பெருந்தொற்றை வெல்ல அறிவியலை முறையாகப் பின்பற்றுவது அவசியம் - நோபல் பரிசை வென்றவர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 28, 2020

Comments:0

பெருந்தொற்றை வெல்ல அறிவியலை முறையாகப் பின்பற்றுவது அவசியம் - நோபல் பரிசை வென்றவர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
1981-ல், உயிரினங்களுக்கு இடையிலான வேலிகளைத் தாண்டி மனிதர்கள் மீது தொற்று ஏற்படுத்தத் தொடங்கிய ஒரு வைரஸ், சான்பிரான்சிஸ்கோவிலும் நியூயார்க்கிலும் தன்பாலின உறவாளர்கள் மத்தியில் பேரழிவை ஏற்படுத்தத் தொடங்கியது. அந்த நோய்க்கான காரணியை ஆராய ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டது. எச்.ஐ.வி கிருமிதான் எய்ட்ஸ் பாதிப்பை உருவாக்கும் காரணி என்பதைக் கண்டறியவும், அதன் மரபணு வரிசையை வரிசைப்படுத்தவும் சில வருடங்கள் பிடித்தன. எச்.ஐ.வி தொற்று என்பது நிச்சயமாக மரண தண்டனை வழங்கக்கூடியது எனும் நிலையை மாற்றும் வகையில், 15 ஆண்டுகளுக்கு முன்னர் மருந்துகளின் கலவையும் உருவாக்கப்பட்டுவிட்டது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய ‘கோவிட்-19’ தொற்றுநோய்ப் பரவலின் காரணி, கரோனா வைரஸ் (coronavirus Sars-CoV-2) எனும் புதிய வைரஸ்தான் என்பது கண்டறியப்பட்டது; சில வாரங்களிலேயே அந்த வைரஸின் மரபணு வரிசையும் உறுதிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக, அந்தத் தொற்றைக் கண்டறியும் பரிசோதனை முறையை உருவாக்க முடிந்தது. அதன் தொடர்ச்சியாகத் தற்போது, அந்த நோய்த் தொற்றுள்ளவர்களுக்கு ஆன்டிபாடி (antibody) பரிசோதனைகளும் நடத்தப்பட்டுவருகின்றன. சர்வதேச அளவில் அறிவியல் மீது நிலையான முதலீடு செய்ததன் விளைவாகத்தான், மிக விரைவான கால அவகாசத்தில் இந்த வைரஸ் தொடர்பாக நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறோம். எனினும், இவ்விஷயத்தில் நமக்குத் தெரியாத விஷயங்கள் நிறைய உண்டு. மற்ற வைரஸ்களை விட மிகவும் அதிகமாகப் பரவக்கூடியதாக இந்த வைரஸ் இருப்பது ஏன் என்று நமக்குத் தெரியாது. இந்த நோய்த் தொற்று, நம்மை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக வைத்திருக்குமா, ஆம் என்றால், எத்தனை காலத்துக்கு என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. மரணம் ஏற்படும் அளவுக்கு சில சமயம் மிகத் தீவிரமான விளைவுகளை இந்த வைரஸ் ஏற்படுத்துவது ஏன் என்றும், சிலர் ஏன் இந்த வைரஸால் மிக அதிகமாக பாதிப்புக்குள்ளாகின்றார்கள் என்றும் நமக்குத் தெரியாது. இதற்கான தடுப்பூசியை உருவாக்க, இதற்கு முன் இல்லாத அளவுக்கு உலகளாவிய ஒரு தேடலை மேற்கொள்ளவும் அறிவியல் நமக்கு உதவிவருகிறது. எனினும், 40 ஆண்டுகளுக்குப் பின்னரும் எய்ட்ஸுக்கோ பிற வைரஸ் நோய்களுக்கோ ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை என்பது முற்றிலும் உண்மை. எனவே, இந்தத் தொற்றை எதிர்த்துப் போரிடும் புதிய மருந்துகளை உருவாக்க, வலுவான முயற்சிகள் அவசியம். அறிவியலைப் பொறுத்தவரை இதுபோன்ற ஒரு நிச்சயமற்ற நிலை இயல்பானதுதான். பொதுவாக, சான்றுகள் படிப்படியாகச் சேர்க்கப்படுவதும், அவற்றைச் சமூகம் பகுப்பாய்ந்து பார்ப்பதும், தவறுகளைக் களைவதற்கும் ஒரு ஒருமித்த கருத்து உருவாவதற்கும் வழிவகுக்கும். இது வழக்கமாக நல்ல பலனைக் கொடுக்கும். ஆனால், அறிவியல் தற்போது பொதுமக்களின் ஒட்டுமொத்தக் கண்காணிப்பின் கீழ் இருக்கிறது; உடனடி பதில்களைக் கோரும் அழுத்தங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இப்படியான சூழலில், விஞ்ஞானிகள் தங்கள் சான்றுகள் குறித்த நிச்சயமற்ற தன்மையைச் சரிசெய்ய வேண்டியது அவசியம். இதுபோன்ற நிச்சயமற்ற சூழல்களை எதிர்கொள்ளும்போது, பல்வேறு சாத்தியக்கூறுகள் குறித்து வெவ்வேறு விஞ்ஞானிகள் வெவ்வேறு முடிவுகளைக் கண்டடைவார்கள் என்பதையும், அது அவர்கள் வழங்கும் அறிவுரையைப் பாதிக்கும் என்பதையும் விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்ள வேண்டும். புதிய ஆதாரங்கள் வெளிப்படும் நிலையில், அவற்றில் இருக்கும் தவிர்க்க முடியாத தவறுகள் குறித்து விஞ்ஞானிகள் வெளிப்படையாகப் பேச வேண்டும். அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவும் விழைய வேண்டும். தனிப்பட்ட பொறுப்புகளை அலட்சியம் செய்யும் குழு மனப்பான்மை எல்லா நிறுவனங்களிலும் இயல்பானதுதான். அப்படியான மனப்பான்மையைத் தவிர்க்கவும், உள்ளார்ந்த விவாதங்களை வலுப்பெறச் செய்யவும் விஞ்ஞானிகள் முயல வேண்டும். அத்துடன், தங்கள் ஆதாரங்கள், முடிவுகள் குறித்து வெளிப்படைத்தன்மையுடன் அவர்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் அவற்றை மீளாய்வு செய்ய முடியும். கடினமான கொள்கை முடிவுகளுக்குத் தாங்கள் பலிகடா ஆக்கப்படலாம் என்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கினால், வெளிப்படையான அறிவுரைகளைக் வழங்குவது அவர்களுக்குச் சாத்தியமற்றதாகிவிடும். அதுமட்டுமல்லாமல், அறிவியல்பூர்வமான அறிவுரையைக் கொள்கையாக மாற்றுவது என்பது மிகவும் வித்தியாசமான பாதைகளுக்கு இட்டுச்செல்லக்கூடியதாகும். ‘கோவிட்-19’ தொடர்பாக உலகம் முழுவதும் நிலவும் மாறுபட்ட எதிர்வினைகளை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். ஏனெனில், அறிவியல்பூர்வமான அறிவுரை மட்டுமே கொள்கை முடிவுக்கான காரணி அல்ல. அரசுகள் அறிவியலின் நிச்சயமற்ற தன்மையுடன் மட்டுமல்ல, நடைமுறை சார்ந்த பிற பரிசீலனைகளுடனும் போராட வேண்டியிருக்கிறது – சாத்தியக்கூறுகள் உட்பட! இப்படியான ஒரு சூழலில், கரோனா வைரஸ் விஷயத்தில் விஞ்ஞானிகளிடமிருந்து ஓர் உறுதித்தன்மையை அரசுகள் எதிர்பார்க்கின்றன. அதன் மூலம், தாங்கள் அறிவியலைப் பின்பற்றுவதாக உணரவோ அல்லது சொல்லிக்கொள்ளவோ அரசுகள் விரும்புகின்றன. ஆனால், விரும்புவது மட்டுமே ஒரு விஷயத்தைச் சாத்தியப்படுத்தி விடாது. ஒரு நெருக்கடியின் மத்தியில் இருக்கும் நாம், சான்றுகளுக்கு எதிராக என்னென்ன செய்கிறோம் என்பதைத் தொடர்ந்து மீளாய்வு செய்துகொண்டே இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியமானது. ஒருவேளை நாம் தவறான வழியைப் பின்பற்றுவது தெரியவந்தால், சண்டையிடுவதிலோ, ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொள்வதிலோ பொன்னான நேரத்தை நம்மால் வீணடிக்க முடியாது. குறிப்பாக, நிச்சயமற்ற ஒரு சூழலுக்கு நடுவே, விஞ்ஞானிகளின் அறிவுரைகளை வைத்து அவர்கள் மீது பழிசொல்வது என்பது, அறிவியல் இயங்கும் விதம் தொடர்பான அடிப்படைப் புரிதலுக்குச் செய்யப்படும் துரோகம் ஆகும். நாம் வேறுவிதமாக அல்லது சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று புதிய ஆதாரங்கள் பரிந்துரைத்தால், அரசும் சரி, விஞ்ஞானிகளும் சரி அதை ஒப்புக்கொள்ள வேண்டும்; கொள்கையை மாற்ற வேண்டிய அவசியம் குறித்து விளக்குவதுடன், அதற்கேற்ப மாற்றங்களையும் செய்ய வேண்டும். இன்றைக்கு மோசமானவையாகத் தோன்றும் முடிவுகள், அப்போதைக்கான சூழலில் சிறந்த நோக்கங்களின் அடிப்படையில்தான் எடுக்கப்பட்டன என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன் – எடுக்கப்பட்ட முடிவுகளில் இருக்கும் தவறுகள் அடையாளம் காணப்பட்டு, எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாகச் சரிசெய்யப்படும் பட்சத்தில்! ஒரு வைரஸ் பெருந்தொற்று மிக முக்கியமான அச்சுறுத்தலாக இருக்கும் சூழலில், அதை எதிர்கொள்ளும் முன் தயாரிப்புகளுடன் இருந்ததாக பிரிட்டன் கருதுகிறது. ஆனால், நாம் முற்றிலும் தயாராக இருக்கவில்லை என்பதே உண்மை. இந்தப் பெருந்தொற்றை எதிர்கொள்வதில் நமக்குக் கிடைத்த வெற்றிகளிலிருந்தும் தோல்விகளிலிருந்தும் நாம் கற்றுக் கொள்ளும் பாடமானது, எதிர்காலத்தில் நிச்சயமாக நேரப்போகின்ற இன்னொரு பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு நம்மைத் தயார்படுத்தும். அப்படியான ஒரு முன்தயாரிப்புதான் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதையாக இருக்கும்! - வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ( ராயல் சொசைட்டியின் தலைவர், வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவர்) நன்றி: தி கார்டியன் (பிரிட்டன் நாளிதழ்) | தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews