காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பையை அடுத்த கரசங்கால் துண்டல்கழனி ராஜீவ்காந்தி சாலை பகுதியைச் சேர்ந்தவர் குணா. தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா(வயது 40). இவர், அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினர்களான தணிகாசலம் என்பவருடைய மனைவி திலகா(48), குமரேசன் என்பவருடைய மகள் சத்யா (13), கணேசன் என்பவருடைய மகள் கலையரசி(17), டிரைவர் ராஜு என்பவருடைய மகள் பூர்ணிமா(8), மகன் ஹரி(10) ஆகியோருடன் நேற்று காலை மணிமங்கலம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரிக்கு குளிக்கச் சென்றனர்.
ஏரியில் மூழ்கி 4 பேர் பலி
ஏரிக்குள் திலகா உள்பட 5 பேரும் நீரில் தத்தளிப்பதை பார்த்த சித்ரா அனைவரையும் காப்பாற்ற முயன்றார். அப்போது ஏரியில் நீந்திச் சென்ற சித்ரா, திலகா மற்றும் சிறுவன் ஹரி ஆகிய இருவரையும் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தார். பின்னர் கலையரசி, சத்யா, பூர்ணிமா ஆகியோரையும் காப்பாற்ற முயன்ற போது, அவர்களுடன் சேர்ந்து சித்ராவும் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்து கரையில் நின்ற திலகா கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அந்த பகுதி பொதுமக்கள், நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் 4 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீசார், ஏரியில் மூழ்கி இறந்த 4 பேரின் உடல்களையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலியானவர்களில் கலையரசி சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்1-ம், சத்யா கரசங்கால் பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பும், பூர்ணிமா 3-ம் வகுப்பும் படித்து வந்தனர். உயிர் தப்பிய ஹரி 5-ம் வகுப்பு படித்து வருகிறான். ஏரியில் மூழ்கி அதே பகுதியைச் சேர்ந்த 3 பள்ளி மாணவிகள் உள்பட 4 பேர் பலியான சம்பவம் அந்த பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.