரும்பாடு. ஆனால், கண்ணை முட்டிக்கொண்டு ஒவ்வொரு பாடப்புத்தகத்திலும் இருந்து ஒன்று அல்லது இரண்டு அலகுகளை வெட்டி எறிவது இதற்குத் தீர்வாகாது. இதற்கென ஒரு பாடத்திட்டத் தொகுப்புப் பணிக் குழு அமைத்து பாடத்திட்டத்தைக் குறைக்கும் நடவடிக்கை முறையாக எடுக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக கரோனா ஊரடங்கு காலம் ஏற்படுத்தி இருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் பல குழந்தைகளின் படிப்பு இடைநின்று போகும் அபாயம் உள்ளது. அரசு பள்ளிகளில் கல்வி இலவசமாக வழங்கப்படலாம். ஆனாலும் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த கூடுதலாக 50 ரூபாய் கிடைக்கக்கூடிய வேலையானாலும் தங்களுடைய குழந்தையை அதில் ஈடுபடுத்த நிர்ப்பந்திக்கப்படுவார்கள். இந்த சவாலை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?" என்கிறார் பள்ளி ஆசிரியர் கலகல வகுப்பறை சிவா. பள்ளிக்கூடங்களை மீண்டும் திறப்பது எப்போது என்பது மட்டுமே நம் முன்னால் நிற்கும் கேள்வியன்று. சீனாவைப் போல ஒவ்வொரு அடுக்கிலும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம். ஆனால், இவ்வளவு மக்கள்தொகை கொண்ட நாட்டில் இது சாத்தியமா என்ற மலைப்பு ஏற்படலாம். அதற்கும் சீனாவிடம் பதில் உள்ளது. இந்தியாவைவிடவும் 10 கோடி அதிகம் மக்கள்தொகை கொண்ட சீனாவால் மாற்றத்துக்கான நடவடிக்கைகளை நடைமுறைபடுத்தி இருப்பது நமக்கான முன்னுதாரணம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews