சென்னை: தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், கொரோனா தொற்றுக்கு, தடுப்பு மருந்து கண்டறியும் முதற்கட்ட ஆய்வு பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சித்தா மருத்துவ முறையை பின்பற்றி, நோய் தொற்றை தடுக்கும் எதிர்ப்பு மருந்துகள் தயாரிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டறியும் பணிகளை, உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இதுவரை, 47 ஆராய்ச்சிகள், முதற்கட்டத்தை எட்டி இருப்பதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.தமிழகத்தில், கொரோனாவிற்கு தடுப்பு மருந்துகள் கண்டறியும் பணியில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை ஈடுபட்டு உள்ளது.
அரசிடம் சமர்பிப்பு
இந்த ஆய்வு பணியில், பல்கலை துணை வேந்தர், டாக்டர் சுதா சேஷய்யன் தலைமையில், டாக்டர் புஷ்கலா, ஆராய்ச்சி மாணவர் தம்மண்ணா பஜந்த்ரி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். தற்போது, முதற்கட்ட ஆய்வு பணியை நிறைவு செய்து, தடுப்பு மருந்துகளின் மூலக்கூறுகள் குறித்த அறிக்கையை, அரசிடம், பல்கலை சமர்ப்பித்து உள்ளது. இந்தியாவில், கொரோனா தடுப்பு மருந்துக்கான முதற்கட்ட ஆய்வுகளை, எந்த மாநிலமும் நிறைவு செய்யாத நிலையில், தமிழக மருத்துவ பல்கலை சாதனை செய்திருப்பது, நம்பிக்கையை விதைத்துள்ளது.இது குறித்து, பல்கலை துணை வேந்தர், சுதா சேஷய்யன் கூறியதாவது:நோய் தொற்றை ஏற்படுத்தும் கிருமிகளை, ஆய்வகங்களில் ஆராய்ச்சி செய்து, அதன் வாயிலாகவே தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.
தற்போது, அந்த நிலை மாறி, நோய் கிருமியின் மரபணு மாதிரியை மட்டும் வைத்து, செயற்கை முறையில், கணினி மென்பொருட்கள் வாயிலாக, முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் தொழில்நுட்பம் வந்து விட்டது. இது, 'எதிர்மறை தடுப்பு மருந்தியல்' என்று, அழைக்கப்படுகிறது. தற்போது, மருத்துவ பல்கலையின், முதற்கட்ட ஆராய்ச்சியில், கொரோனா நோய் தொற்றை தடுக்கும் புரதத்தை, வெற்றிகரமாக கண்டு பிடித்து உள்ளோம். இந்த தடுப்பு மருந்துக்கு, பெயர் வைக்கப்படவில்லை. இந்த தடுப்பு மருந்துகளை, விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு செலுத்தி, ஆய்வு செய்யும் நடவடிக்கைகள், அமெரிக்கா ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, அடுத்தகட்டமாக நடைபெற உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.
சித்தாவில் நோய் எதிர்ப்பு மருந்து!
நம் பாரம்பரிய மருத்துவ பொருட்களை கொண்டு, நோய்த்தொற்று எதிர்ப்பு மருந்துகளை கண்டறியும் பணிகளிலும், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை இறங்கியுள்ளது.இதில், பல்கலை துணை வேந்தர், சுதா சேஷய்யன், நோய் பரவியல் துறை தலைவர், ஸ்ரீனிவாஸ், சித்த மருத்துவ துறை தலைவர், கபிலன், ஆராய்ச்சி ஆலோசகர், நவீன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.இது குறித்து, குழுவினர் கூறியதாவது:கொரோனா வைரசில், 200க்கும் மேற்பட்ட புரதக்கூறுகள் உள்ளன. அவற்றில், மூன்று முக்கிய புரதங்கள் தான், நம் உடலுக்குள் நோய் தொற்றாக சென்று, பல்கி பெருக காரணமாக உள்ளன. இந்த புரதங்களை தடுத்து, நோய் தொற்றை, அணுவுக்கு உள்ளே நுழைய விடாமல் எதிர்க்கும் ஆற்றல், பாரம்பரிய மருத்துவ பொருட்களில் உள்ளது. அதை, அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து கண்டறிந்து உள்ளோம்.

குறிப்பாக, கடுக்காய், கற்பூரவல்லியில் உள்ள, மருத்துவ வேதிக்கூறுகளின் வாயிலாக, கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க முடியும். மேலும், சிற்றரத்தை, அழிஞ்சில், ஏழிலைப்பாலை, நீர் பிரம்மி, திப்பிலி, கோரைக்கிழங்கு, அமிர்தக்கொடி, நொச்சி, ஆடாதொடை உள்ளிட்ட பொருட்களில் உள்ள, வேதிப்பொருட்கள், கொரோனா வைரசின் புரதங்களின் மீது, ஒரு தடுப்பு கவசமாக ஒட்டி, நம் உடலினுள் பரவாமல் தடுப்பது, ஆராய்ச்சியில் தெரிய வந்து உள்ளது.இதில் உள்ள வேதிப்பொருட்களில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தன்மையுடன், நோய் தொற்றை தடுக்கும் தன்மையும் உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.