👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலையில் காலியாக உள்ள 300 இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று பாமா நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் விடுவித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியா முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகளில் 300-க்கும் மேற்பட்ட பொறியியல் மாணவர் சேர்க்கை இடங்கள் காலியாக இருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் வழக்கமாக மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தான் முதலில் நடைபெறும். அதன்பிறகே பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்படும். அதனால் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வார்கள். அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்வார்கள். இதனால் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை பொறுத்தவரை அண்ணா பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் அனைத்து இடங்களும் நிரப்பப்படுவது வாடிக்கையாக இருந்து வந்தது.
ஆனால் நீட் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு மாநில அளவிலும், தேசிய அளவிலும் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழக அரசின் மருத்துவக் கல்வி இயக்குனரகம் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நிரப்புகிறது. தில்லியில் நடைபெறும் கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீடித்தாலும், பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அதற்கு முன்பே முடிவடைந்துவிட்டதாலும் அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேர்ந்திருந்த பல மாணவர்கள் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்ததால் அதில் சேர்ந்துவிட்டனர்.
கடந்த 3 ஆண்டுகளாகவே இந்த குழப்பம் நீடித்துவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழகத்தின் முன்னணி கல்லூரிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகின்றன. அந்த இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், ஒருமுறை கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை முடிந்தபின் மீண்டும் கலந்தாய்வு நடத்த முடியாது என்று தமிழக அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் கூறிவருகின்றன. இதனால் பலராலும் விரும்பப்படும் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களின் பொறியியல் படிப்பு இடங்கள் யாருக்கும் பயனின்றி காலியாகவே உள்ளன.
அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை மட்டுமே இப்போது வெளியாகியிருக்கிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் உள்ள முன்னணி தனியார் பொறியியல் கல்லூரிகளிலிருந்து மருத்துவப் படிப்பில் சேர மாணவர்கள் விலகியதால் ஏற்பட்ட காலி இடங்களின் எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை. அவற்றையும் சேர்த்தால் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 1000-க்கும் மேற்ப்பட்ட இடங்கள் காலியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை முடிவடைந்த பின்னர் மறுகலந்தாய்வு அல்லது சிறப்பு கலந்தாய்வு நடத்தக்கூடாது என்று எந்த சட்டமோ, விதியோ இல்லை. மாறாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் முன்னணி தனியார் கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் பொது அந்த இடங்களில் அடுத்தடுத்த தரவரிசையில் உள்ள மாணவர்கள் தான் சேர முடியும். அவர்கள் அனைவரும் இப்போது வேறு ஏதேனும் கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கக்கூடும். அவர்கள் இந்தக் கல்லூரிகளில் சேரும்போது அவர்கள் படித்த கல்லூரிகளில் காலி இடம் ஏற்படும். இது சங்கிலித்தொடர் போன்று கடைசி நிலையில் உள்ள கல்லூரிகள் வரை தொடரும். இதற்காக அடுத்தடுத்த நிலைகளில் கலந்தாய்வு நடத்த வேண்டியிருக்கும். இதை தவிர்ப்பதற்காகவே சிறப்பு கலந்தாய்வு நடத்த தமிழக அரசு மறுக்கிறது.
அடுத்தடுத்து கலந்தாய்வுகளை நடத்துவது சிக்கலான ஒன்றுதான் என்பதை மறுக்க முடியாது. ஆனால் தகவல் தொழில்நுட்பம் பெருகிவிட்ட இன்றைய சூழலில் இதை மிகவும் எளிதாக சமாளித்துவிட முடியும். எனவே அண்ணா பல்கலைக்கழகங்களில் உள்ள 300 காலி இடங்கள், முன்னணி தனியார் கல்வி நிறுவனங்களில் உள்ள காலி இடங்கள் ஆகியவற்றை நிரப்ப தமிழக அரசும், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகமும் இணைத்து சிறப்பு கலந்தாய்வு நடத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U