Search This Blog
Wednesday, January 08, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பெற்றோர் ஆதரவோடு அரசுப் பள்ளியிலோ அல்லது ஆங்கிலப் பள்ளியிலோ படிக்கும் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பு, ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டி, சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்தால் அது வரவேற்கத்தக்கது. ஆனால், என்ன படிக்கிறாய், எப்போது தேர்வு என்றுகூட கேட்க ஆதரவற்ற பிள்ளைகளின் சாதனை பாராட்டுதலுக்குரியது. அப்படி ஒரு சாதனை படைத்துள்ளார் புதுக்கோட்டை மாவட்டம் ஆதனங்கோட்டையைச் சேர்ந்த கருப்பையா அழகுவள்ளி தம்பதியரின் மகள் ஜெயலட்சுமி.
அரசுப் பள்ளியில் பிளஸ்-1 படித்துவரும் இவர் உலகளாவிய கணினிப் போட்டியில் தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையம் செல்ல தேர்வாகியுள்ளார். வறுமையின் சூழலிலும் தனது திறமைக்குக் கிடைத்த வாய்ப்பால் தேர்வெழுதி வெற்றி பெற்றதையும், அவரது கல்வி சார்ந்த செயல்பாடு மற்றும் விருப்பங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.‘‘புதுக்கோட்டையிலுள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 (உயிர் கணிதவியல்) படித்துவருகிறேன். நான் ஐ.எஸ்.எஸ். 2020 என்ற எக்ஸாம் எழுதி நாசாவுக்குச் செல்ல செலக்ட்டாகியிருப்பது மகிழ்ச்சி. பொதுவாகவே செய்தித்தாள்கள், புத்தகங்கள் வாசிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம்.
இந்த எக்ஸாம் எப்படி எழுதினேனென்றால், ஒருமுறை பள்ளியில் கேரம் விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது அருகே தண்ணீரில் ஒரு பேப்பர் விழுந்து கிடந்தது. பேப்பரை எடுத்துப் படித்துப் பார்த்தேன். அதில், கடந்த ஆண்டு மதுரையிலிருந்து தான்யா என்ற ஒரு மாணவி நாசாவுக்குச் செல்ல தேர்வாகியிருந்தது குறித்த கட்டுரை இருந்தது. அந்தக் கட்டுரையின் கீழே ஒரு வெப்சைட் அட்ரஸ் (கோபர்க்குரு என்ற இணையம்) இருந்தது. அதைப் பார்த்துவிட்டு நாசாவுக்குப் போக நானும் விருப்பப்பட்டேன்.’’ என்று சொல்லும் ஜெயலட்சுமி விருப்பம் வெற்றி பெற செயல்பட்ட விதத்தையும் விவரித்தார்.
‘‘பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்ததும் என்னுடைய சித்தப்பாவிடம் மொபைல் போனை வாங்கி அந்த வெப்சைட் முகவரிக்கு சென்று எல்லா தகவல்களையும் படித்துப் பார்த்தேன். பிறகு நானும் என் பெயரை ரிஜிஸ்ட்டர் பண்ணினேன். ஒருவாரம் கழித்து கணினி மூலம் எக்ஸாமும் எழுதினேன். ஐம்பது ஒன்வேர்டு மற்றும் ஐந்து டென் மார்க் கொஸ்டீன் கேட்டிருந்தார்கள். ஐம்பது ஒன்வேர்டும் சயின்ஸ், சோஷியல், ஜெனரல் நாலேட்ஜுமாக இருந்தது. ஐந்து டென் மார்க்கும் எனது வாழ்க்கைச்சூழல் எப்படி முடிவெடுக்கும் என்பது பற்றியிருந்தது. எக்ஸாம் எழுதியதில் பெஸ்ட் பெர்ஃபாமராகத் தேர்வாகியிருக்கிறேன்.
நாசாவுக்குச் செல்ல ஆகும் செலவை இணைய நிறுவனம் ஏற்றுக்கொள்ளுமென்றாலும்… நாசாவிற்குச் செல்லும் மாணவர்களின் கைகளிலிருந்தும் ரூ.1.7 லட்சம் செலவு ஆகும் என்ற நிலை உள்ளது. படிப்பிற்கே பெரும் போராட்டத்திற்கு மத்தியில் சிரமப்பட்டுப் பயின்றுவரும் நிலையில், இவ்வளவு தொகையைச் செலவு செய்ய இயலாது என்று அமைதியாகிவிட்டேன். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அவர்களால் இயன்ற அளவு உதவி செய்தனர். எனது ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களின் உதவியோடு பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் சென்றேன்.அங்கு பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரி, ‘எதற்காகப் பாஸ்போர்ட் வாங்குகிறீர்கள்?’ என்று கேட்டார்.
நாசாவிற்குச் செல்லும் வாய்ப்பு குறித்தும், எனது குடும்பச் சூழ்நிலை குறித்தும், நான் கட்டாயம் செல்வேனா என்பதும் எனக்குத் தெரியாது, முயற்சியாகச் செய்கிறேன் என்று தெரிவித்தேன். இதனைக் கேட்ட அந்த அதிகாரி ரூ.500 கொடுத்து உதவி செய்தார். இதுகுறித்த விவரத்தை தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் உதவி கேட்டு மனுவும் கொடுத்தேன். அவர், நான் நாசா செல்வதற்கு ஒரு என்.ஜி.ஓ. மூலம் ஏற்பாடு செய்துள்ளார்.’’ என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார் மாணவி ஜெயலட்சுமி. ‘‘இந்த எக்ஸாம் உலகம் முழுவதும் நடத்தப்பட்ட எக்ஸாம். என்னைப்போல் இன்னும் நிறையபேர் செலக்டாகியிருப்பார்கள்.
இந்த எக்ஸாம் எழுத எப்படி ஆர்வம் ஏற்பட்டதென்றால், சின்ன வயசிலிருந்தே ராக்கெட், ஸ்பேஸ் சயின்ஸ் பற்றிப் படிப்பது ரொம்பப் பிடிக்கும். கலாம் ரொம்ப பிடிக்கும். ஃபர்ஸ்ட் ஸ்பேஸ் சயின்ஸ் படிக்கணும், விண்வெளி வீரராகணும் அப்படின்னு ஓர் ஆசை இருந்துச்சி. பட் அதுக்கு ரொம்ப செலவாகும். அது நம்மால படிக்க முடியாதுன்னு அந்த ஆசையை இடையிலேயே கைவிட்டுட்டேன். சரி நாசாவுக்குப் போகலாம், இந்தக் காம்பிடேஷனில் செலக்ட்டாகி நாசாவுக்குக் கூட்டிட்டுப் போவாங்கன்னு... நாசா-ங்கறத பார்த்தவுடனேயே இந்த எக்ஸாம் எழுதணும்னு ஆசை வந்திடுச்சி.
இந்த எக்ஸாம்ல தேர்வானா ஸ்பேஸ் சயின்ஸ் படிக்கலாம், விண்வெளி வீரர் ஆகலாம்னு தெரிஞ்சிகிட்டு எக்ஸாம் எழுதி செகண்ட் பெஸ்ட் பெர்ஃபாமராக வந்திருக்கேன். எங்கள் வீட்டைப் பொறுத்தவரை நான், எங்க அம்மா, என்னுடைய தம்பி ஆகியோர் இருக்கிறோம். எங்க அம்மா மனநிலை சரியில்லாதவங்க. அதனால அப்பா வேற ஒரு மேரேஜ் பண்ணிகிட்டாங்க. நான் பிளஸ்- 1 படிக்கிறேன், என் தம்பி எட்டாவது படிக்கிறான். எங்க ஊருல முந்திரிப் பருப்பு ஃபேமஸ். எங்கள் ஊரில் கம்பெனிக்காரர்களிடமிருந்து முந்திரியை வாங்கிவந்து உடைத்து கொடுக்கும் வேலை செய்வார்கள். நானும் அந்த வேலை செய்வேன். அதுல கிடைக்கிற காசை வைத்து நானும் என் தம்பியும் எங்களுக்குத் தேவையான நோட்புக்ஸ் வாங்கிக்குவோம்.
அப்புறம் சித்தப்பாவிடம் கேட்டால், அவங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவாங்க. இப்படிப் பல கஷ்டங்களுக்கு மத்தியிலதான் எனக்கொரு வாய்ப்புக் கிடைச்சிருக்கு. அதை நான் பயன்படுத்திக்கிட்டேன். இதுபோல மத்தவங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். அவங்களோட குடும்பக் கஷ்டம் சூழ்நிலை காரணமாக விட்டுவிடுவார்கள், அதுமாதிரி யாரும் விடாதீங்க. முயற்சி என்பது விதை போல. அதை விதைத்துக்கொண்டேயிருங்கள். அது முளைத்தால் மரம், இல்லையெனில் அது மண்ணிற்கு உரம்’’ என்று தன்னம்பிக்கையோடு தத்துவார்த்தமும் வெளிப்பட்டது ஜெயலட்சுமியின் பேச்சில். ‘‘2020 மே மாதம் நாசாவுக்குப் போகப்போகிறேன். அங்கு நடைபெறவுள்ள தேர்வில் பங்கேற்று முதல் பரிசை பெற வேண்டும் என்பது என் ஆசை.
2020 என்றவுடன் எல்லோருக்கும் இந்தியா வல்லரசாகும் என்ற கலாம் அய்யாதான் நினைவுக்கு வருவாங்க. அந்த 2020ல நான் நாசாவுக்குப் போகப்போறேங்கிறது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அமெரிக்கா போகறதுக்கு என்னுடைய ஸ்கூல் ஹெச்.எம்., டீச்சர்ஸ், என்னுடன் ஸ்கூலில் படிப்பவர்கள், என்னுடைய சித்தப்பா, அண்ணன் எல்லோருமே நிறைய சப்போர்ட் பண்ணியிருக்காங்க. எங்களுடைய மாவட்ட கலெக்டர் மேடம், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள் என எல்லோருமே ஒவ்வொரு வகையில் உதவியிருக்கிறார்கள். அவர்கள் அத்தனைபேருக்கும் எனது நன்றி’’ என்று கூறும் மாணவி ஜெயலட்சுமியின் எண்ணம் ஈடேற நாமும் வாழ்த்துவோம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
2020-ல் நாசா செல்லும் அரசுப் பள்ளி மாணவி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.