'காவலன்' செயலிக்கு சபாஷ்! பெண்கள் பயன்படுத்த வேண்டுகோள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 08, 2019

Comments:0

'காவலன்' செயலிக்கு சபாஷ்! பெண்கள் பயன்படுத்த வேண்டுகோள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழக காவல் துறை அறிமுகம் செய்துள்ள, 'காவலன்' செயலியால், சென்னையில் முதல் பலன் கிடைத்துள்ளது. வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், அத்துமீறி நடக்க முயன்ற சம்பவத்தில், 'காவலன்' செயலியில் பெறப்பட்ட புகாரில், ஐந்து நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இருவரை கைது செய்துள்ளனர். 'இந்த செயலியை, அனைத்து பெண்களும் பயன்படுத்த வேண்டும்' என, டி.ஜி.பி., திரிபாதி வேண்டுகோள் விடுத்துள்ளார். தெலுங்கானா மாநிலம், ஷம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த, 26 வயது பெண் மருத்துவரை, லாரி தொழிலாளர்கள் கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்தனர். பின், பெண் மருத்துவரை கொலை செய்து, தீ வைத்து எரித்து தப்பினர். இதில், குற்றஞ்சாட்டப்பட்ட, லாரி தொழிலாளர்கள் முகமது ஆரீப், 26, ஜொலு நவீன், 20, ஜொலு சிவா, 20, சென்னகேசவலு, 20 ஆகியோரை, சைபராபாத் போலீசார் சுட்டுக் கொன்றனர். விழிப்புணர்வு இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, காவல் துறை, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள, 'காவலன்' மொபைல்போன் செயலி குறித்து, பெண்கள், முதியோர், சிறுவர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, டி.ஜி.பி., திரிபாதி, அனைத்து போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
பாதுகாப்பு அதன்படி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், நேற்று முன்தினம், பெண்களிடம், 'காவலன்' செயலி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழகம் முழுவதும், மாவட்ட எஸ்.பி.,க்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் பயனாக, 'காவலன்' செயலியை, ஒரு வாரத்தில், 1.10 லட்சம் பேர், புதிதாக பதிவிறக்கம் செய்துள்ளனர். இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், 'காவலன்' செயலியை, நான்கு லட்சம் பேர் பயன்படுத்தி வந்தனர். தற்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக, ஒரு வாரத்தில் மேலும், 1.10 லட்சம் பேர், பதிவிறக்கம் செய்துள்ளனர்.
அதன்படி, 5.10 லட்சம் பேர், தற்போது காவலன் செயலியை பயன்படுத்துகின்றனர். அதில், 11 ஆயிரம் புகார்கள் அளிக்கப்பட்டு, தீர்வுகள் காணப்பட்டு உள்ளன. தினமும் சராசரியாக, 25 முதல், 50 பேர் வரை, காவலன் செயலியில் புகார் அளிக்கின்றனர். காவலன் செயலியை, மேலும் பலர் பதிவிறக்கம் செய்வர் என்ற, எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர். இந்நிலையில், சென்னையில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், தவறாக நடக்க முயன்றது குறித்து, காவலன் செயலியில், பெண் கொடுத்த புகாரில், ஐந்து நிமிடத்தில் சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார், இருவரை கைது செய்தனர். சென்னை, கொருக்குப்பேட்டை, சி.பி., சாலை, வித்யாசாகர் ஓஸ்வால் கார்டனைச் சேர்ந்தவர், அனிதா சுரானா, 47. இவர், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில், வீட்டில் தனியாக இருந்தார். வீட்டு கதவு லேசாக மூடப்பட்டிருந்த நிலையில், மர்ம நபர்கள் இருவர், தாங்கள், 'கூரியர் பாய்' எனக்கூறி, வீட்டிற்குள் அத்துமீறி புகுந்தனர்.
விசாரணை பின், வீட்டின் உள்ளே, அவர்கள் நோட்டமிட்டதை தொடர்ந்து, ஆபத்தை உணர்ந்த அனிதா, உடனடியாக, 'காவலன்' செயலியில் புகார் அளித்தார். பின், கூக்குரலிட்டதை தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர், உதவிக்கு வந்தனர். ஆர்.கே.நகர் போலீசார் விரைந்து வந்து, இருவரையும் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர், சலீம், 41, அவரது உறவினரான மியான்மரைச் சேர்ந்த தாவூத், 33, என்பது தெரிய வந்தது. அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், 'எங்கள் மொபைல் போனுக்கு, மசாஜ் சென்டர் குறித்த குறுஞ்செய்தி வந்தது. அதில் இருந்த வீட்டின் முகவரிக்கு பதிலாக, இங்கு தவறுதலாக வந்து விட்டோம்' என, தெரிவித்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதால், பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து, இருவரையும், ஆர்.கே.நகர் போலீசார் கைது செய்தனர். ஆபத்தை உணர்ந்ததும், காவலன் செயலியில், உடனடியாக புகார் அளித்த பெண்ணை, போலீசார் பாராட்டினர். ஸ்ரீஜெயின் அமைப்பின், தமிழக மாநில துணை தலைவர், அனிதா சுரானா கூறியதாவது: எங்கள் அமைப்பில் உள்ள வட மாநில பெண்களுக்கு, ஏழு கிணறு போலீசார் சார்பில், சமீபத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில், 'காவலன்' செயலி குறித்து, போலீசார் விளக்கியதோடு, உடனடியாக மொபைல் போனில் செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தினர்; அனைவரும் செயலியை பதிவிறக்கம் செய்தோம். நான் வீட்டில் தனியாக இருந்தபோது, மர்ம நபர்கள் இருவர், வீட்டில் அத்துமீறி நுழைந்ததோடு, வீட்டை சுற்றி பார்த்தபடி, உள்ளே சென்றனர். யார் என விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், சுதாரித்து காவலன் செயலியில் புகார் அளித்தேன். இத்தகவல் உடனடியாக, என் கணவருக்கும், மகனுக்கும் சென்றது. ஆர்.கே.நகர் போலீசாரும் உடனடியாக வந்து, இருவரையும் கைது செய்தனர். பெண்களை பாதுகாக்கும் செயலி இது. பெண்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணரும்போது, இதை அவசியம் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஐதராபாத் சம்பவத்தை தொடர்ந்து, பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் தமிழக காவல் துறையில் ‘காவலன்’ செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பெறப்படும் புகாரின் மீது உடனே நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். உதவி கோரி வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள், தகவல்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தங்களின் கீழ் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காவல் சரக எல்லை போன்ற நடைமுறை சிக்கல்களை தாண்டி தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். பொறுப்புணர்வுடன் செயல்படாத காவலர்கள் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.
காவலன் செயலி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் குறிப்பாக ஊரக பகுதி மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். காவலன் கைப்பேசி செயலியின் பயன்பாட்டை ஊக்குவிக்க தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைள் மற்றும் அதனால் விளைந்த பயன்கள் குறித்து வரும் 10ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என டிஜிபி திரிபாதி, அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews