TRB - அனுபவச் சான்று பெறுவதில் சிக்கல்: ஆசிரியர் தேர்வு வாரிய விண்ணப்பதாரர்கள் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 23, 2019

Comments:0

TRB - அனுபவச் சான்று பெறுவதில் சிக்கல்: ஆசிரியர் தேர்வு வாரிய விண்ணப்பதாரர்கள் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொறியியல் கல்லூரிகளில் பணி அனுபவச் சான்றிதழ், வருகைப் பதிவேடு நகல் மற்றும் ஊதியப் பட்டியல் நகல் பெற இயலாத ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.) விண்ணப்பதாரர்கள் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறையை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அமைத்துள்ளது. மேலும், விண்ணப்பதாரர்களுக்குத் தேவையான ஆவணங்களை சம்பந்தப்பட்ட கல்லூரிகளிடமிருந்து பெற்றுத் தர வசதியாக சிறப்பு அதிகாரிகளையும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நியமித்துள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த 4-10-2019 அன்று வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.). இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 30 கடைசி நாளாகும். உதவிப் பேராசிரியர் தேர்வானது நேரடி தேர்வு முறையில் நடத்தப்பட உள்ளது. அதாவது பணி அனுபவம், கல்வித் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு நடைபெற உள்ளது. இதில் பணி அனுபவத்துக்கு ஓராண்டுக்கு 2 மதிப்பெண்கள் என அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். உரிய கல்வித் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள், முழு கல்வித் தகுதியைப் பெற்றதற்கு பிறகான கலை-அறிவியல் கல்லூரி அல்லது பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்த அனுபவம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். உரிய கல்வித் தகுதி பெறுவதற்கு முந்தைய, பணி அனுபவம் கணக்கில் கொள்ளப்படாது.
கல்வித் தகுதியைப் பொருத்தவரை, அதிகபட்சமாக 9 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதாவது முதுநிலை பட்டப்படிப்புடன் பிஎச்.டி. ஆராய்ச்சிப் படிப்பை முடித்தவர்களுக்கு 9 மதிப்பெண்ணும், முதுநிலை பட்டப் படிப்பு மற்றும் எம்.ஃபில். படிப்புடன் நெட் (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) அல்லது செட் (மாநில அளவிலான தகுதித் தேர்வு) தேர்வில் தகுதி பெற்றிருப்பவர்களுக்கு 6 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதுநிலை பட்டப் படிப்புடன் நெட் அல்லது செட் தகுதி பெற்றவர்களுக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். இறுதியாக நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு அதிகபட்சம் 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதன்படி மொத்தம் 34 மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த நேரடித் தேர்வு நடைபெற உள்ளது. இதில், பணி அனுபவத்துக்கான மதிப்பெண் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், அவர்கள் பணிபுரிந்த கல்லூரிகளில் பணி அனுபவச் சான்றிதழ், நியமன உத்தரவு ஆகியவற்றுடன் அவர்கள் பணிபுரிந்த ஒட்டுமொத்த ஆண்டுக்கான வருகைப் பதிவேடு நகல் மற்றும் ஊதியப் பட்டியல் நகல் ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நகல்களின் ஒவ்வொரு பக்கத்திலும் கல்லூரி முதல்வரின் கையொப்பம் இடம்பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களை கல்லூரிகள் தர மறுத்து வருவதால், தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் டி.ஆர்.பி. நடத்தும் உதவிப் பேராசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் கார்த்திக் கூறியது: டி.ஆர்.பி. தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு தேவையான ஆவணங்களை உடனடியாக வழங்குவதற்காக கல்லூரிக் கல்வி இயக்ககம் சார்பில் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அனைத்து கலை, அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரும்பாலான கலை-அறிவியல் கல்லூரிகள் இந்த ஆவணங்களை தடையின்றி வழங்கி வருகின்றன. ஆனால், பொறியியல் கல்லூரிகளுக்கு இதுபோன்ற அறிவுறுத்தலை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வழங்காத காரணத்தால், பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் இந்த ஆவணங்களை தர மறுக்கின்றன. இதன் காரணமாக, என்னைப் போல் நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள் டி.ஆர்.பி. தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும், சில கல்லூரிகள் ஒரு ஆண்டுக்கு ரூ. 2,000 வீதம் பணம் கொடுத்தால் போலியான பணி அனுபவச் சான்றிதழ்கள் தருவதாகவும் புகார் எழுந்துள்ளது. விண்ணப்பிக்க இன்னும் 7 நாள்களே உள்ள நிலையில், தமிழக அரசு இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருந்தார். இதுகுறித்து சென்னையை அடுத்துள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகி கூறுகையில், விண்ணப்பதாரர்களுக்கு பணி அனுபவச் சான்றிதழ் தருவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், ஊதியப் பட்டியல், வருகைப் பதிவேடு ஆகியவை கல்லூரியின் தனிப்பட்ட ஆவணங்கள். எனவே அவற்றைத் தர இயலாது. அதுவும், அவர்கள் பணிபுரிந்த ஆண்டுகள் முழுமைக்கும் இந்த ஆவணங்களை தருவதென்றால் ஒவ்வொருவருக்கும் 1500 முதல் 3000 பக்கங்களில் கல்லூரி முதல்வர் கையெழுத்திட்டு தருவது நடைமுறையில் ஒத்துவராத ஒன்று என்று தெரிவித்தார்.
இயக்குநரகத்தில் கட்டுப்பாட்டு அறை: இதுபோன்ற தொடர் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, இப் பிரச்னைக்கு தீர்வு காண சிறப்பு கட்டுப்பாட்டு அறையை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அமைத்துள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறை திங்கள்கிழமை (அக். 21) முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன் கூறியது: சில பொறியியல் கல்லூரிகள் பணி அனுபவச் சான்றிதழ், வருகைப் பதிவேடு நகல் தர மறுப்பதாக தொடர் புகார்கள் வந்தன. அதனைத் தொடர்ந்து இயக்குநரகத்தில் சிறப்புக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கென சிறப்பு அதிகாரிகளும் (வாரிய உறுப்பினர்) நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கட்டுப்பாட்டு அறையை 044 - 22351014, 22351015 ஆகிய தொலைபேசி எண்களில் விண்ணப்பதாரர்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். உடனடியாக ஆவணங்கள் கிடைக்க ஏற்பாடு செய்து தரப்படும் . மேலும், பணி அனுபவச் சான்றிதழ் மட்டும் கிடைக்கப் பெற்றவர்கள், அதை மட்டும் இயக்குநரகத்தில் வந்து சமர்ப்பிக்கலாம். இயக்குநரக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு நேரில் சென்று, சான்றுகளைச் சரிபார்த்து, அனுபவச் சான்றிதழில் மேலொப்பமிட்டு தந்துவிடுவர் என்றார் விவேகானந்தன்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews