கரோனாவுக்குப் பிந்தைய வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார் காந்தி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 28, 2020

Comments:0

கரோனாவுக்குப் பிந்தைய வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார் காந்தி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரோனாவின் வருகை நாம் இதுவரை கடைப்பிடித்துவந்த நம்முடைய ‘அன்றாட வாழ்க்கை’ தொடர்பில் நிறையக் கேள்விகளை எழுப்பியிருக்கிறது. நம் வாழ்க்கைப்பாட்டில் உள்ள பல பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆழ்ந்து யோசித்தால், காந்திய வழிமுறைதான் தொலைநோக்கில் இந்த உலகின் பல சிக்கல்களுக்கு எளிமையான தீர்வு என்று தோன்றுகிறது. இந்த கரோனா காலத்தில், காந்தியின் ‘இந்திய சுயராஜ்யம்’ நூலை மறுவாசித்தேன். ஒரு பெரும் வெளிச்சத்தை அது தந்தது. காந்தியின் முதல் நூலான இது, பல வகைகளில் அவரது கொள்கை சாசனம். 1908-ல் கப்பல் பயணத்தின்போது இடது கையாலும் வலது கையாலும் மாறி மாறி பத்து நாட்களில் எழுதிய 100 பக்க நூல் ‘இந்திய சுயராஜ்யம்’. இந்நூலின் வார்த்தைப் பயன்பாடுகள் பல முதன்முறையாக வாசிப்பவர்களுக்கு, ‘காந்தியா இப்படியெல்லாம் எழுதியிருக்கிறார்!’ என்ற அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் உண்டாக்கக் கூடும். ஆனால், தமது வாழ்நாளின் இறுதி வரை அதில் கூறப்பட்டவையே தனது மாற்ற முடியாத, இறுதியான கொள்கை என உறுதியுடன் கூறினார் காந்தி. இந்நூலை இந்தியருக்கான நூல் என்றோ, இருபதாம் நூற்றாண்டுக்கான நூல் என்றோ எல்லையிட்டு அடைத்துவிட முடியாது. எந்த நாட்டுக்கும், எந்தக் காலகட்டத்துக்கும், எந்தக் கேட்டுக்குமான தீர்வு காணத்தக்க திருக்குறளாக விரித்துப் பயன்படுத்த முடியும் என்பதாலேயே, இன்றும் அது தொடர்ந்து பேசப்பட்டுவருகிறது. கரோனா காலகட்டம் சுட்டிக்காட்டும் நம்முடைய இன்றைய பலவீனமான அன்றாட வாழ்க்கை முறையை மாற்ற ‘இந்திய சுயராஜ்யம்’ நிறைய வழிகாட்டுகிறது.
கரோனாவும் நகரமும்
காந்தி தன்னிறைவு, தற்சார்பு வாழ்வுமுறை, நிம்மதியான வாழ்விடம் தொடர்பில் வலியுறுத்துபவர். இந்தியாவின் பெரும்பான்மை எளிய மக்களைக் கடைத்தேற்ற நகரமயமாக்கலே தீர்வு என்ற கருத்தை முற்றாக நிராகரித்து ஒதுக்கியவர்; மாறாக, தன்னிறைவு மிக்க கிராம சுயராஜ்யத்தை வலியுறுத்தியவர். தன்னைச் சுற்றிய 5 கிமீ - 10 கிமீ பகுதியில் கிடைக்கும் மூலப்பொருட்கள், உணவு கொண்டு வாழ்வதே தற்சார்பு என்றவர். கரோனா காலகட்டம் அதை உறுதிப்படுத்துகிறது. நகரம் வாழ்வு தரும், வளம் தரும் என்று கருதிச் சென்ற கிராம மக்களைச் சுரண்டிய தொழிற்சாலைகளும் நகரங்களும் கடைசியில் அவர்களை ஏதிலிகளாகச் சொந்த ஊர் நோக்கி விரட்டிவிடுவதை இன்று கண்கூடாகப் பார்க்கிறோம். முன்னதாக, நகரங்களில் அவர்களுக்குக் கிடைத்த வாழ்வும் கண்ணியமானதாக இல்லை. ஆக, நகரமயமாதல் நல்ல தீர்வல்ல என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது. வேறு என்ன மாற்று? காந்தி கிராமங்களை நோக்கி நம் பார்வையைத் திருப்புகிறார். கரோனாவும் நாகரிகமும்
நவீன நாகரிகத்தை ஒரு கனவு நோய், வீண் மாயக் கற்பனை என்கிறார் காந்தி. உடல் இன்பம், நுகர்வு வெறி ஆடம்பரம், உழைப்பின்மை, கும்பல் நடத்தை, பணவெறி ஆகியவற்றின் அடித்தளத்தில் உருவாக்கப்பட்டதே இந்த நாகரிகம். இது தன்னைத் தானே அழித்துக்கொள்ள வைக்கும் சாத்தான் என்கிறார். கரோனா காலகட்டம் இதை முழுமையாக நிரூபித்துள்ளது. நல்ல வசதியான வாழ்க்கையில் இருந்தவர்களும் வெறும் ஓரிரு மாத வருமான இழப்பில் இன்று தள்ளாடுவதைப் பார்க்கிறோம். வசதியான வீடு, கார், நுகர்வு என்று ஆடம்பர ஜொலிப்பில், கடனில் வாழ்க்கையைக் கரைத்ததன் விளைவு இது.
வியாபாரம் செய்யவே வந்தவர்களை நமது பேராசை, உட்பூசலால் அவர்களை அழைத்து நாமே ஆட்சியைக் கொடுத்தோம் என்கிறார் காந்தி. அதுபோல, நமது வளர்ச்சிப் பேராசையால் காடுகளை அழித்து நகரங்களாக்கினோம். வளர்ச்சி, பணப் பேராசையால் காற்று, நீர், மண், உணவு என அனைத்தையும் மாசுபடுத்தி, வியாதிகளை வலிய வரவழைத்துக்கொண்டுள்ளோம். இதுவரை ஏழைகளையும், வளர்ச்சி குன்றிய நாடுகளையும் மட்டுமே தாக்கிவந்த தொற்றுநோய்கள், இன்று பணக்கார நாடுகளையும் தாக்குகின்றன என்பதால்தான் இத்தனை கூச்சலும் ஆர்ப்பாட்டமும். காந்தி இந்த நாகரிகத்தை மாற்று என்கிறார்.
கரோனாவும் மருத்துவமும்
பொதுவாக, நவீன மருத்துவர்களைக் கடுமையாக விமர்சிப்பவர் காந்தி. மனிதநேயமற்ற வணிகமயமாகும் எதையும் கடுமையாகச் சாடுபவரே அவர். நவீன மருத்துவத்தைக் காட்டிலும் அது உருவாக்கிய புதிய கலாச்சாரமே காந்தியின் விமர்சனத்துக்கு முக்கியமான காரணம். நவீன மருத்துவமானது, எல்லாவற்றுக்கும் மருத்துவத்தில் தீர்வு உண்டு என்று நம்ப வைக்கிறது, வணிகத்தோடு அது ஒன்றுகலக்கிறது. இரண்டின் விளைவாக ஒட்டுமொத்த மனிதகுல வாழ்க்கை ஒழுங்கையும் சீர்குலைக்கிறது என்று அவர் பார்த்தார். அது பிழையான பார்வை அல்ல என்பதையே இன்று கரோனா வழி பார்க்கிறோம். நல்ல உணவு, உடற்பயிற்சி, ஒழுக்கமான நடைமுறை வழியாகவே கரோனாவை எதிர்கொள்ள முடியும் என்ற நிலைக்கு வந்திருக்கிறோம். வணிகமயமற்ற மருத்துவத்தின் அவசியத்தை நமது அரசு மருத்துவமனைகள் சுட்டுகின்றன. காந்தி சிரிக்கிறார். கரோனாவும் ஒற்றுமையும்
இந்தியாவின் வளர்ச்சிக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அடிப்படைத் தேவை சமூக நல்லிணக்கமே என்ற காந்தி, இந்து – முஸ்லிம் ஒற்றுமையை அதன் உதாரணப் புள்ளி ஆக்கினார். இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்திலும் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு கட்டவிழ்த்துவிடப்பட்டது இந்திய ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்குமான வாழ்நாள் சவால் எதுவென்பதைத் துல்லியமாகவே காட்டுகிறது. தீண்டாமையைப் பெரும் எதிரியாகக் கண்டார் காந்தி; உடல் உழைப்பில் ஈடுபடும் மக்கள் மீதான இந்தியர்களின் கீழான பார்வையை மாற்ற இறுதிவரை பேசினார். இந்திய முதலாளிகளுக்கு அறம் கற்பிக்க முயன்றார். இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்திலும் இந்தியா இவற்றிலிருந்தெல்லாம் கொஞ்சமும் மாறவில்லை என்பதைப் பார்க்கிறோம். தீர்வுக்கு காந்தியிடமே அடைக்கலம் ஆகிறோம்.
தன்னுடைய ‘இந்திய சுயராஜ்யம்’ நூலின் இறுதியில், மனிதர்கள் தமது தவறுகளை உணர்ந்து பிராயச்சித்தம் செய்ய வேண்டிய காலம் இது என்கிறார் காந்தி. கரோனா காலகட்டம் அதற்கு மிகவும் பொருத்தமான தருணமாகத் தோன்றுகிறது.
- வெ.ஜீவானந்தம், மருத்துவர், ‘இந்திய சுயராஜ்யம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர்.
தொடர்புக்கு: greenjeeva@yahoo.com 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews