விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து உள்ளத்தையும், உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
விநாயகரை நினைத்து என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜையைத் தொடங்க வேண்டும்.
அதன் பிறகு விநாயகரிடம் நான் என்னுடைய சதுர்த்தி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்கப் போகிறேன். எனவே நீ எந்தவித தடைகளும் இல்லாமல் அருள் புரிய வேண்டுகிறேன் என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டைகளைத் தயாரித்து நைவேத்தியம் செய்ய வேண்டும்.
மாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும். ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.
விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல் மிகவும் நல்லது.
சதுர்த்தி திதியில் ஜாதகத்தில் திருமணத்தடை உள்ள பெண்கள் இவ்விரதத்தை கடைபிடித்தால் நல்ல வரன் அமையும்.
இவ்வாறு பூஜை செய்து வந்தால் விநாயகப் பெருமான் கட்டாயம் வேண்டிய வரங்களைத் தருவார்.
விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப்பேறும், துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரிய அனுகூலமும் உண்டாகும். இடையூறு விலகும்.
பெரும் புகழுடன் சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழ்வார்கள். விநாயகர் விரதத்தை ஸ்ரீகற்பக விநாயகர் வீற்றிருக்கும் பிள்ளையார்பட்டியிலும் அனுஷ்டிக்கலாம்.