காலங்களை உணர்ந்த கலைவாணர்! நினைவுதின சிறப்புக் கட்டுரை #KalaivanarNSKrishnan - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 30, 2019

காலங்களை உணர்ந்த கலைவாணர்! நினைவுதின சிறப்புக் கட்டுரை #KalaivanarNSKrishnan

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
நிகழ்காலம் குறித்த தன்னுணர்வும் எதிர்காலம் குறித்த தொலைநோக்குப் பார்வையும் கொண்ட கலைஞர்கள் காலத்தில் நீடித்து வாழ்கிறார்கள். அப்படியான கலைஞர்களில் ஒருவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். 'தமிழ் சினிமாவின் சிறந்த நூறு ஆளுமைகள்' என்று பட்டியலிட்டால் கண்டிப்பாக முதல் வரிசையில் இடம் பிடிக்கும் தகுதி கலைவாணருக்கு உண்டு. நாகர்கோவிலில் ஒழுகினசேரி என்னும் சிறுகிராமத்தில் பிறந்த என்.எஸ்.கிருஷ்ணன் சிறுவயதில் டென்னிஸ் கோர்ட்டில் பந்து பொறுக்கிப் போடுவது, நாடகக் கொட்டாயில் சோடா விற்பது போன்ற பல சின்னச்சின்ன வேலைகளைச் செய்திருக்கிறார். அக்கால நடிகர்கள் பலரைப் போலவே நாடகத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் கலைவாணர். தமிழ் சினிமாவில் பல அம்சங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவர் அவர். அவரது நகைச்சுவையை இப்போதும் எல்லாத்தரப்பாலும் ரசிக்க முடியுமா என்று கேட்டால், உறுதியாக 'ஆமாம்' என்று சொல்லிவிட முடியாது. பெரும்பாலும் அவரது நகைச்சுவைகள் கருத்து சொல்பவையாகவும் மொழி விளையாட்டாகவுமே இருந்தன. ஆனால் நகைச்சுவையின் மூலம் சீர்திருத்தக் கருத்துகளைத் தன் படங்கள், நாடகங்கள், வில்லுப்பாட்டு எனப் பல ஊடகங்கள் வழியாக மக்களிடம் கொண்டுசென்றது என்றவகையில் கலைவாணரே முன்னோடி. அதேபோல், 'இவர் படத்தில் இருந்தால் போதும், படம் நிச்சயம் ஓடிவிடும்' என்ற நிலை இருவருக்கு இருந்தது. தியாகராஜ பாகவதர் மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ.மதுரம் இணையர். சில படங்களில் என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ.மதுரம் நகைச்சுவைக் காட்சிகள் இல்லாமல் படம் எடுத்துவிட்டு, படம் ஓடவேண்டும் என்பதற்காக இருவரது நகைச்சுவைக் காட்சிகளையும் தனியாகப் படமெடுத்து, சேர்த்துக்கொண்டதும் உண்டு.
லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் சிக்கிப் பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும் சிறைக்குச் சென்றார்கள். அவர்களை மீட்பதற்காகத் தந்தை பெரியாரும் தி.மு.க.வும் துணைநின்றார்கள். சிறையிலிருந்து வெளிவந்தபிறகு பாகவதரால் வெற்றிகரமாகத் திரைத்துறையில் நீடித்து நிற்க முடியவில்லை. ஆனால் அதற்குப்பிறகும்கூட கலைவாணரால் திரைத்துறையில் நீடிக்க முடிந்தது என்பதே அவர் எவ்வளவுதூரம் மக்களிடம் முதன்மையான இடத்தைப் பிடித்திருந்தார் என்பதற்கான உதாரணம். சாதி ஒழிப்பு, தீண்டாமை எதிர்ப்பு, நவீன மாற்றங்களை வரவேற்றல், மூடநம்பிக்கை எதிர்ப்பு, ஆணாதிக்கத்தின் மீதான விமர்சனம், மதுவிலக்கு, அறத்தை வலியுறுத்தல் ஆகியவை கலைவாணரின் நகைச்சுவைக் காட்சிகளின் அடிப்படையாக இருந்தவை. நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகங்களும் அண்ணா, கலைஞர் போன்றோரின் வசனங்களும் இதில் பெரும்பாலானவற்றை அடிப்படையாகக் கொண்டவைதான். ஆனால் எம்.ஆர்.ராதாவின் விமர்சனம் அதிரடியானது என்றால் கலைவாணரின் நகைச்சுவை மென்மையானது. 'யாரை நோக்கி விமர்சனம் வைக்கிறோமோ, அவர்களைப் புண்படுத்திவிடக்கூடாது, அவர்களும் இந்த சீர்திருத்தக் கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கவேண்டும்' என்பதாக என்.எஸ்.கிருஷ்ணனின் நகைச்சுவைக் காட்சிகள் அமைந்தன. 'தீண்டாமை ஒழிப்பு' என்பதில் அவரது அக்கறை குறிப்பிடத்தக்க ஒன்று. 'கிந்தனார்' நாடகம், காலந்தோறும் தொடரும் சாதிய மனநிலை குறித்துப் பேசியது. நவீன வாழ்க்கை சாதியத்தில் ஏற்படுத்திய குறுக்கீடுகளை அவர் வரவேற்றார். 'கரகரவென சக்கரம் சுழல கரும்புகையோடு வருகிற ரயிலே கனதனவான்களை ஏற்றிடும் ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே மறவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி மதபேதத்தை ஓழித்திட்ட ரயிலே' என்று நவீன கண்டுபிடிப்பு, பழமைவாத சாதியத்தின் பிடியைச் சற்றே தளரவைத்ததைச் சுட்டிக்காட்டினார். 'திராவிட நாடு' இதழில் இதை வரவேற்று அண்ணா எழுதினார். தொடர்ச்சியாகப் பல பாடல்களிலும் வசனங்களிலும் காட்சிகளிலும் தாழ்த்தப்பட்டவர்களும் பெண்களும் மரியாதையுடன் சமமாக நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தைத் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தவர் கலைவாணர். 'அறிவியல் மனப்பான்மையே மூடநம்பிக்கையைச் சாய்க்கும்; சாதிய மனநிலையை முற்றிலுமாகத் தகர்க்கும்' என்ற பெரியாரின் நிலைப்பாட்டைக் கலைவாணர் பிரதிபலித்தார்.
நவீன மனநிலை கொண்டவர்களுக்கு முன்னேற்றம் குறித்த கனவுகளும் எதிர்காலம் குறித்த தொலைநோக்குப் பார்வையும் இருக்கும். 'இனி வரும் உலகம்' நூலில் பெரியார் எதிர்காலத்தில் டெஸ்ட் ட்யூப் பேபி முதல் செல்போன் வரை உருவாகும் சாத்தியம் குறித்து எழுதியிருப்பார். இன்று படித்தாலும் ஆச்சர்யமூட்டும் நூல் அது. அத்தகைய தொலைநோக்குப் பார்வையும் விருப்பத்துடன் கூடிய கனவும் என்.எஸ்.கிருஷ்ணனிடமும் இருந்தது. 'பொஞ்சாதி, புருசன் இல்லாம புள்ளகுட்டி பிறக்குறாப்புல விஞ்ஞானத்தை வளர்க்கப்போறேண்டி' என்று 'விஞ்ஞானத்தை வளர்க்கப்போறேண்டி' பாடலில் எதிர்காலம் குறித்த பல கனவுகளை கலைவாணரும் மதுரமும் அடுக்குவார்கள். பொதுவாகவே 'அந்தக் காலம்போல் இந்தக் காலம் இல்லை. எங்கள் காலத்தில் எல்லாம் நன்றாக இருந்தது' என்று பேசிப் புலம்புவது, மாற்றத்தைச் சகிக்காத பழமைவாதிகளின் பழக்கம். ஆனால் கலைவாணரோ கடந்தகாலம் எந்தளவுக்கு ஒடுக்குமுறையும் அடக்குமுறையும் கொண்டதாக இருந்தது என்பதையும் சமகாலத்தில் எவ்வளவு பிரச்னைகள் இருந்தபோதும் எதிர்த்துக் குரல் கொடுப்பதற்கான சூழல் உருவானதன் பின்னணியையும் உணர்ந்து ஆதரித்தவர். 'மனுசனை மனுசன் ஏச்சுப்பிழைச்சது அந்தக் காலம் - மடமை நீங்கிப் பொது உடைமை கேட்பது இந்தக் காலம்' என்ற பாடலில் ஜனநாயகம், பகுத்தறிவு, பொதுவுடைமை, பெண்ணியம் என்று நவீனகாலக் கருத்தாக்கங்களின் வருகையை முன்வைத்துக் கொண்டாடுவார். 'திரௌபதை தன்னைத் துகிலுரிஞ்சது அந்தக் காலம்' என்று கலைவாணர் பாட, 'பெண்ணைத் தொட்டுப் பார்த்தா சுட்டுப்புடுவான் இந்தக் காலம்' என்று மதுரம் பாடலைத் தொடர்வது, முற்போக்கின் அடையாளம். பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற திராவிட இயக்கத் தலைவர்களோடு நட்பும் பரிவும் கொண்ட என்.எஸ்.கிருஷ்ணன் தனது படங்களில் அவர்களது கருத்துகளைப் பரப்பவும் செய்தார். அப்போது திராவிட இயக்கக் கருத்துகளைத் திரைப்படங்களில் பரப்புவதற்குக் கடும் நெருக்கடி இருந்தது. கருணாநிதியின் 'திரும்பிப் பார்' படத்தில் 'கோபுரத்தில் ஏறி..' என்று தொடங்கும் வசனம், ராமானுஜரைக் கிண்டலடிப்பதாகக் கூறி அன்றைய தணிக்கைத்துறையால் படத்திலிருந்து நீக்கப்பட்டது.
இப்படி அபத்தமான தணிக்கை நடைமுறை நிலவிவந்த சூழலிலும் 'தீனா மூனா கானா' என்று தி.மு.க.வைப் புகழ்வதைப் போலப் பாடி, 'திருக்குறள் முன்னணிக்கழகம்' என்று பெயரை மாற்றிக் குறிப்பிட்டுப் பாடினார் என்.எஸ்.கிருஷ்ணன். பெரியார், கறுப்பு - சிவப்பு, அண்ணா எனப் பல அடையாளங்களை அந்தப் பாடலில் கொண்டுவந்திருப்பார் கலைவாணர். சிரிப்பின் வித்தியாசங்களைச் சொல்லும் 'சிரிப்பு' பாடலில் அவரது உடல்மொழி குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. சங்கீதச் சிரிப்பை அவர் நிகழ்த்திக்காட்டுவதுதான், எத்தனை அழகு! திராவிட இயக்கத் தலைவர்களுடன் மட்டுமல்லாது ஜீவா போன்ற கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களுடனும் நட்பு கொண்டிருந்த கலைவாணர் காந்தியின் மீதும் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். காந்தி இறந்தபோது, தன் சொந்தச் செலவில் அவருக்கு நினைவுத்தூண் எழுப்பினார். வள்ளல்தன்மையில் எம்.ஜி.ஆருக்கு முன்னோடி கலைவாணர் என்பார்கள். அண்ணாவையும் காந்தியையும் இணைத்துப் பார்ப்பதிலும் எம்.ஜி.ஆருக்கு முன்னோடி என்.எஸ்.கிருஷ்ணன் என்று சொல்லலாம். எல்லாவற்றுக்கும் மேலாக 'கலைஞர்கள் சமூகப்பொறுப்புணர்வுடன் இருக்கவேண்டும்' என்பதைத் தன் வாழ்க்கையின் மூலம் மெய்ப்பித்துக்காட்டியவர், கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவை குறித்து சரியான மதிப்பீடுகள் கொண்டவர் ஆகியவையே கலைவாணரை நாம் எப்போதும் நினைவுகூர்வதற்கான காரணங்கள் ஆகின்றன.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews