👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வழக்கம்போல வாட்ஸப்பில் ஒரு வீடியோ ஓடுகிறது. அதை ஓபன் செய்து பார்த்தால் ஒரு நிமிடம் தூக்கி வாரிப்போடுகிறது. அதென்ன வீடியோ? கட்டிலில் படுத்துறங்கிக் கொண்டிருக்கும் கணவனின் கழுத்தில் துணியைப் போட்டு அவரது மனைவி நெரிக்கிறார். கணவர் துடிதுடித்து எழ முயற்சிக்கிறார். இதனால் அவர் மேல் ஏறி அமர்ந்து தனது பிடியை மேலும் மனைவி இறுக்குகிறார். இந்த கொலைக்காட்சியை ஒருவர் ஆர்வமாக வீடியோ எடுக்கிறார். மெல்ல, மெல்ல கணவன் உயிர் பிரிகிறது. இதன் பின்பே மனைவி தனது பிடியை தளர்த்துகிறார். இது ஏதோ ஹாலிவுட் படக்காட்சி என நீங்கள் நினைத்தால் தவறு. 5 மாதங்களுக்கு முன்பு சென்னை நெற்குன்றம் சக்தி நகரில் நடந்த உண்மை சம்பவம்.
என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா?
பெருகும் கொலைகள்: சென்னை நெற்குன்றம் சக்தி நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நாகராஜை, அவரது மனைவி காயத்ரி கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீஸ் கைது செய்தது. அவர் கொலை செய்யும் காட்சியை வீடியோ எடுத்த அவரது கள்ளக்காதலன் மகேந்திரனும் போலீசில் சிக்கினார். உல்லாசத்துக்கு தடையாக இருந்த கணவன் கொலை, கள்ளக்காதல் தகராறில் மாமியாரை கொலை செய்த மருமகன், தோசையில் தூக்கமாத்திரைகளை கலந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி, கள்ளக்காதலை கண்டித்த மனைவியை துடிதுடிக்க கொன்ற கணவன், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனை கொலை செய்த தாய்... - இப்படிச் செய்திகள் இல்லாத நாளில்லை. இத்தனை கொலைகள் அன்றாடம் நடக்க காரணம் பாலியல் தேவையா, பணத்தேவையா?
காதல் எப்படி கள்ளமாகும்? ஒழுக்கம் விழுப்பம், அதாவது உயர்வு தரும் என்கிறது திருக்குறள். அதுமட்டுமின்றி மிகத்தெளிவாக
‘அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்’
- என்றும் வள்ளுவர் கூறியுள்ளார். எந்த மொழியிலும் இல்லாத அளவிற்கு தமிழில் தான் அற இலக்கியங்கள் அதிகமாய் உள்ளன. அவை மானுட மேன்மையைப் போற்றுகின்றன. அதனால் தான் ‘நீதிநூல் பயில்’ என்றான் மகாகவி பாரதி. கற்பொழுக்கம், நீதி தவறாமை, பிறன்மனை நோக்காமை என வலியுறுத்திய நூல்கள் சுய ஒழுக்கம் மட்டுமின்றி புற ஒழுக்கத்தையும் பேசியுள்ளன. அப்படிப்பட்ட தமிழகத்தில் தான் ஒவ்வொரு ஆண்டும் கூடா நட்பு கொலைகள் அதிகம் நடக்கின்றன. அதைத்தான் கள்ளக்காதல் கொலை என்கிறார்கள். காதலென்பது, உண்மையாய் இருப்பது. இதில் கள்ளத்திற்கு இடமில்லை. பிறகெப்படி கள்ளக்காதல்?
அதிர வைத்த அறிக்கை: சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூன் மாதம், தமிழக காவல்துறை தலைவர் ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில், கள்ளக்காதல் காரணமாக சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் 158 கொலைகளும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 1,301 கொலைகளும் நடந்துள்ளதாக தகவலை அவர் வெளியிட்டார். கூட்டுக்குடும்ப சிதைவு: இன்றைய சமூகம் கடைபிடிக்கும் நுகர்வு கலாச்சாரம், மேலை நாகரீகம், கூட்டுக்குடும்ப சிதைவு, இணையதள பயன்பாடு ஆகியவையும் இப்படியான கொலைகளுக்கு காரணங்களாக இருக்கிறது என்பதை மறுத்து விட முடியாது. யாரென்றே அறியாத நபருடன் நட்பு வைப்பதற்கு இன்று சமூகவலைத்தளங்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. உலக அளவில் அதிக இணைய பயன்பாடு கொண்ட நாடு சீனா. அங்கு 21 சதவீதம் பேர் இணைய பயன்பாட்டுடன் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக இந்தியா 12 சதவீதம் என்ற எண்ணிக்கையில் உள்ளது.
மலிவான விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களும், அதற்கான கட்டுப்பாடற்ற இணையதள சேவையும் சமூக ஒழுக்கங்களுக்கு வேட்டு வைக்கும் கண்ணிவெடிகளாக இருக்கின்றன.திறந்து கிடக்கும் ஆபத்து: சாட்டிங் பெட்டிகள் திறக்கப்படும்போது பலரின் வீடுகளின் நிம்மதியின் வாசல் அடைபடுகிறது. தங்கள் புற அழகையோ, அக அழகையோ ஆராதிக்க வேண்டும் என்று ஏங்குபவர்களுக்கு வடிகாலாக உள்ள சமூகவலைத்தளங்கள் பின்பு தூண்டிலாகவும் மாறுகிறது. தங்கள் புகைப்படங்களுக்கு கிடைக்கும் லைக்குகள், கமெண்ட்கள் வீடுகளில் கிடைப்பதில்லையே என்ற கோபம், புதிய உறவு மூலம் கிடைக்கும் ‘வாவ்’ கமெண்ட்டுகள் சில நட்புகளை, ஏடாகூடா நட்பாகி விடுகிறது. இதன் காரணமாக ஏற்படும் தொடர்பு எல்லை மீறச்செய்கிறது. பிரிய முடியாத பிரியம் காரணமாக சிலர் தற்கொலையைத் தேர்வு செய்கின்றனர். பலர் கொலை ஆயுதத்தை தேர்வு செய்கின்றனர்.
சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த அபிராமி சில மாதங்களே பழகிய ஆண் துணைக்காக, பெற்ற 2 குழந்தைகளைக் கொன்ற சம்பவம் உளவியல்ரீதியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். உடல் தேவைக்கான எல்லை மீறல் என்றால், அனைவருமே சுந்தரமாக இருந்திருப்பார்கள். அதனைத் தாண்டி ஒரு ஈர்ப்பு அவனிடம் இருந்துள்ளதை அவள் உணர்ந்திருக்கிறாள். இடையூறு என நினைத்த 2 குழந்தைகளை கொலை செய்துள்ளார். அதிகரிக்கும் முதியோர் இல்லம்: சமூகத்தில் நடக்கும் குற்றங்களுக்கு தனிமனித நடவடிக்கையும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. கட்டுப்பாடற்ற உறவுகளுக்கும் அது காரணமாகி விடுகிறது. முந்தைய காலங்களில் இப்படியான கொலைகள் ஏன் அதிகம் நடக்கவில்லையென்ற கேள்வி இயல்பானது.
அன்று கூட்டுக்குடும்ப உறவு இருந்தது. நல்லது எது, கெட்டது என விவாதிப்பதற்கான இடம் இருந்தது. வீட்டில் இருக்கும் மூத்தவர்கள் அனுபவத்தில் இருந்து கிடைத்த விஷயங்களை பகிர்வதற்கான தளம் இருந்தது. ஆனால், இன்று அப்படியான இடம் காலியாகி விட்டது.தனிக்குடித்தனங்களும், முதியோர் இல்ல எண்ணிக்கை பெருகுதலும் கூடா நட்பு கொலைக்கு முக்கிய காரணமாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் மத்திய, மாநில அரசுகளின் மானியத்தின் மூலம் 144 அரசு முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் பதிவு செய்யப்பட்ட மற்றும் தனியார் இல்லங்கள் 133 உள்ளன. இவை தவிர நகர்ப்புற முதியோர் இல்லங்கள் செயல்படுகின்றன. இவற்றில் தங்கள் பெற்ற பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை இழந்து கையறு நிலையில் பலர் தவித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் முதியோர் இல்லங்களுக்கு துரத்தியடிக்கப்பட்ட முதியோர், தங்கள் பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் கோரி 2,514 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர் என்ற அதிர்ச்சியான உண்மையையும் இங்கே பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.
குழந்தைகள் பலியாடுகளா? திருமணத்தைத் தாண்டிய உறவில் ஈடுபடும் ஆணோ, பெண்ணோ தங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. இதனால் இப்படியான பிரச்னைகளில் அதிகம் பலியாவது குழந்தைகள் தான். அவர்களைப் பற்றிய சமூக பயம் இல்லாதது தான் இக்குற்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வைத்துள்ளது. தாய், தந்தையை இழந்த பெண் குழந்தையின் நிலையை இன்றைய சமூகச்சூழலில் தனித்துப் பார்க்கவே மிகப்பெரிய அச்சமாய் இருக்கிறது.
விவாகரத்து அதிகரிப்பு
மதுரை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு மாதத்திற்கு 20 முதல் 30 விவாகரத்து வழக்குகள் தான் பதிவாகி வந்தன. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக மாதத்திற்கு 100 வழக்குகள் பதிவாகின்றன. பிரிவு கேட்டு இத்தனை வழக்குகள் நடந்தாலும், கூடாநட்பு கேடாய் இருப்பது சமூகத்தின் முன் பெரிய சவால் மட்டுமல்ல சாபமும் தான்.
சந்தேகக்கோடு... சந்தோஷக்கேடு
கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்படுவது இயல்பு. இவற்றை களைந்தாலே பிரச்னைகளை சரி செய்து விடலாம். தவறு செய்தால் ஈகோ பார்க்காமல் மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பதும் இடைவெளியை குறைக்கும். ஒருவருக்கொருவர் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதும், குறைகளைப் புறந்தள்ளி நிறைகளை ஏற்க வேண்டும். நேர்மையோடு இருப்பது மட்டுமின்றி நகைச்சுவை உணர்வும் அவசியம் தேவைப்படுகிறது. சின்ன சின்ன விஷயங்களை ஊக்குவிப்பதும், பாராட்டுவதும் இருதரப்பிலும் மிக அவசியம். கணவன், மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்னை குழந்தைகளின் கல்வியை மட்டுமின்றி அவர்களின் மனநலனையும் பாதிக்கும். இதை கருத்தில் கொள்வது அவசியம். மிக மிக முக்கியமான விஷயம் சந்தேகம். அது வீட்டிற்குள் நுழைந்தால் மகிழ்ச்சி வெளியேறி விடும். எனவே, வெளிப்படைத்தன்மையுடன் எதையும் விவாதித்துப் பழகினாலே பிணக்குகள் களைந்து பிணைப்புகள் உருவாகும்.
தடுக்க தேவை தனிச்சட்டம்
ஐகோர்ட் மதுரை கிளை வழக்கறிஞர் காந்தி கூறுகையில், ‘‘திருமணமான ஒரு கணவனோ அல்லது மனைவியோ வேறு ஒருவருடன் தகாத உறவில் ஈடுபடுவது சமீபத்தில் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. 2018ம் ஆண்டுக்கு முன் பிறன்மனை புணர்தல் என்பது இந்திய தண்டனைச் சட்டத்தில் 5 ஆண்டுகள் தண்டிக்கக்கூடிய சட்டமாக இருந்தது. 2018ம் ஆண்டு இச்சட்டப்பிரிவு 497, பெண் சமத்துவத்திற்கு எதிரானது என்றும், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்றும் உச்சநீதிமன்றம் இந்த சட்டப்பிரிவை ரத்து செய்தது.
கள்ளக்காதல் தண்டனைக்குரிய குற்றம் என்று மத்திய, மாநில அரசுகள் தனிச்சட்டம் இயற்றலாம். இதற்கு தடையேதும் இல்லை. பள்ளி, கல்லூரி பாடப்புத்தகங்களில் நீதிபோதனை வகுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இளைஞர்களுக்கு சமூக வலைத்தளங்களை ஆக்கப்பூர்வமாக எப்படி பயன்படுத்துதல் வேண்டும் என்ற முறையான பயிற்சி தேவை. பிறன்மனை புணர்தல் மட்டுமே தண்டனைக்குரிய குற்றம் அல்ல. ஆனால், அவ்வாறு ஈடுபடுபவர்கள் தங்களின் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள கணவனை அல்லது மனைவியை அல்லது பச்சிளங்குளம் குழந்தைகளைக் கொலை செய்வதும் தண்டனைக்குரிய குற்றமே. சட்டத்தின் பிடியில் இருந்து இவர்கள் தப்பிக்க முடியாது. காமம் கண்ணை மறைப்பதால் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சட்டம் ஒருபோதும் துணை நிற்காது என்பதை உணர வேண்டும்’’ என்றார்.
கூட்டுக்குடும்ப உறவு அவசியம்
மனநல மருத்துவர் பெரியார் லெனின் கூறுகையில், ‘‘கணவன், மனைவிக்கிடையே நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. நிச்சயிக்கப்பட்ட திருமண உறவுகள் மூலம் கணவன், மனைவி இடையே முதலில் நடப்பது உடல்பரிமாற்றம் தான். இதன் பின் தான் மனம் ஒன்றுபடுகிறது. இப்படி மனம் ஒன்றுபடாத போது தான் தன் சுயத்தை கூடாநட்பு வெளிப்படுத்துகிறது. துணையைத் தேட வைக்கிறது. இப்பிரச்னையில் மிக முக்கியமானது தாம்பத்ய உறவாகும்.
இது இயற்கையாக ஏற்படக்கூடிய விஷயம் தான். அதனால் தங்கள் கற்பனைக்கு வடிகாலாக விஷயங்களை விரும்புகிறார்கள். கலாச்சார வேலிகளை மீறுகின்றனர். கூட்டுக்குடும்ப உறவு இச்சிக்கலை தீர்க்கும் அருமருந்தாகும். எந்த விஷயத்தையும் பேசித் தீர்க்க முடியும். அதற்கு வழி கூட்டுக்குடும்பத்தில் உள்ளது. ஆனால், தனிக்குடித்தன வாழ்க்கை முறை மேலும் வாழ்க்கையை மட்டுமின்றி குடும்ப உறவுகளையும் சிதைத்து விடுகிறது. முதலில் கணவன், மனைவிக்குள் ஆத்மார்த்த உறவு நிலை ஏற்பட வேண்டும். அப்படியான உறவு தான் கூடாநட்பையும், அதன் மூலம் நடக்கும் குற்றங்களையும் தடுக்கும்” என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U