பள்ளி கல்வி செயலர் பிரதீப் மாற்றம் ஏன்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 07, 2020

Comments:0

பள்ளி கல்வி செயலர் பிரதீப் மாற்றம் ஏன்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளி கல்வி துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ்,இரண்டரை ஆண்டுகளுக்கு பின், அந்த துறையில் இருந்து திடீரென மாற்றப்பட்டது, பள்ளி கல்வியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சீனியரான செங்கோட்டையன், பள்ளி கல்வி அமைச்சரானதும், மாற்றங்களை செய்து, ஆட்சிக்கு நல்ல பெயர் வாங்க விரும்பினார்.
இதற்காக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயசந்திரனை, பள்ளி கல்வி செயலராக்கினார். அவரது எண்ணம் போல, உதயசந்திரன் எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்தினார். பாடத்திட்டத்தில் மாற்றம், 'ரேங்கிங்' முறை ஒழிப்பு, ஆசிரியர்களுக்கு வெளிப்படையான இடமாறுதல் கவுன்சிலிங், மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி, பிளஸ் 1ல் பொதுத்தேர்வு அறிமுகம் என, பல திட்டங்களை அறிமுகம் செய்தார். ஆனால், உதயசந்திரன் மீதான கருத்து வேறுபாட்டால், 2017 ஆகஸ்டில், பள்ளி கல்வியின் முதன்மைசெயலராக, பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டார்.பாடத்திட்ட பணிகளை மட்டும், உதயசந்திரன் கவனித்தார். அந்த பணிகள் முடிந்ததும், உதயசந்திரன், தொல்லியல் துறை கமிஷனராக மாற்றப்பட்டார்.
இதையடுத்து, முதன்மை செயலர் பிரதீப், தன் முழு கட்டுப்பாட்டில் துறையை கொண்டு வந்தார்; ஒவ்வொரு நாளும் புதிய புதிய உத்தரவுகளை பிறப்பித்தார். பிளஸ் 1 தேர்வில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முறையில் திடீர் மாற்றம்.இயக்குனரக அதிகாரிகள் அடிக்கடி மாற்றம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றால் மட்டுமே, 'லேப்டாப்' வழங்கப்படும் என, கட்டுப்பாடு விதித்தது போன்றவை, விமர்சனங்களை ஏற்படுத்தின. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவுகளை நிறைவேற்றுவதில், அதிக ஆர்வம் காட்டினார். அந்த வகையில், ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்பட்டன.அரசு தொடக்க பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைத்தல், 10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள, தொடக்க பள்ளிகளை மூடும் முடிவு, 'ஸ்டிரைக்கில்' ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு விருது வழங்க தடை என, பிரதீப் யாதவின் உத்தரவுகள், கல்வி துறையில் சலசலப்பை ஏற்படுத்தின.
அங்கன்வாடிகளில், எல்.கே.ஜி., என்ற மழலையர் வகுப்புகள் துவங்கி, அங்கு, துவக்க பள்ளி ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என, உத்தரவிட்டார். இந்த உத்தரவையும், ஆசிரியர்கள் எதிர்த்தனர். 'நீட்' நுழைவு தேர்வுக்கு எதிராக, தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அந்த தேர்வுக்கு, அரசே சிறப்பு பயிற்சி அளித்தது போன்றவை, சர்ச்சையை ஏற்படுத்தின. பல அரசு பள்ளிகள், மாதிரி பள்ளிகளாக மாற்றப்பட்டு, அவற்றின் நிர்வாகத்தில், தனியார் நிறுவனத்தினரின் தலையீடு அதிகரித்தது. இறுதியாக, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொது தேர்வு நடத்தப்படும் என, உத்தரவிட்டார். பொது தேர்வுகளை எழுத, 17 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களே தயங்கும் நிலையில், 10 வயது குழந்தைகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு, அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. எனவே, ஐந்து, எட்டாம் வகுப்பு பொது தேர்வு அரசாணையை ரத்து செய்ய, அமைச்சர் விரும்பியபோதும், செயலர் ஒப்புக் கொள்ளவில்லை என, கூறப்படுகிறது.
இதையடுத்து தான், சில நாட்களுக்கு முன், அமைச்சரவை கூட்டம் முடிந்ததும், முதல்வர் இ.பி.எஸ்.சிடம், அமைச்சர்செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். முதல்வரின் ஒப்புதலுடன், தேர்வை ரத்து செய்வதாக, அமைச்சர் அலுவலகமே நேரடியாக அறிவித்தது. அப்போதே, பிரதீப் யாதவின் துறை மாற்றம் முடிவெடுக்கப்பட்டது என, தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தீரஜ்குமார், 1993ம் ஆண்டு, தமிழக பிரிவை சேர்ந்தவர். அமைச்சர் செங்கோட்டையனிடம் உள்ள, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலராக, தீரஜ் குமார் உள்ளார். அமைச்சரின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்ப, அவர் செயல்படுவதால், அவரையே பள்ளி கல்வித் துறை செயலராக நியமிக்க, அமைச்சர் செங்கோட்டையன் பரிந்துரைத்து உள்ளார்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews