குரூப் 4 தேர்வுக்கு நுட்பமாகத் தயாராகுங்கள்: தேர்வர்களுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவுரை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 23, 2019

குரூப் 4 தேர்வுக்கு நுட்பமாகத் தயாராகுங்கள்: தேர்வர்களுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவுரை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு முகாமை தொடங்கி வைத்து மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய கையேட்டை பங்கேற்பாளர்களுக்கு வழங்கிய அமைச்சர் டி.ஜெயக்குமார். குரூப் 4 தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் போட்டி போடுவதால், நுட்பமாகத் தயாராகுங்கள் என அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவுறுத்தினார். குரூப் 4 தேர்வுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தின் சார்பில் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமைத் தொடங்கி வைத்து அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியது:- குரூப் 4 தேர்வுக்கு இன்னும் 10 நாள்களே உள்ளன. இந்தப் பணிக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டி போடுகின்றனர். திறமை உள்ளவர்களை அடையாளம் காணத்தான் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்துகிறது. கல்லூரியில் மதிப்பெண் பெறுவது வேறு. போட்டித் தேர்வில் வெற்றி பெறுவது வேறு. போட்டித் தேர்வு என்பது பந்தயக் குதிரை போன்றது. இதில் ஒவ்வொரு மதிப்பெண்ணும் மிகவும் முக்கியம். நுணுக்கமாகவும், நுட்பமாகவும் தயாராக வேண்டும் என்றார். பயம் - பதற்றம் வேண்டாம்: முன்னதாக, அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வெ.இறையன்பு பேசியது: நம்மால் வெற்றி பெற முடியும் என்ற ஆக்கப்பூர்வமான எண்ணம் இருந்தால் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற முடியும். தேர்வு என்று சொல்லும் போதே மூன்று விதமான நேரங்கள் தொடங்கி விடுகின்றன. நீண்டகால நேரம். இடைப்பட்ட நேரம். குறுகிய கால நேரம். தேர்வு பற்றிய அறிவிக்கை வெளியானதும் நீண்டகால நேரம் தொடங்கி விடுகிறது. முதலில் இருந்தே படிப்பவர்கள் எந்தவித முனங்கலும் இல்லாமல் வெற்றி பெற முடியும். யார் நீண்ட நேரத்தைப் பயன்படுத்தி படிக்கிறார்களோ அவர்கள் முதுகிலுள்ள உள்ள தேர்வு, பாரமில்லாமல் இருக்கும். கடைசி நேரத்தில் படிக்கும் போது அது கனமாக அழுத்தும். இப்போது உங்களுக்கு (குரூப் 4 தேர்வர்கள்) கிடைத்திருப்பது இடைப்பட்ட நேரம். இந்த நேரத்தில் படிக்கும் போது பதற்றமோ, பயமோ வந்து விடக் கூடாது. பதற்றமும், பயமும் வந்தால் ஒன்றும் செய்ய முடியாது. மகிழ்ச்சிக்காக அம்பு எய்தும் போது குறி ஒருநாளும் தவறாது. பதற்றத்தால் எய்தும் போது தவறி விடும்.
மகிழ்ச்சிக்காக தேர்வு எழுதப் போவதாக நினைத்துக் கொள்ள வேண்டும். தேர்வறைக்குள் நுழையும் போது விழிப்புணர்வுடன் இருப்பதுடன், பதற்றம் இல்லாமல் இருக்க வேண்டும். கொள்குறி வகை வினாக்களில் மனம் எது சொல்கிறதோ அதை உடனடியாகத் தேர்வு செய்து விட வேண்டும். அதிகநேரம் யோசித்தால் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விடைகளும் சரியோ என நினைக்கத் தோன்றும். பயத்தில் இருந்து விடுபட இரவில் தூங்குவதற்கு முன்பு தேர்வு அறைக்குள் இருப்பது போன்றும், வினாத்தாளை படிப்பது போன்றும் காட்சிப்படுத்துங்கள். அப்போது உண்மையாக தேர்வு அறைக்குச் செல்லும் போது எந்தத் தயக்கமும் இல்லாமல் பதற்றமும், பயம் இல்லாமல் தேர்வினை துணிவுடன் எழுதலாம். நிறைய படிக்க வேண்டும் என நினைத்து உணவையும், தூக்கத்தையும் புறக்கணித்து விடக் கூடாது. தூக்கம் முழுவதுமாக இருந்தால்தான் ஞாபக சக்தி இருக்கும். தேர்வுக்குத் தயாராகும் போது மசாலா, எண்ணெய் உணவுகளைத் தவிருங்கள். தேர்வுக்கு அரைமணி நேரத்துக்கு முன்பே சென்று விடுங்கள். நம்பிக்கையுடன் எழுதுங்கள் என்றார் வெ.இறையன்பு. இதில், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் ஸ்வர்ணா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பயிற்சி முகாமில் பங்கேற்ற 1,500-க்கும் அதிகமான மாணவர்களுக்கு உணவும், மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய கையேடும் வழங்கப்பட்டது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி முகாம் நடைபெற்றது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews