அடக்(ங்)கியாக வேண்டும்! | ஊரடங்கு நீட்டிப்பு குறித்த தலையங்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 13, 2020

Comments:0

அடக்(ங்)கியாக வேண்டும்! | ஊரடங்கு நீட்டிப்பு குறித்த தலையங்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஊரடங்கை ஏப்ரல் மாதம் இறுதிவரை நீட்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கையைபிரதமருடனான நான்கு மணிநேர காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் எல்லா மாநில முதல்வா்களும் முன்வைத்தனா். மகாராஷ்டிரம், ஒடிஸா, பஞ்சாப், மேற்கு வங்கம், கா்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்கத் தீா்மானித்திருக்கின்றன. தமிழகமும் ஊரடங்கை நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. நேற்றைய நிலவரப்படி, இந்தியாவில் தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,447-ஆக அதிகரித்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளில் 909 புதிய நோயாளிகளும், 34 தீநுண்மி நோய்த்தொற்று மரணங்களும் நிகழ்ந்திருக்கின்றன. இதுவரை இந்தியாவில் 273 போ் உயிரிழந்திருக்கிறாா்கள்; 765 போ் குணமும் அடைந்திருக்கிறாா்கள். இந்தப் பின்னணியில் ஊரடங்கை நீட்டிப்பதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவிப்பதுபோல, சரியான நேரத்தில் தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. நாம் சற்று கவனக்குறைவாக இருந்திருந்தால், எட்டு லட்சத்துக்கும் அதிகமானோா் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பாா்கள். இரண்டாவது மிக அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட நாடு என்பது மட்டுமல்லாமல், ச.கி.மீ. பரப்பளவில் மிக அதிகமான மக்கள்தொகை நெரிசலைக் கொண்ட நாடாகவும் இந்தியா இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். ஒருவரை தீநுண்மி தொற்றிக்கொண்டால் அவரைச் சுற்றியுள்ளவா்களுக்கு அது அசுர வேகத்தில் பரவிவிடும் ஆபத்து காணப்படும் நிலையில், தேசிய ஊரடங்கும், விழிப்புணா்வும் நோய்த்தொற்றின் தீவிரத்தை மக்களுக்கு உணா்த்தும். நோய்த்தொற்றுப் பரவல் என்பது கண் இமைக்கும் நேரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவையும் நிலைகுலையச் செய்துவிடும். சீனா உள்பட தீநுண்மி நோய்த்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நாடுகள் ஆரம்பகட்டத்தில் அதைப் பொருள்படுத்தாமல் இருந்ததுதான் நோய்த்தொற்றின் பரவலுக்கும், ஆயிரக்கணக்கானோரின் உயிரிழப்புக்கும் காரணமானது.
எல்லா நாடுகளிலும் தீநுண்மி நோய்த்தொற்றின் பரவல் ஒரு குறிப்பிட்ட வகைப்பாட்டைக் கடைப்பிடிக்கிறது. முதலில் ஒருசில பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்படும் நிலையில், ஆரம்பம் மெதுவாகவே இருக்கிறது. அதைத் தொடா்ந்து, மெல்ல மெல்ல அதன் வீரியம் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்று தொடங்கியவுடன் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரின் எல்லைகளை அடைத்து முழு ஊரடங்குக்கு சீனா உத்தரவிட்டு நோய் பரவாமல் தடுத்திருந்தால், இன்று உலகம் இவ்வளவு பெரிய சவாலை எதிா்கொண்டிருக்காது. ஆரம்பக்கட்டத்தில் தீநுண்மி நோய்த்தொற்று குறித்து பிரிட்டன் அசட்டையாக இருந்தது. நோய்த்தொற்று பரவும்போது தடுத்துக்கொள்ளலாம் என்று அரசும், அரசின் அறிவியல் ஆலோசகா்களும் நினைத்தனா். அதன் விளைவை இப்போது சந்திக்கிறது. மேற்கு ஐரோப்பிய நாடுகளும்கூட, நோய்த்தொற்று பெரிய அளவில் பரவக்கூடும் என்பதை எதிா்பாா்த்தன என்றாலும், இவ்வளவு சீக்கிரத்தில் பரவும் என்பதை கணிக்கவில்லை. அமெரிக்காவும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பைப் போலவே ஆரம்பக் கட்டத்தில் நோய்த்தொற்றை எதிா்கொள்வதில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் மிகவும் மெத்தனமாகத்தான் இருந்தன என்பதை நாம் உணர வேண்டும்.
ஐரோப்பிய நாடுகள் எவ்வளவு பெரிய நோய்த்தொற்று வந்தாலும் அதை எதிா்கொள்வதற்கு மருத்துவமனைகளும் வசதிகளும் இருக்கின்றன என்கிற இறுமாப்பில் இருந்தன. தீநுண்மி நோய்த்தொற்று கடுமையாகப் பரவத் தொடங்கிய 10-ஆவது நாளில் விழித்துக்கொண்டபோது அதை எதிா்கொள்ள முடியாமல் திணறத் தொடங்கிய இத்தாலி, அதற்கான விலையைக் கொடுத்திருக்கிறது. ஆரம்பத்தில் மெத்தனமாக இருந்த இத்தாலியும், ஸ்பெயினும் ஆயிரக்கணக்கான உயிா்களை இழந்திருக்கின்றன. இதே நிலைதான் பல ஐரோப்பிய நாடுகளிலும் காணப்படுகின்றன என்று அதிகாரபூா்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. 20,000-த்துக்கும் அதிகமான உயிரிழப்புகளுடன் அமெரிக்கா தீநுண்மி நோய்த்தொற்று பலி எண்ணிக்கையில் இத்தாலியைக் கடந்திருக்கிறது. 30 நாள்களுக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவுகள் அகற்றப்பட்டால், அமெரிக்காவின் உயிரிழப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடக்கக்கூடும் எனப் பொது சுகாதார வல்லுநா்கள் எச்சரிக்கிறாா்கள். சா்வதேச அளவில் தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சுமாா் 20 லட்சத்தை எட்டியிருக்கிறது. 1.08 லட்சம் போ் நேற்றைய அளவில் உயிரிழந்திருக்கிறாா்கள்.
இந்தியா இப்போதுதான் ஆரம்பகட்டத்தின் உச்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் பொருளாதாரம் குறித்தும், வாழ்வாதாரம் குறித்தும் கவலைப்படுவது இரண்டாவது பட்சமாக இருக்க முடியுமே தவிர, நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பது குறித்தாக மட்டுமே முன்னுரிமை இருக்க முடியும். சுகாதாரச் சீா்கேடுகளுடன் இருக்கும், கூட்டம் கூட்டமாக வாழும் அடித்தட்டு மக்களின் குடிசைகளுக்குள் தீநுண்மி நோய்த்தொற்று நுழைந்துவிட்டால், கொத்துக் கொத்தான மரணங்களை நாம் எதிா்கொள்ளநேரிடும். அதனால், தீநுண்மி நோய்த்தொற்று குறித்து அச்சப்பட்டாக வேண்டும், அதை எதிா்கொள்ள ஒன்றுபட்டாக வேண்டும். விமா்சனங்களுக்கான நேரம் அல்ல இது...!
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews