👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட், மத்திய அரசு புதிதாகக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் புதிய கல்விக் கொள்கை எனப் பள்ளிக்கல்வித் துறையில் கடந்த சில ஆண்டுகளாக அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் மாற்றங்கள், அத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.
இதற்கிடையே, சமீபத்தில் வெளியான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவே அமைந்திருந்தது. கிட்டத்தட்ட 3 லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வெழுதிய ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் 1 சதவிதத்தினர் மட்டுமே தேர்ச்சிபெற்றிருப்பதால், தமிழகக் கல்வித் தரத்தின்மேல் பெரும் கேள்வி எழுந்துள்ளது. அதேநிலையில் ஏற்கெனவே, தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களின் உபரி எண்ணிக்கை அதிகரித்தது. இந்த உபரி ஆசிரியர்கள் பலர், அரசு நடத்திவரும் அங்கன்வாடிப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இதுபோன்ற அடுத்தடுத்த சவால்களில் சிக்கித்தவிக்கிறது தமிழகப் பள்ளிக் கல்வித்துறை.
இந்நிலையில் அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பிரதீப் யாதவ். ஒரே பள்ளி வளாகத்தில் தனித்தனியான நிர்வாகக் கட்டமைப்பின்கீழ் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் நிர்வகிக்கும் பொறுப்பானது, அந்த வளாகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களிடம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பானது, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கான வேலைப் பளு என்பது அதிகரிக்கும்.
ஆசிரியர்கள்
இதன்மூலம் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்கள், கணினி ஆய்வகங்கள், முதுகலை ஆசிரியர்கள் நடத்தும் வகுப்புகள் என அனைத்தையும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெற முடியும் என அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவை மாணவர்களின் கல்வியைத்தான் பாதிக்கும் எனக் கருத்து தெரிவிக்கிறார்கள், ஆசிரியர்கள்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பள்ளி ஆசிரியர்கள் சிலர், "தமிழகப் பள்ளிக்கல்வித் துறையானது ஏற்கெனவே இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிகளுக்கு ஆசிரியர்களாக நியமித்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மேலோட்டமாகப் பார்க்கும்போது, இது நன்மையானதாகத் தோன்றலாம். ஆனால், இங்கு ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டியது அங்கன்வாடி குழந்தைகளுக்கு வகுப்பு எடுப்பது பற்றிய பயிற்சிக்காக மாண்டிசோரி எனத் தனியான படிப்புகள் உள்ளன என்பதுதான். இப்போதும், இதேபோல் தவறுதலான முடிவைத்தான் அரசு எடுக்கிறது. அதேபோல், இதுவரை தனித்தனியாகச் செயல்பட்டு வந்த தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பானது மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கான வேலைப் பளு என்பது அதிகரிக்கும்” என்றனர்.
மேல்நிலைப் பள்ளிகளுக்கு கற்பிக்கும் முறை வேறு; தொடக்கப் பள்ளிகளுக்குக் கற்பிக்கும் முறை வேறு என்பதை உணர்தல் வேண்டும்.
பாலச்சந்தர்
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளர் பாலச்சந்தர், “தொடக்க கல்வித் துறை என்பது கல்வியின் அடிப்படையைக் கற்றுக் கொடுக்கக்கூடிய இடமாகும். அதற்காகத்தான் தொடக்கக் கல்வித் துறைக்காகத் தனியாக நிர்வாகக் கட்டமைப்புகள் வேண்டும் என ஏற்கெனவே பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதன் மூலமாகவும், போராட்டங்கள் நடத்தியதன் வாயிலாகவும்தான் தற்போது அது தனியாகச் செயல்பட்டு வருகிறது. ஒருவேளை, அதில் ஏதாவது குறைபாடுகள் இருக்கும்பட்சத்தில் அரசு அதில் தலையிட்டு தீர்வுகாணாமல், அடிப்படைக் கல்வியைச் சீரழிக்க வேண்டும் என்பதற்காகவே, 'ஒரே தலைமை ஆசிரியர்' என்ற இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதுபோல் இருக்கிறது, அரசாங்கத்தின் செயல்பாடுகள்.
இது தொடர்ந்தால் தமிழகத்தில் தொடக்கக் கல்வி என்பதே அழிவை நோக்கியதாகத்தான் நகரும். எனவே, தொடக்கக் கல்வித் துறைக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்திதான் தற்போது நாங்களும் பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளோம். இந்நிலையில் இந்தத் திட்டத்தை இப்போது நடைமுறைப்படுத்துவதால் எந்த நன்மையும் கிடைக்காது. பல தீமைகள்தான் ஏற்படும்.
இதுதொடர்பாக தற்போது வெளியாகியுள்ள அரசாணையில் நன்மையாக என்ன சொல்லப்பட்டுள்ளது என்றால், ஓர் ஈராசிரியர் பள்ளி இருந்தால் அங்கு தலைமையாசிரியரும் உடன் மற்ற ஆசிரியரும் செயல்பட்டு வருவார்கள். இந்தப் பள்ளிகளில் ஒருவேளை தலைமை ஆசிரியர் அலுவல் காரணமாக வெளியே போகும்பட்சத்தில் அப்போது மாணவர்களின் வகுப்புகள் பாதிக்கப்படும். எனவே, அந்தப் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க இந்தப் புதிய நிர்வாக மாற்றத்தின்மூலம் அந்த இடத்துக்கு மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆசிரியர்களை நியமிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இது மாதிரியாக மேல்நிலைப் பள்ளி ஆசிரியரைத் தொடக்கப் பள்ளி மாணவர்களைப் பார்த்துக்கொள்ள நியமிப்பதால், அதில் எந்தப் பயனும் கிடையாது. ஏனெனில், மேல்நிலைப் பள்ளிகளுக்குக் கற்பிக்கும் முறை வேறு; தொடக்கப் பள்ளிகளுக்குக் கற்பிக்கும் முறை வேறு என்பதை உணர்தல் வேண்டும்.
மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களால் தொடக்கப் பள்ளி மாணவர்களைப் பேசாமல் அமைதியாகப் பார்த்துக்கொள்ள முடியுமே தவிர, அவர்களுக்குப் பாடத்தை நடத்த இயலாது. கடந்த 10 ஆண்டுகளாகக் கல்வி என்பது கீழ்த்தரமான நிலையை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறது. இது தொடர்ந்தால், தமிழகம் பழைய மாதிரி கல்வியறிவு இல்லாத மாநிலமாகத்தான் மாறும்” என்றார்.
கல்விப் பிரச்னைகளுக்கான தீர்வுகளைக் காண வேண்டியது அரசின் கடமை. இல்லையேல், பாதிக்கப்படப்போவது என்னவோ ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிதான்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U