இந்தியா சுதந்திரமானதுதான்.. ஆனால் பள்ளிகள்... - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 08, 2020

Comments:0

இந்தியா சுதந்திரமானதுதான்.. ஆனால் பள்ளிகள்...

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்தியா வந்த அமெரிக்க அதிபர், இந்தியாவை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளி விட்டுப் போனதில், எல்லோரும் சந்தோஷம். ஆனால், ஒரேயடியாக அகமகிழ்ந்து போய்விட வேண்டாம். எங்கு திரும்பினாலும் நமது எதிர்பார்ப்புக்கும் உண்மையான சூழலுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது. பள்ளிகளை எடுத்துக் கொண்டால் இது மிகப் பெரியதாக இருக்கிறது. கடந்த 70 ஆண்டுகளாக, நமது பிள்ளைகள் சுதந்திரமான சிந்தனை, நம்பிக்கையுடன் புதுமை இந்தியர்களாக வளர வேண்டும் என விரும்பி இருக்கிறோம். ஆனால் நமது கல்வி முறை அவர்களை அதல பாதாளத்தில் தள்ளி, சக்தி இழந்தவர்களாக மாற்றி விடுகிறது. சிறந்த பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க ஒவ்வொரு பெற்றோரும் நீண்ட வரிசையில் நிற்பதைப்பார்க்கும்போது, மனம் கனக்கிறது. சிறந்த பள்ளிகளில் போதுமான இடம் இல்லாததால், பெற்றோர்கள் ஏமாற்றம் அடைய நேரிடுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் கல்வி தொடர்பான ஆண்டறிக்கையில், 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் பாதிப் பேரால் மட்டுமே ஒரு பத்தியை படிக்கவோ அல்லது இரண்டாம் வகுப்பு கணக்கை செய்யவோ முடிகிறது என்ற அவல செய்தியை பார்க்கலாம். சில மாநிலங்களில் 10 சதவீதத்துக்கும் குறைவான ஆசிரியர்களே, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். உ.பி., பிஹார் போன்ற மாநிலங்களில் நான்கு ஆசிரியர்களில் 3 பேருக்கு மட்டுமே 5-ம் வகுப்பு பாடத்தில் உள்ள சதவீதம் கண்டுபிடிக்கும் கணக்கை செய்யத் தெரிந்து இருக்கிறது. அதனால்தான் வாசிப்பு, அறிவியல் மற்றும் கணக்கில் மாணவர்களின் அறிவை அறியும் சர்வதேச மாணவர் அறிவுத் திறன் சோதனை தேர்வின் அடிப்படையில், 74 நாடுகளின் பட்டியலில் இந்திய மாணவர்கள் 73-ம் இடத்தில் உள்ளனர். கிர்கிஸ்தான் மட்டுமே நம்மை விட பின்தங்கி இருக்கிறது. தரமான அரசு பள்ளிகள் குறைவாக இருப்பதால்தான், பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடிச் செல்ல வேண்டியிருக்கிறது. 2011 முதல் 2015-ம்ஆண்டு வரை அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 1.10 கோடி அளவுக்கு குறைந்துள்ளது. இதே காலத்தில் தனியார் பள்ளிகளில் 1.60 கோடி மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். இதன்படி பார்த்தால் 2020-ல் கூடுதலாக 1.30 லட்சம் தனியார் பள்ளிகள் தேவை. ஆனால் புதிதாக எதுவும் திறக்கப்படவில்லை. ஏன்? ஏகப்பட்ட காரணங்கள் இருக்கிறது. நாணயமான யாருக்கும் பள்ளி தொடங்குவது என்பது மிகவும் கடினமான விஷயம். மாநிலங்களைப் பொருத்து 30 முதல் 45 அனுமதிகள் தேவைப்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை லஞ்சம் கொடுத்தால்தான் கிடைக்கும். இந்த பகுதியில் பள்ளி தேவை என்பதற்கான சான்றிதழுக்கும், பள்ளி இயக்குநரகத்தின் அங்கீகாரத்துக்கும் அதிக லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது.
பள்ளிகள் பற்றாக்குறைக்கு மற்றொரு காரணம் கட்டணக் கட்டுப்பாடு. கல்வி உரிமைச் சட்டத்தில்தான் பிரச்சினை தொடங்குகிறது. அரசு பள்ளிகள் சரியில்லை என்பதை உணர்ந்த அரசு, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கச் சொல்கிறது. நல்ல யோசனைதான். ஆனால் சரியாக செயல்படுத்தப்படுவதில்லை. இந்த 25 சதவீத ஏழை மாணவர்களுக்கான கல்விச் செலவை மாநில அரசுகள் தனியார் பள்ளிகளுக்கு திருப்பித் தருவதில்லை என்பதால், மீதமுள்ள 75 சதவீத மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. இதனால் பெற்றோரின் கோபத்தை சமாளிக்க வேண்டியுள்ளது. மேலும் பல மாநில அரசுகள் கல்விக் கட்டணம் மீது கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால் பள்ளிகளின் நிதி நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. இதனால் எடுக்கப்படும் சிக்கன நடவடிக்கைகளால் பள்ளிகளின் தரம் குறைகிறது. சில பள்ளிகள் செயல்பட முடியாமல் மூடப்பட்டு விட்டன. தனியார் பள்ளிகள் சுதந்திரம் மீதான சமீபத்திய தாக்குதல் என்னவென்றால், தனியார் பாடப் புத்தகங்கள் மீதான தடை. அரசு வெளியிடும் என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு மனித வள மேம்பாட்டுத் துறை கடந்த 2015-ம் ஆண்டில் உத்தரவிட்டது. புத்தகங்களின் விலை குறைவால், செலவு குறைந்தாலும், தாமதமாக சப்ளை செய்யப்படுவதால் கல்வியின் தரமும் குறைந்துவிட்டதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். 2015-ல் 10 மாநிலங்களில் மேற்கொண்ட ஆய்வில் பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்ற உண்மையை ஆக்ஸ்பேம் என்ற தொண்டு அமைப்பு வெளியிட்டது. என்சிஇஆர்டி புத்தகங்களின் தரம் உயர்ந்தாலும்,பழைய மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் முறைதான் தொடர்கிறது. மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்தும் ஹலோ இங்கிலீஸ், கூகுள் போலோ போன்ற செயலிகளைப் பற்றி ஆசிரியர்களுக்கே தெரியவில்லை. தனியார் பாடப் புத்தகங்கள் மீதான தடை காரணமாக இந்திய மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கும் என கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக டிஜிட்டல் மூலமான கற்றல் குறைந்து, அறிவுசார் பொருளாதாரத்தின் வேலை வாய்ப்புகள் மறுக்கப்படும் சூழல் எழுந்துள்ளது.
இந்தியா குடியரசு நாடாகி 70 ஆண்டுகளாகி விட்டது. இப்போதாவது, தனியார் பள்ளிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும். 1991-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்கள், தொழில் துறைக்கு சுதந்திரத்தை வழங்கின. ஆனால், பள்ளிகள் இன்னமும் லைசன்ஸ் ராஜ்ஜியத்தால் சிரமப்பட்டு வருகின்றன. இத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் இந்தியாவின் வளர்ச்சிக்கு தனியார் பள்ளிகளின் பங்கு அளவிட முடியாதது. இங்கு படித்தவர்கள் உயர் பதவிகளிலும், சிவில் சர்வீஸ் பணிகளிலும், பல்வேறு தொழில்களிலும் சிறந்து விளங்குகிறார்கள். கம்ப்யூட்டர் சாப்ட்வேர் துறையில் உலக அளவில் இந்தியா சிறப்பான இடத்தைப் பிடிக்க இவர்களே காரணம். தனியார் பள்ளிகள் லாபம் ஈட்டுவதைத் தடை செய்யும் போலி பொதுவுடமை மனப்பான்மையை அரசு கைவிட இதுவே சரியான நேரம். லாபத்தோடு இயங்கினால்தான் பள்ளிகள் செயல்பட முடியும். தரத்தை மேம்படுத்தவும் முடியும். சிறந்த பள்ளிகளுக்கு தேவை அதிகம் இருப்பதால் இவை விரிவாக்கமும் செய்ய முடியும். லாப நோக்கமற்ற நிலையில் இருந்து லாப நோக்கோடு மாறும்போது, மிகப் பெரிய புரட்சியைக் கொண்டு வர முடியும்.கல்வித் துறையில் முதலீடுகள் அதிகரிக்கும். பள்ளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். தரமும் உயரும். குடிநீருக்கும் மின்சாரத்துக்கும் கட்டணம் செலுத்துவதுபோல், இந்தியர்கள் சிறந்த கல்விக்கும் கட்டணம் செலுத்த தயாராக இருக்கிறார்கள். சுதந்திரமான ஒரு நாட்டில் சிறந்த பாடப் புத்தகங்களை வாங்கவும் நல்ல பள்ளிக்கு கூடுதல் கட்டணம் செலுத்தவும் தயாராக இருக்கும் ஒருவரை ஏன் தடுக்க வேண்டும்?
தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் விஷயத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முதல் கட்டமாக, தனியார் பள்ளிகளையும் அரசு பள்ளிகளையும் பாரபட்சம் பார்க்காமல் ஒன்றாகக் கருதி ஒழுங்குபடுத்த வேண்டும். அடுத்ததாக, அரசு பள்ளிகளை சிறப்பாக நடத்த வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு சுதந்திரம் கொடுக்கவும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் இதுவே சரியான நேரம். அப்போதுதான் தனியார் பள்ளிகளின் வாசலில் சேர்க்கைக்காக நிற்கும் நீண்ட வரிசை குறையும். நமது விருப்பமும் சாத்தியமாகும். அப்படி நடந்தால், அடுத்த முறை இந்தியா வரும் அமெரிக்க அதிபர், இந்தியாவை அதன் தரமான கல்விக்காக கண்டிப்பாக பாராட்டுவார் என எதிர்பார்க்கலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews