கொரோனா நோயின் பாதிப்பு, மற்ற எல்லா துறைகளையும் போலவே, கல்வித் துறையையும் பாதித்து விட்டது. நோய் தொற்றில் இருந்து விடுபட்டு, பள்ளிகள் திறக்கும் போது, நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி வரும். கொரோனா தொற்று தொடராமல் இருக்க, சமூக இடைவெளி மிகவும் அவசியம்.
ஆனால், நுாற்றுக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் வந்து செல்லும் பள்ளிகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மிகப்பெரிய சவால். அதை, வரும் கல்வி ஆண்டில் எதிர்கொள்ள, இப்போதே திட்டமிடுவது அவசியம். அதற்கு என்ன செய்யலாம்...?
பள்ளிகளில் 2 'ஷிப்ட்!'
மாணவர்களை இடைவெளி விட்டு அமர வைக்க, போதிய வகுப்பறைகள் இல்லாத நிலையில், இதற்கான தீர்வு, 'ஷிப்ட்' முறையை கொண்டு வருவது தான்.தற்போது, பள்ளி வேலை நேரம், 5:30 மணி நேரம் என்பதை, நான்கு மணி நேரமாக குறைத்து, இரண்டு, 'ஷிப்ட்'களாக பள்ளிகளை இயக்கலாம். அதாவது, காலை, 7:00 முதல், 11:30 மணி வரை ஒரு ஷிப்ட்; அரை மணி நேர இடைவேளையில், இரண்டாவது, ஷிப்ட், பகல் 12:00 முதல் மாலை 4:30 மணி வரை.எல்.கே.ஜி., முதல் 6ம் வகுப்பு வரை முதல் ஷிப்ட்; 7ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை இரண்டாவது ஷிப்ட். இதனால், வகுப்பறையில் போதிய சமூக இடைவெளி கிடைக்கும்.
பாடம் நடத்தும் நேரம் குறைகிறதே என்ற கேள்வி எழும். இப்போது, பள்ளிகளில் ஆண்டிற்கு, 210 வேலை நாட்கள். இதில் கால், அரை, முழு ஆண்டு தேர்வுக்கென்று, 18 நாட்கள் குறைத்தால் மீதி, 192 நாட்கள்; அதாவது, 1,056 மணி நேரம், பாடம் நடத்தப்படுகிறது. வரும் கல்வி ஆண்டு, ஒரு மாதம் தாமதமாக, ஜூலை, 1ல் துவங்குகிறது என வைத்துக் கொள்வோம். அடுத்த ஆண்டு, பள்ளி வேலை நாட்கள், ஏப்ரல், 15 வரை என கணக்கிடுவோம்.
முதலில், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, குடியரசு தினம் தவிர, அவசியம் அல்லாத விடுமுறைகளை குறைத்தால், உத்தேசமாக, 246 வேலை நாட்கள் வருகிறது. தேர்வு நாட்கள் போக, 228 நாட்களில், தினமும் நான்கு மணி நேரம் வகுப்பு என்பதை கணக்கிட்டால், பாடம் எடுக்கும் நேரம், 912 மணி நேரம். எனவே, ஷிப்ட் முறையில் பாடம் எடுப்பது, 144 மணி நேரம் தான் முன்பை விட குறைகிறது. ஒரு மாதம் தாமதமாக பள்ளி திறந்தாலும், ஷிப்ட் முறையால், பாடம் பயிற்றுவிக்கும் நேரத்தில் பெரிய இழப்பு ஏற்படாது.
ஞாயிறு தோறும் ஒரு மணி நேரம், 'ஆன்லைன்' மூலம் பயிற்றுவிக்கும் நேரத்தை அதிகரிக்கலாம். பள்ளிகளில் காலை நேரத்து இறை வணக்கக் கூட்டம், குழு விளையாட்டுகள் போன்றவற்றை தவிர்ப்பதும், சமூக இடைவெளிக்கு அவசியமாகிறது.
பள்ளி பஸ்கள்
பஸ்களில் மூன்று இருக்கைகளில் இருவரையும், இரண்டு இருக்கைகளில் ஒரு மாணவனையும் அமர வைக்க வேண்டும். ஷிப்ட்களுக்கு ஏற்றவாறு இயக்கப்படும் போது, பஸ்களிலும் சமூக இடைவெளி இருக்கும்.
பத்தாம் வகுப்பு தேர்வு
மார்ச்சில் துவங்கி இருக்க வேண்டிய பத்தாம் வகுப்பு தேர்வை, ஜூன் 1ல் துவங்கி, 5ம் தேதியுடன் முடித்தால், விடைத்தாள் திருத்தும் பணியை உடனே துவங்கலாம். ஏற்கனவே கிடைத்த விடுமுறைகளில், மாணவர்கள் தயாராகி விட்டதால், ஒவ்வொரு தேர்வுக்கும் இடைவெளி என்பது, இப்போது தேவையில்லை.
ஊரடங்கு முடிந்து, மே, 18ல், ஏற்கனவே நடந்த பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணியை துவங்கினால், ஜூன், 2வது வாரத்தில், தேர்வு முடிவுகளை வெளியிட முடியும்.அப்போதும், சில மாவட்டங்கள் கொரோனா சிவப்பு மண்டலத்தில் தொடர்ந்தால், அங்குள்ள பள்ளிகளில், திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் செல்வது கடினம். அதற்கு சிறப்பு வாகன வசதிகளை அரசு ஏற்படுத்த வேண்டும்.பிளஸ் 2விற்கு, ஒரு கல்வி மாவட்டத்திற்கு, ஒரு விடைத்தாள் திருத்தும் மையம் என்றிருப்பதை, மூன்றாக உயர்த்துவது அவசியம்.
தற்போது, ஒரு விடைத்தாள் திருத்தும் அறையில், ஆசிரியர்கள், கண்காணிப்பாளர் என, 20 பேர் உள்ளனர். அதை, ஏழு பேர் என மாற்றினால், சமூக இடைவெளியுடன் ஆசிரியர்கள் பணிபுரிய முடியும்.வரும் கல்வி ஆண்டில்,பள்ளிகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் ஏராளம். பாதுகாப்பான சூழலில், மாணவர்களை பயிற்றுவிப்பது பெரும் சவால். பல்வேறு இடங்களில் இருந்து மாணவர்கள் வருகின்றனர்.
முதல்வர் கவனிப்பாரா?
ஒரு மாணவருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டாலும், மற்றவர்களுக்கும் பரவும் என்ற எச்சரிக்கை உணர்வு எல்லோருக்கும் வேண்டும். அவர்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து, சுகாதாரமான சூழலில் கல்வி தர வேண்டிய பொறுப்பு, அரசிற்கு உண்டு.முதல்வர், இ.பி.எஸ்., பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கவனித்து, அதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.
முனைவர் எல்.ராமசுப்பு
பத்திரிகையாளர்
lr@dinamalar.in
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.