Search This Blog
Friday, October 18, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்வி முறையை சீர்குலைக்கும் ‘நீட்’ தேவையா? என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியுள்ளன. மாணவர்கள் இயல்பாக கல்வி பயிலும் முறையிலேயே தலைகீழ் மாற்றங்களை நீட் தேர்வு ஏற்படுத்தியிருப்பதும், இதனால் மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவதும் உறுதியாகியுள்ள நிலையில், களநிலையை உணர்ந்து தேவையான மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு முன்வராதது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.
2019-20 ஆம் கல்வியாண்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களின் பின்னணி உள்ளிட்ட விவரங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்டுள்ளன. அதன்படி நடப்பாண்டில் தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த 4202 மாணவர்களில் 2,916 பேர், அதாவது 70 விழுக்காட்டினர் பழைய மாணவர்கள் ஆவர். இவர்களில் 2371 பேர் கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள். இருவர் கடந்த 2010-ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களாவர். நடப்பாண்டில் மருத்துவம் சேர்ந்த மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் 2,762 பேரில், 85 விழுக்காட்டினர், அதாவது 2402 பேர் பழைய மாணவர்கள் ஆவர். அதேபோல், சி.பி,எஸ்.இ மாணவர்களில் 36% பேர் பழைய மாணவர்கள் என்று தெரியவந்துள்ளது.
மருத்துவப் படிப்பில் சேர்ந்த பழைய மாணவர்கள் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான 9 ஆண்டுகளில் ஏதோ ஒரு ஆண்டில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏதோ ஒரு ஆண்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இவர்களில் பலர் 3 அல்லது 4 முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் என்பதையும் உணர முடிகிறது.
நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு வரை, அந்தந்த ஆண்டுகளில் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள் மட்டும் தான் மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது. அரிதிலும் அரிதாக எவரேனும் சிலர் மீண்டும் தேர்வு எழுதி கூடுதல் மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பில் சேரக் கூடும். ஒரு கட்டத்தில் அதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அத்தகைய சூழலில், அதிகபட்சமாக 2015-ஆம் ஆண்டில் 6 பழைய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். ஆனால், நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு 2016-ஆம் ஆண்டில் 35 பழைய மாணவர்களும், 2017-ஆம் ஆண்டில் 491 பழைய மாணவர்களும், 2018-ஆம் ஆண்டில் 2371 பழைய மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இதேநிலை நீடித்தால் வரும் ஆண்டுகளில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலான இடங்கள் பழைய மாணவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும் என்ற நிலை ஏற்படும். இது நல்லதல்ல.
ஒரு கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அந்த ஆண்டில் பொதுத்தேர்வுக்கும் படித்து, நீட் தேர்வுக்கும் படித்து அதிக மதிப்பெண் பெறுவது சாத்தியமல்ல. அதனால், அந்த குறிப்பிட்ட ஆண்டில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், அடுத்தடுத்த ஆண்டுகளில் புகழ்பெற்ற நீட் பயிற்சி மையங்களில் சேர்ந்து, நீட் தேர்வுக்கு மட்டும் தயாராகி அதிக மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்புகளில் சேர்கின்றனர். ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையிலான கட்டணத்தில் நீட் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், பணம் படைத்தவர்கள் முதல் ஆண்டில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்விலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் நீட் தேர்விலும் வெற்றி பெறுவது சாத்தியமாகிறது.
இதன்மூலம் இரு உண்மைகள் உறுதியாகின்றன. முதலாவது மருத்துவப் படிப்பில் சேர ஓராண்டுக்கும் கூடுதலான தயாரிப்பு அவசியமாகிறது; இரண்டாவது லட்சக்கணக்கில் பணம் செலுத்தி நீட் பயிற்சி பெறுபவர்களுக்கு மட்டும் தான் மருத்துவக் கல்வி என்பது சாத்தியமாகிறது. இந்த இரண்டுமே கல்வி முறையை சிதைப்பவை ஆகும். இந்த இரண்டுமே சம வாய்ப்பு தத்துவத்தை தகர்க்கின்றன. பணம் இருந்தால் மட்டும் தான் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற முடியும்; நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் மட்டும் தான் மருத்துவப் படிப்பில் சேர முடியும்; பணம் இல்லாத, நீட் பயிற்சி பெற வாய்ப்பற்ற ஊரக ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பை மறந்து விட வேண்டும் என்பது மிகப்பெரிய சமூக அநீதியாகும்.
நீட் தேர்வை அறிமுகப்படுத்துவதற்காக மத்திய அரசின் சார்பில் இரு காரணங்கள் கூறப்பட்டன. ஒன்று... நீட் தேர்வு மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கும். இரண்டாவது... மருத்துவக் கல்வி வணிகமயமாவதை நீட் தடுக்கும். ஆனால், கள எதார்த்தம் முற்றிலும் வேறாக உள்ளது. ஓராண்டில் 12-ஆம் வகுப்பு தேர்விலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் கடுமையான பயிற்சியின் உதவியுடன் நீட் தேர்விலும் தேர்ச்சி பெறக் கூடியவர்களால் மருத்துவக் கல்வியின் தரம் அதிகரிக்கும் என்பது வடிகட்டிய மூட நம்பிக்கையாகவே இருக்கும். மருத்துவப் படிப்பில் சேர ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்காமல், பயிற்சிக்காக ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் வரை செலவழிப்பதை ஊக்குவிக்கும் நீட் தேர்வு தான் மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்கும் என்று மீண்டும், மீண்டும் கூறுவது நாம் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதையே உறுதி செய்கிறது.
12-ஆம் வகுப்பை ஓராண்டில் முடித்து, அடுத்த ஆண்டில் கல்லூரி கல்விக்கு மாறுவது தான் இயல்பான கல்வி ஆகும். இதை சிதைத்து 12&ஆம் வகுப்பு ஓராண்டு, அதன்பின் நீட் பயிற்சிக்கு பல ஆண்டுகள் என்பது மாணவர்களிடையே மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அத்தகைய மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்ட மாணவர்களால் பிற்காலத்தில் கனிவான மருத்துவம் அளிக்கும் மருத்துவராக எப்படி திகழ முடியும்?
எந்த வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் நீட் தேர்வு என்பது ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தரும் வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கியதைத் தவிர, மருத்துவக் கல்வித் தரத்தை உயர்த்தவோ, மாணவர்கள் நலனுக்காகவோ எதையும் சாதிக்கவில்லை. எனவே, பயனற்ற நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தும் பழைய முறைக்கு மாற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
NEET/JEE
Politicians
கல்வி முறையை சீர்குலைக்கும் ‘நீட்’ தேவையா? முடிவுரை எழுத வேண்டும்! அன்புமணி
கல்வி முறையை சீர்குலைக்கும் ‘நீட்’ தேவையா? முடிவுரை எழுத வேண்டும்! அன்புமணி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.