இந்த ஊரடங்கு காலத்தில், வீட்டிலேயே அடைந்து இருக்கும் நிலையில், ஒரு வேலையுமின்றி, காலத்தை எப்படி கழிப்பது என்ற கேள்வியைதான் உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் கேட்கிறார்கள். அவர்களில் சிலருக்கு, இந்த தனிமைக் காலத்தை கடந்து செல்ல மதுப்பழக்கம் ஒரு வழியாக அமைகிறது. கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில், மார்ச் 21ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில், அமெரிக்காவின் மது விற்பனை 55% அதிகரித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன என்கிறது நீல்சன் என்னும் புள்ளி விவர ஆய்வு நிறுவனம்.
ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் பிரான்ஸிலும் இதே போன்ற ஏற்றம் காணப்படுவதால், குடிப்பழக்கத்தின் மூலம் ஆறுதல் தேடும் மக்களுக்கு புதிய உடல் சார்ந்த பிரச்சனைகள் வரலாம் என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.
இந்த உலகளாவிய தொற்றினை எதிர்கொள்வதில் ஏற்படும் மன அழுத்தத்தை எப்படி சமாளிப்பது என்பதை மிகத்தெளிவாக எடுத்துரைத்துள்ளது, உலக சுகாதார நிறுவனம். நம் மனதில் ஏற்படும் உணர்வுகளை குடி, புகைப் பிடித்தல், போதைப் பொருள்கள் ஆகியவற்றின் மூலமாக கையாளக்கூடாது என எச்சரித்துள்ளது அந்நிறுவனம். பொது முடக்கக் காலத்தில் அமெரிக்க, ஐரோப்பிய நிலைக்கு நேர்மாறாக, தென் ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற நாடுகள், மது விற்பனைக்கும் முழுத் தடை விதித்துள்ளன.
கேரளாவில் வசிக்கும் ரத்தீஷ் சுகுமாரன் போன்றவர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய சவால் ஆகியுள்ளது. "நான் அன்றாடம் குடிக்கும் பழக்கம் உடையவன். தினமும் குடிக்க முடியாததும், வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் இருப்பதும் எனக்கு மனச் சோர்வை அளிக்கின்றன." என்கிறார் ரத்தீஷ். 47வயதாகும் இவர், திரைத்துறையில் பணியாற்றுகிறார். இவர் தன்னை குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கருதுவதில்லை. "ஆனால், குடிக்காமல் இருப்பது, வருத்தமாகதான் உள்ளது" என்கிறார். இந்தியாவில் போடப்பட்ட 21 நாள் தடைக்காலம் குடியை நிறுத்த ஒரு வாய்ப்பு. இதுதான் எந்த அளவிற்கு மதுப்பழக்கதை சார்ந்து வாழ்கிறோம் என்று ரத்தீஷை சிந்திக்க வைத்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, குடிப்பழகத்தை விட்டுவிட முடிவு செய்துள்ளார் அவர்.
கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்தில் வசிக்கிறார் ரத்தீஷ். இந்தியாவின் பிற பகுதிகளைப்போலவே அங்கும், அத்தியாவசிய பொருட்களுக்கான கடையைத் தவிர, மற்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கடந்த 25 ஆண்டுகளாக குடிப்பழக்கம் உள்ள ரத்தீஷுக்கு, குடியில்லாத ஒரு வாழ்க்கையை முன்னெடுத்து செல்வது என்பது புதிய அனுபவம். " வேலை நாட்களில், மாலை வேளைகளில் குடிக்கும் நான், விடுமுறை நாட்களில், மதியம் முதல் குடிக்க தொடங்கிவிடுவேன்." அதிகம் பயணம் செய்பவர் என்பதால், கடந்த ஆறு மாதங்களில், கிட்டத்தட்ட தினமும் அவர் குடித்துள்ளார். " என்னோடு சேர்ந்து குடிப்பவர் யார் என்பதைப் பொருத்து, நான் குடிக்கும் அளவு மாறுபடும். பொதுவாக, ஐந்து அல்லது ஆறு முறை குடிப்பேன். இதில், ஓரிரண்டு கூட, குறையலாம்."
பெரும்பாலான இந்திய ஆண்களின் மனைவிகளைப் போலவே, இவரின் மனைவிக்கும் குடிக்கும் பழக்கம் இல்லை. அதேபோல, விட்டில் பார்ட்டிகள் நடத்தவும் அவர் ரத்தீஷை அனுமதிப்பதில்லை. பெரும்பான்மையான நேரங்களில், அவர் அருகில் இருக்கும் மதுக்கூடங்களில் நண்பர்களுடன் குடித்துள்ளார்.
பொறுமையை சோதிக்கும் நிலை
இந்தியாவில், மதுவிற்பனைக்கு என்று தனியாக கடைகள் இருக்கின்றன. இந்திய பிரதமர், நாட்டில் ஊரடங்கு விதித்த உடனேயே இவரின் நண்பர்கள், மது வாங்குவதற்காக கடைகளில் குவிந்தனர். ஆனால், ரத்தீஷ் அப்படி செய்யாமல், சுயக்கட்டுப்பாட்டை சோதிக்க முடிவு செய்தார். " அரசின் உத்தரவு வந்த பிறகு கூட, பல கடைகள் எங்கள் பகுதியில் திறந்துதான் இருந்தன. ஆனால், நான் சென்று வாங்க வேண்டாம் என்று இருந்துவிட்டேன்."
ஆனால், 7 நாட்கள் கடந்த பிறகு, சுயக்கட்டுப்பாட்டுக்கு சோதனை ஏற்பட்டது. மதுபானம் இல்லாமல் இருக்கக்கூடிய நிலையின் எல்லைக்கு தள்ளப்பட்டுவிட்டத்தை அவர் உணர்ந்தார்.
உதவி தேடுதல்
"கிட்டத்தட்ட 20 பேருக்கு போன் செய்து உதவி கேட்டேன். எப்படியாவது குடிக்க வேண்டும் என்பதுபோல இருந்தது. ஆனால், எந்தப் பயனும் இல்லை." இந்தப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு முயலக்கூடிய யாராக இருந்தாலும் அனுபவிக்கக்கூடிய விஷயங்களைதான் ரத்தீஷும் அனுபவித்தார். ஐக்கிய ராஜியத்தில், அரசு மதுபான கடைகளை மூடவில்லை. அதற்கு மாறாக அத்தியாவசிய கடைகளின் பட்டியலில் அதை இணைத்துள்ளது. இதன்மூலம், அக்கடைகள் ஊரடங்கு சமயங்களில் தொடர்ந்து இயங்கலாம்.
அதே சமயம், ஊரடங்கின் காரணமாக, குடிக்கும் பழக்கத்தை கைவிட முயன்று வருவோருக்கு, நேரில் சந்தித்து ஆலோசனை வழங்கும் சேவைகளை, அவர்களால் அணுக முடியாத நிலை உருவாகியுள்ளது. குடிக்கு அடிமையானவர்களுக்கு உதவும் வகையில், உறுதுணையாக இருக்கக்கூடிய கூட்டங்களை நடத்தும், ஆல்கஹால் அனானிமஸ் என்ற குழு, சமூக இடைவேளை தேவை என்ற சட்டம் வரத்தொடங்கியதுமே, தனது கூட்டங்களை ஆன்லைனில் நடத்த ஆரம்பித்து விட்டது. மார்ச் மாத தொடக்கத்திலிருந்து, அவர்களின் சேவைக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்வோரின் அளவு 22% அதிகரித்துள்ளது என்றும், தங்களில் ஆன்லைன் சாட் சேவையை மூன்று மடங்கு அதிக மக்கள் பயன்படுத்துவதாகவும், அந்நிறுவனம் கூறுகிறது.
ஓய்வற்ற நிலை
குடிப்பழக்கத்தை கைவிட்ட சில நண்பர்களிடன் தொலைபேசி மூலம் பேசினார் ரத்தீஷ். இவ்வாறு, குடித்தே ஆகவேண்டும் என்ற ஒரு உணர்வு இருப்பது மிகவும் இயல்பான ஒன்றுதான் என்று, நண்பர்கள் அவருக்கு நம்பிக்கை அளித்தனர்.
ஆனால், தன்னை அமைதிப்படுத்தும் வகையில் அந்த வார்த்தைகளில் அவ்வளவு தாக்கமில்லை என்கிறார் ரத்தீஷ். " என் உடலுக்கு, மதுபானம் குடித்தே ஆகவேண்டும் என்பது போல இருந்தது. என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. திரைப்படம் பார்க்க முயன்றேன். ஆனாலும், அது அந்த அளவிற்கு ஒரு கவனத்தை திசைதிருப்பவில்லை." அவர் எந்த அளவிற்கு இதிலிருந்து விலக வேண்டும் என்று முயன்றாரோ, அந்த அளவிற்கு அது கடினமாக இருந்தது.
"ஓர் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. மனதளவில் நான் மிகவும் கோபமாக இருந்தேன். அன்றைய இரவு மிகவும் நீண்டதாக இருந்தது. காலை கதிரவனைப் பார்த்த பிறகு தான், மனத்திற்கு நிம்மதியே ஏற்பட்டது" என்றார். அவருடன் இணைந்து மது அருந்தக்கூடிய சில நண்பர்கள், சமூக வலைதளங்களில், அவர்கள் மது அருந்தும் புகைப்படங்களை பதிவேற்றினர். அது அவருக்குள் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையெல்லாம், நண்பர்களிடம் ரத்தீஷ் பகிர்ந்துகொள்ள அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. "அவர்களை சபித்து கமெண்டில் எழுதினேன். உங்களை மின்னல் தாக்கும் என்று நம்புகிறேன் என்று அதில் எழுதினேன்." மதுபழக்கத்தை கைவிடும்போது ஏற்படக்கூடிய அறிகுறிகள், மிகவும் தீவிரமாக இருக்கக்கூடும். மனதளவில் ஏற்படும் அதிர்வுகள், அதிக கோபம் மற்றும் வலிப்பு ஏற்படுதல் ஆகியவை இவற்றில் அடங்கும். "மக்கள் ஏன் குடித்தே ஆகவேண்டும் என்பது போல இருக்கிறார்கள் என்பதை என்னால் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது." என்கிறார் ரத்தீஷ். ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்ட பிறகு, குடிப்பதற்கு மதுபானம் கிடைக்காத நிலையில், பொதுமக்களில் சிலர் தற்கொலை செய்துகொண்டது குறித்து கேரளாவின் உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன.
"பிணக்கூராய்வு செய்து அவர்களின் இறப்புக்கான காரணத்தைப் புரிந்துகொள்ள சரியான விசாரணை வேண்டும்" என்கிறார், அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கப் பொது செயலாளர் மருத்துவர் ஜி.எஸ். விஜயகிருஷ்ணன். ஊடகங்களில் வரும் செய்திகளை பார்த்த கேரள அரசு, குடிப்பழக்கத்திலிருந்து விலகுபவர்களுக்கு ஏற்படும் தீவிர அறிகுறிகள் யாருக்கெல்லாம் இருக்கின்றனவோ, அவர்களுக்கு குடிப்பதற்கான பரிந்துரையை எழுதிக்கொடுக்குமாறு கூறியது. "அரசின் அறிவிப்பு காரணமாக, பலர் மருத்துவர்களை அணுகி, தங்களுக்கு அந்த அனுமதிச்சீட்டு வேண்டும் என்று கேட்டனர். தங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்றால், தற்கொலை செய்துகொள்வோம் என்று கூட சிலர் மிரட்டினார்கள்." என்கிறார் மருத்துவர் விஜயகிருஷ்ணன்.
"இந்த ஆணையால், ஏற்கனவே கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடிவரும் மருத்துவர்களுக்கு மேலும் ஒரு புதிய சிக்கல் எழுந்தது." மருத்துவ நீதிக்கான மருத்துவர் சங்கங்கள், இவ்வாறான அனுமதிச்சீட்டை வழங்க மறுத்ததோடு, அரசின் உத்தரவிற்கான இடைக்கால தடையையும் கேரள நீதிமன்றத்தில் பெற்றுள்ளது. குடிப்பழக்கத்தை சார்ந்து இருத்தல் என்பது ஒரு நோய் என்றும், இவ்வாறு அனுமதி சான்றிதழ்கள் வழங்குவது என்பது, தங்களின் மருத்துவ நீதிக்கு எதிரானது என்றும் கூறுகிறார்கள் இந்த மருத்துவர்கள். இந்த பிரச்னையை சமாளிக்க என்ன செய்யலாம் என்று என்னிடம் ஒரு யோசனை கூட இல்லை என்கிறார் ரத்தீஷ். மீண்டும் மதுபான கடைகளை திறப்பது அதிக கூட்டம் ஒரே இடத்தில் கூட வழிவகுத்து, இந்த கொரோனா அச்சுறுத்தலுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பின்னுக்குத் தள்ளிவிடும். ஆன்லைனில் மதுவிற்பனை என்பது நல்ல யோசனை என்றாலும், ரத்தீஷ் சொல்வதுபோல, "இங்கு பல இடங்களில் இணைய வசதி இல்லை." என்கிறார் ரத்தீஷ்.
"இந்த வழியும், பணக்காரர்களுக்கே உதவியாக இருக்கும்." மீண்டும் ஆரம்பத்தில் இருந்த அனைத்து வாய்ப்புகளும் தீர்ந்துபோக, மீண்டும் பழைய குறிக்கோளுக்கு சென்றுள்ளார் ரத்தீஷ். "எதுவும் கிடைக்காத இந்த நாட்களை நான் நேர்மறையான வழிகளில் பயன்படுத்தப்போகிறேன். குடிக்காமல் இருக்க முடிகிறதா என்று பார்க்க போகிறேன்." நண்பர்களை சந்திக்கும் நேரங்களில், அரசியல், கிரிக்கெட், சினிமா என அனைத்து தலைப்புகளிலும் பேசும் சூழலை அவர் இழந்து தவிக்கிறார்.
" எனக்கு நண்பர்கள் என எவ்வளவு பேர் அதிகரிக்கிறார்களோ, அவ்வளவு குடிப்பேன். நான் எதை அதிகமாக இழப்பதாக உணர்கிறேன் என்று எனக்கு தெரியவேண்டும். நண்பர்களையா அல்லது என் குடியையா?" இந்த ஊரடங்கைத் தாண்டியும், தனது இந்த முடிவு நீடிக்கும் என்று அவர் நம்புகிறார். " என் நண்பர்களை சந்திக்க வேண்டும். அவர்களோடு குடிக்காமல், தெளிவாகப் பழக வேண்டும் என்று விரும்புகிறேன்." எனக் கூறுகிறார் ரத்தீஷ்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.