பள்ளிப் பருவத்தில் ‘கட்ட பொம்மனை’ தமிழராகவே அறிந்திருந்தோம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 16, 2019

Comments:0

பள்ளிப் பருவத்தில் ‘கட்ட பொம்மனை’ தமிழராகவே அறிந்திருந்தோம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வீர பாண்டிய கட்டபொம்மன்... பள்ளியில் படிக்கும் காலத்தில் மனதில் பதிந்ததில்லை பாளையக்காரரான வீர பாண்டிய கட்டபொம்மன் தெலுங்குக்காரர் என்று. நடிகர் திலகத்தின் சிம்மக்குரல் மூலமாக பள்ளிப்பருவத்தில் ‘கட்டபொம்மனை’ நாங்கள் தமிழராகவே அறிந்திருந்தோம். ‘நீர் தான் வீர பாண்டிய கட்டபொம்மனோ? ம்ம்.. நீர் தான் ஜாக்ஸன் துரை என்பவரோ? ஏது? வெகுதூரம் வந்து விட்டீர்? நட்பு விரும்பி அழைத்ததாக அறிகிறேன், அதையே விரும்பி நானும் வந்துள்ளேன். நட்பு வேண்டும், ஆனால், அதற்கேற்ற நடத்தை இல்லை உம்மிடம்? (கோபத்தில் கொந்தளித்து சேரில் இருந்து கோபத்தில் திமிறி எழும் கட்ட பொம்மன் மீண்டும் சரியாக அமர்ந்தவாறு) கற்றுக் கொடுக்கும் இனம் தமிழ் இனம், நீர் கற்றுக் கொடுக்க நினைப்பது அறிவீனம்! நவாப்பிடம் இருந்து நாட்டுரிமை பெற்றிருப்பது நாங்கள், நீயாக ஏன் பேட்டி காண வரவில்லை? பேட்டி கொடுப்பவர் நாங்கள் , இல்லாவிட்டால் நீ இந்த நாட்டுக்குள்ளேயே நுழைந்திருக்க முடியாது. இறுமாப்பு இன்னும் ஒழியவில்லை உன்னிடம்! எல்லாம் உடன் பிறந்தவை, ஒழியாது. உன் மீது குற்றம் சுமத்துகிறேன்... என்னவென்று? எடுத்துரைத்தால் கணக்கில் அடங்காது. ச்சூ... எண்ணிக்கை தெரியாத குற்றம். எனக்கா எண்ணிக்கை தெரியவில்லை, அகம்பிடித்தவனே! சொல்கிறேன், கேள்! உன் நிலத்தில் விளையும் விளைச்சலுக்கு கிஸ்தி கொடுக்கவில்லை, எங்கள் பேரரசுக்கு கீழாரசாய் இருக்க திரைப்பணம் செலுத்தவில்லை. வெகு காலமாக வரிப்பணமும் வந்து சேரவில்லை. இந்த பாக்கிக்கெல்லாம் வட்டியும் செலுத்தவில்லை. ஹஹ்ஹா... ஹா...ஹா..ஹா.. கிஸ்தி, திரை, வரி, வட்டி ம்ஹா... வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கு ஏன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? கழனி வாழ் உழவருக்குக் கஞ்சிக் களையம் சுமந்தாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எம்குலப்பெண்டிருக்கு மஞ்சள் அரைத்துப் பணி புரிந்தாயா? அல்லது நீ மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே! எதற்கு கேட்கிறாய் திரை? யாரைக் கேட்கிறாய் வரி? போரடித்து நெற்குவிக்கும் மேழி நாட்டு உழவர் கூட்டம் பரங்கியரின் உடலையும் போரடித்து தலை தனை நெற்கதிர்களாய் குவித்து விடும்... ஜாக்கிரதை! ச்ச்சேச்சே ...அதிகார முத்திரையிட்டு உன்னைக் கையோடு அழைத்து வர ஆளனுப்பினேனே? அப்படியா? பலே! நீ அனுப்பிய ஆள் மிகவும் புத்திசாலி! என்னை அழைத்து வரும் நோக்கத்தோடு எவனும் தலைகாட்டியதில்லை அந்தப்பக்கம்! எங்களுடைய பெருமை தெரிந்தவன் அவன்! ............
மீசை துடிக்கிறது, அதை அடக்கு அடக்கு என்று நட்பு நாடி வந்த உறவுமுறை தடுக்கிறது... ம்ம்.... இன்றும் கூட காட்சிகளாய் விரியும் போது கேட்கத் திகட்டாத வசனம் இது. இன்று வீர பாண்டிய கட்டபொம்மனை கும்பினியார் தூக்கிலிட்ட தினம். 1799 ஆம் ஆண்டில் இதே போன்றதொரு அக்டோபர் 16 ஆம் தேதி தான் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார். அவரைக் காட்டிக் கொடுத்தவராக எட்டயபுரத்துப் பாளையக்காரர் எட்டப்பராஜர் அன்றிலிருந்து சரித்திரத்தில் இடம்பெற்றார். எதற்காகத் தெரியுமா? இந்த உலகம் உய்யும் வரையிலும் துரோகத்தின், காட்டிக்கொடுத்தலின் அழியாச்சின்னமாக! கட்டபொம்மன் தூக்கு விஷயத்தில் பெரும்பாலானோருக்கு எட்டப்பனைத் தெரிந்திருக்கும் அளவுக்கு கூட புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமானின் பங்கு குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரே 1799, அக்டோபர் 1 ஆம் தேதி கட்டபொம்மனைக் கைது செய்து கிழக்கிந்திய கம்பெனியாரிடம் ஒப்படைத்தவர். அதன் பிறகு தான் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் கட்டளைப்படி கயத்தாற்றில் வைத்து கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார். கட்டபொம்மனைத் தூக்கிலிட்டதோடு பாஞ்சாலங்குறிச்சியின் சரித்திரம் முடிந்து விடவில்லை. அது மீண்டும் கட்டபொம்மனின் இளவல் ஊமைத்துரை வாயிலாக புத்துயிர் பெற முயன்றது. ஆயினும் சுற்றிலும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களை வைத்து கொண்டு அத்தனை சீக்கிரம் சுதந்திரக் காற்றை சுவாசித்து விட முடியுமா என்ன? 1801 மே மாதம் 24 ஆம் தேதி பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை ஆங்கிலேயப் படைகள் கைப்பற்றியதும் அங்கிருந்து தப்பித்து ஓடி காளையார் கோயில், விருப்பாட்சி, திண்டுக்கல் என தஞ்சம் அடைந்தனர் கட்டபொம்மு சகோதரர்கள். ஆயினும் தேடித் தேடி கொல்லும் குணம் கொண்ட வெள்ளையர்கள் கட்டபொம்மனின் இரு சகோதரர்களையும் தேடிப் பிடித்து பாஞ்சாலங்குறிச்சி பீரங்கி மேட்டில் வைத்து தூக்கிலிட்டனர். கட்டபொம்மனை நம்பி சுதந்திர தாகத்துடன் வீறு கொண்டெழுந்த தமிழ் மக்களை அச்சுறுத்தவே வெள்ளை அரசு தன்னை எதிர்த்த பாளையக்காரர்களை எல்லாம் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட்டுக் கொன்றது. சிலரது விஷயத்தில் இன்னும் கீழிறங்கிச் சென்று இறந்தவர்களின் தலையை வெட்டி எடுத்து கோட்டை வாயிலை ஒட்டி ஈட்டியில் அல்லது கடப்பாரையில் நட்டு வைக்கும் வழக்கத்தையும் கூட வெள்ளையர் கடைபிடித்து வந்தனர். அப்படித் தூக்கிலிடப்பட்டு தலை வெட்டி எடுக்கப்பட்ட பாளையக்காரர்களில் ஒருவர் தான் சை ரா நரசிம்ம ரெட்டி! அந்த அளவுக்கு வெள்ளையர்களைக் கோபப்படுத்தியது எது? அது... கட்டபொம்மனின் தன்மான உணர்வன்றி வேறெதுவாக இருக்க முடியும்? கட்டபொம்மன் மீதான கோபம் அவரை தூக்கிலிட்ட பின்னரும் கூட வெள்ளையருக்குத் தணிந்த பாடில்லை. அவன் வாழ்ந்த பாஞ்சாலங்குறிச்சி பகுதியையே ஒட்டுமொத்தமாக இந்திய வரைபடத்தில் இருந்து முற்றிலுமாக அழித்தொழிக்கும் அளவுக்கு எல்லை மீறிய கோபத்தில் இருந்தார்கள் வெள்ளையர்கள்.
கட்டபொம்மன் குறித்த நாட்டார் வழக்காற்றியல் பாடல்கள் காட்டும் வெறுப்பு இன்னும் அத்துமீறியதாக காணக்கிடைக்கிறது. அவர்கள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை இடித்துத் தகர்த்து மண்ணோடு மண்ணாக்கி அங்கே வேறு எதுவும் உபயோகமான விஷயங்கள் நிகழ்ந்து விடக்கூடாது எனக்கருதி, கோட்டையை இடித்த இடத்தில் நெருஞ்சி முற்களை நட்டு உழுது விட்டுச் சென்றார்கள் என்று கூட ஒரு சொல்வழக்கு உலவுகிறது. எது எப்படியோ? கட்டபொம்மன் இன்றும் கூட நம் தமிழ் மானம் காத்த பாளையக்கார சிற்றரசர்களில் ஒருவராக பள்ளிக்குழந்தைகள் மனதில் தங்கி விட்டது நிஜம்! அவர் மூட்டி விட்ட கனல் இன்றும் கூட நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டு தான் இருக்கிறது கொள்கைப் பிடிப்புள்ள தன்மானத் தமிழர்கள் நெஞ்சில்! இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு தமிழர், தெலுங்கர், கன்னடர், மராட்டியர் வேறுபாடெல்லாம் ஏது? எல்லோரும் ஒரு தாய் மக்களாக, இந்தியத் தாயின் பிள்ளைகளாகத்தானே இங்கு வேற்றுமையில் ஒற்றுமை கண்டிருந்தோம். அவரவர் மொழிப்பெருமை, பிரதேசப் பெருமை கொள்வதெல்லாம் பெருமிதத்தை மட்டுமே வெளிக்காட்டுவதற்கென்று அமைந்தால் யாருக்கும் எவ்வித நஷ்டமுமிருந்திருக்காது. நாடு... என்று மக்கள் நலன் மேல் அக்கறையற்ற போலி அரசியல்வாதிகளின் கைகளுக்குச் சென்றதோ? அன்று தொடங்கியது கட்டபொம்மனை ஒத்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான அவதூறுகள். அவர் போராடியது சுதந்திரத்திற்காக அல்ல... வெள்ளை அரசிடம் தான் தர வேண்டிய திரைப்பணத்தை கட்டாமல் விட்டதோடு திமிராக எதிர்த்துப்பேசியதால் அவர் மட்டுமல்ல ஒட்டுமொத்த பாஞ்சாலங்குறிச்சியின் வீழ்ச்சிக்கும் காரணமாகி விட்டவர் கட்டபொம்மன் என்று எகத்தாளம் பேசுபவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அவர்களும் கூட ரசிக்கத்தான் செய்கிறார்கள் கட்டபொம்மனின் மேற்படி வீரவசனங்களை! அங்கே நிலைபெற்று விடுகிறார் கட்டபொம்மன்!
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews