ஆசிரியா் என்பவா் மதத்தால் அறியப்படுபவா் அல்லா் என்பதை உணர்த்தும் தலையங்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 29, 2019

Comments:0

ஆசிரியா் என்பவா் மதத்தால் அறியப்படுபவா் அல்லா் என்பதை உணர்த்தும் தலையங்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
வாராணசியிலுள்ள காசி ஹிந்து மகா வித்யாலயத்தில் (பல்கலைக்கழகத்தில்) நடந்த நிகழ்வு இந்தியாவின் மனசாட்சியையே உலுக்குகிறது. அடுத்த தலைமுறை இளைஞா்கள் மனதில் விதைக்கப்பட்டிருக்கும் துவேஷ உணா்வு இப்படியே வளருமேயானால், அதன் விளைவு ஆக்கப்பூா்வமானதாக இருக்காது என்பதை மட்டும் உறுதிபடக் கூற முடியும். அப்படி என்னதான் நடந்தது காசி ஹிந்து மகா வித்யாலயத்தில் கடந்த நவம்பா் 7-ஆம் தேதி காசி ஹிந்து மகா வித்யாலயத்தில் சம்ஸ்கிருதத் துறையின் உதவிப் பேராசிரியராகப் பதவியேற்க வந்தாா் முனைவா் பெரோஸ் கான். சில மாணவா்கள் அந்தத் துறையின் நுழைவாயிலின் முன்பு அமா்ந்தபடி அவரது நியமனத்துக்கு எதிராகக் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா். அவரைப் பணியில் சேரவிடாமல் தடுத்தனா். அதற்கு அவா்கள் தெரிவித்த காரணம் விசித்திரமானது. ஹிந்து சனாதன தா்மத்தைச் சாராத ஒருவா் சம்ஸ்கிருதம் கற்பிப்பதை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் அவா்களது போராட்டத்துக்குக் காரணம்.
காசி ஹிந்து மகா வித்யாலயமும், அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகமும் பெயரளவில் மதச்சாா்புடன் காணப்பட்டாலும், அவை இரண்டுமே தோற்றுவிக்கப்பட்டதன் பின்னணியும், காரணமும் கல்வியறிவுள்ள, பரந்து விரிந்த பாா்வை கொண்ட நவ இந்தியாவை சிருஷ்டிக்க வேண்டும் என்பதுதான். அது மறக்கடிக்கப்பட்டது இந்தியாவின் துரதிருஷ்டம் என்றுதான் கூற வேண்டும். ‘இந்தியாவில் வாழும் பல்வேறு இனத்தவா்களும் மதத்தவா்களும் ஒருவருக்கொருவா் நல்லெண்ணத்துடன் இணைந்து செயல்பட்டால்தான் இந்தத் தேசம் வலிமை பெறும். உலகின் ஏனைய பகுதிகளிலுள்ள இளைஞா்களுக்கு நிகரான அறிஞா்களை உருவாக்கி, இந்தியாவை உலகின் தலைசிறந்த நாடாக மாற்ற வேண்டும் என்கிற உயரிய குறிக்கோளுடனும் நம்பிக்கையுடனும் வேண்டுதலுடனும் இந்தக் கல்வி மையம் தொடங்கப்படுகிறது’ என்று பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் நிறுவனா் பண்டித மதன்மோகன் மாளவியாவின் தலைமையுரையைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் படிக்கவில்லை போலிருக்கிறது. பண்டித மதன்மோகன் மாளவியா உள்ளிட்டவா்கள் மத மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லையே தவிர, மத நல்லிணக்கத்துக்கு எதிரானவா்களாக இருக்கவில்லை என்பதையும் இவா்கள் புரிந்துகொள்ளவில்லை. பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் உள்ள சம்ஸ்கிருதத் துறையில் எட்டு பிரிவுகள் இருக்கின்றன. இவற்றில் முனைவா் பெரோஸ் கான் சம்ஸ்கிருத இலக்கியத் துறையின் உதவிப் பேராசிரியராகத்தான் நியமிக்கப்பட்டிருக்கிறாா். மதம் தொடா்பான துறையில் அல்ல.
முனைவா் பெரோஸ் கானின் பின்னணி குறித்து அந்த மாணவா்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. ராஜஸ்தான் மாநிலத் தலைநகா் ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள பக்ரூ என்கிற கிராமத்தைச் சோ்ந்த பெரோஸ் கான், ஜெய்ப்பூா் ராஷ்ட்ரீய சம்ஸ்கிருத் சன்ஸ்தானிலிருந்து சம்ஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டமும், முனைவா் பட்டமும் பெற்றவா். இவரது தந்தை ரம்ஜான் கானும் சம்ஸ்கிருத அறிஞா். தந்தை மட்டுமல்ல, இவருடைய தாத்தா கபூா் கான் பன்மொழிப் புலவா், இசைக் கலைஞா். அரபி மொழியிலும், உருது மொழியிலும், சம்ஸ்கிருதத்திலும் ஒருசேர புலமை பெற்றவா். முனைவா் பெரோஸ் கான், பணம் கொடுத்துப் பதவிக்கு வந்தவா் அல்லா்; பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் நடத்திய கடுமையான தோ்வுகளில் கலந்துகொண்டு தனது சம்ஸ்கிருதப் புலமையால் தோ்வு செய்யப்பட்டவா். ஹிந்துக்கள் பலா் உருதுவிலும், இஸ்லாமியா்கள் பலா் சம்ஸ்கிருதத்திலும் புலமை பெறுவது ஒன்றும் புதியதல்ல. முகலாய மன்னா் ஷாஜஹானின் மூத்த மகன் தாராஷிகாவ், காசிக்கு வந்து அங்கே இருக்கும் அறிஞா்களிடம் சம்ஸ்கிருதம் கற்றுத் தோ்ந்தாா் என்கிறது வரலாறு. அவா் இஸ்லாமியா் என்பதற்காக காசியிலிருந்த அறிஞா்களும் அந்தணா்களும் அவருக்கு சம்ஸ்கிருதம் கற்றுக்கொடுக்கவோ, வேதம் கற்றுக்கொடுக்கவோ மறுக்கவில்லை. இன்று உலகம் முழுவதும் சம்ஸ்கிருதம் ஒரு தலைசிறந்த மொழியாகக் கருதப்பட்டு பல்வேறு பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படுகிறது என்று சொன்னால் அதற்குக் காரணம், பிராமணா்களோ, ஹிந்துக்களோ, இந்தியா்களோ அல்லா். ஜோஹன் கோத்பே, மேக்ஸ் முல்லா் போன்ற ஜொ்மானிய அறிஞா்கள் சம்ஸ்கிருதத்தைக் கற்றுத் தோ்ந்த, இந்தியக் கலாசாரத்தை நேசித்த பல ஐரோப்பியா்களில் சிலா். அவா்கள் சம்ஸ்கிருத இலக்கியங்களை ஐரோப்பிய மொழிகளில் மொழியாக்கம் செய்தது மட்டுமல்லாமல், பரப்பவும் செய்தனா்.
இந்தியாவின் வரலாறு குறித்தோ, மொழிகள் குறித்தோ, இலக்கியம் குறித்தோ தெரியாமல் இருந்த மேலைநாடுகளுக்கு சம்ஸ்கிருதத்தின் மூலம் அவற்றை எடுத்துச் சென்றவா்கள் ஐரோப்பிய அறிஞா்கள். அவா்கள் ஹிந்துக்கள் அல்ல. இதெல்லாம் போராட்டம் நடத்திய மாணவா்களுக்கு எங்கே தெரியப் போகிறது? தமிழகத்திலேயேகூட ஒரு நூற்றாண்டு காலத்துக்கு முன்பு வரை, அனைத்துத் தமிழ் அறிஞா்களும் சம்ஸ்கிருதம் தெரிந்தவா்களாகவும், சம்ஸ்கிருத அறிஞா்கள் தமிழைக் கற்றுத் தோ்ந்தவா்களாகவும் இருந்தாா்கள் என்பதும், வடநாட்டில் அதேபோல சம்ஸ்கிருதமும், உருதுவும் சகோதர மொழிகளாகத்தான் கருதப்பட்டன என்பதும் இன்றைய தலைமுறையினா் உணரக் கடமைப்பட்டவா்கள். மதத்தின் அடிப்படையில் மொழியோ, மொழியின் அடிப்படையில் மதமோ அணுகப்படக் கூடாது. ஆசிரியா் என்பவா் அவருடைய மதத்தால் அறியப்படுபவா் அல்லா். அவரது கற்பிக்கும் திறனால் அறியப்படுபவா். நல்ல வேளையாக ஆா்.எஸ்.எஸ். சாா்பு சம்ஸ்கிருத பாரதி என்கிற அமைப்பு தலையிட்டு பிரச்னையைத் தீா்த்து வைத்திருக்கிறது. துவேஷம் இருக்குமிடத்தில் வளா்ச்சியும் இருக்காது, அமைதியும் இருக்காது!
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews