ஆசிரியர் ஒருவருக்குப் பணிமாறுதல். அதனால், எல்லோரிடமும் விடைபெற்றுச் செல்லவிருக்கிறார். ஆனால், அவரைச் செல்ல விடாமல் மாணவர்கள் அழுதுகொண்டே விடைகொடுக்க மறுக்கின்றனர். மாணவர்கள் தம்மீது வைத்திருக்கும் அன்பால், ஆசிரியரும் கண்ணீர் வழிய நிற்கிறார். ஒரு கட்டத்தில் மாணவர்களை விலக்கிச் செல்லும்போது, ஆசிரியரைக் கட்டி அணைத்து, திரும்பவும் பள்ளிக்கே இழுக்கின்றனர். அந்த ஆசிரியரின் அழுகை இன்னும் அதிகமானது. அப்படிக் கண்ணீர் வழிய நின்றது ஆசிரியர் பகவான்.
இன்னும் பலருக்கு அந்தக் காட்சி கண் முன் இருந்துகொண்டிருக்கிறது. தொலைக்காட்சியிலும் சமூக ஊடகத்திலும் அன்றைய தினத்தின் பேசுபொருள் ஆசிரியர் பகவானே. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது சட்டென்று எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தவர். இவர், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஓர் அடையாளமாகப் பார்க்கப்படுகிறார்.
திருவள்ளுவர் மாவட்டம், வெளியகரம் எனும் ஊரிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றியவர் கோவிந்த் பகவான். அவரை பணியிட மாற்றம் செய்தபோதே மாணவர்களின் அன்பில் சிக்கினார். அதன்பின், பல தரப்பினரும் அரசுக்குக் கோரிக்கை வைக்க, அப்போதைக்கும் பணியிட மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், தற்போது ஆசிரியர் பகவான் பணியிட மாற்றம் செய்யப்பட்டு திருத்தணி அருகில் உள்ள அருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வருகிறார். புதிய பள்ளியின் சூழல் எப்படி இருக்கிறது என்பதை அறிய அவரைத் தொடர்புகொண்டேன்.
"ஏப்ரல் மாசம், கல்வி ஆண்டின் கடைசி நாள், எனக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டரைத் தந்தாங்க. அதுக்கு அடுத்தது, சம்மர் லீவ்தானே! அதனால பசங்களுக்கு இது தெரியாது. அவங்களுக்கு மட்டுமல்ல. யாருக்குமே நான் டிரான்ஸ்ஃபர் ஆனது தெரியாது. சம்மர் லீவ் முடிஞ்சி, ஜூன் மாசத்துல பள்ளி திறந்தப்ப, பசங்க என்னைத் தேடியிருக்காங்க. 'சாருக்கு கல்யாணம், அதனால லீவ்ல இருக்காரு', 'சார் ஊருக்குப் போயிருக்காரு'னு அவங்கே ஏதேதோ காரணத்தை நினைச்சிட்டு இருந்திருக்காங்க. பத்து, பதினெஞ்சு நாள் ஆனபிறகுதான், நான் வேற பள்ளிக்கு வந்தது தெரிஞ்சிருக்கு. அன்னிலேருந்து ஏகப்பட்ட போன். 'ஏன் சார் சொல்லாம போனீங்க?' 'எந்த ஊர்ல சார் இருக்கீங்க?' னு கேட்டுட்டே இருக்காங்க.
அவ்ளோ அன்பா இருக்கிற ஸ்டூடன்ட்ஸ் கிடைக்கிறது சாதாரண விஷயம் இல்லைதானே! அவங்கள எப்பவும் நான் மறக்க மாட்டேன்.ஆசிரியர் பகவான்
புது ஸ்கூல்ல அட்டெண்டன்ஸ் எடுக்கும்போது, சில பேரு அந்த ஸ்கூல்ல படிக்கிற பசங்க பேரா இருக்கும். அப்பெல்லாம் அவங்கள நினைச்சிப்பேன். அடுத்த வாரம் அந்த ஊர்ல திருவிழா. அதுக்குக் கூப்பிட்டுருக்காங்க. அப்போ போகும்போது எல்லாரையும் பார்க்கணும்." என்றவரிடம் புதிதாகச் சென்றிருக்கும் பள்ளியைப் பற்றிக் கேட்டேன்.
ஸ்டூடன்ஸ்கிட்டேயிருந்து கிடைச்சிட்டு இருக்கிற அனுபவங்களை வெச்சி, ஒரு புத்தகம் எழுதிட்டு இருக்கேன்.ஆசிரியர் பகவான்
"இப்போ வந்திருக்கிற ஸ்கூல், திருத்தணி பக்கத்துல அருங்குளம். பணி நிரவல்ல என்னை இங்கே டிரான்ஸ்ஃபர் பண்ணியிருக்காங்க. எங்க ஊருலேருந்து 45 கிலோமீட்டர் தூரம். இந்த ஸ்கூல்ல மாணவர் எண்ணிக்கை அதிகம். இந்த ஸ்டூடன்ட்ஸூம் 'சார் உங்கள டிவியில பார்த்தேன்' 'அந்த புக்ல உங்க போட்டோ பார்த்திருக்கேன் சார்'னு சொல்றாங்க. இங்கே வந்து கொஞ்ச நாள்லேயே பசங்க டக்குனு ஒட்டிக்கிட்டாங்க. அந்த ஸ்கூல் பசங்க போலவே இவங்களுக்கு சீக்கிரமே ரொம்ப நெருக்கமா பழகிடுவாங்கனு நினைக்கிறேன். நமக்கு எல்லா ஸ்டூடன்டஸூமே ஒண்ணுதானே!
ஸ்டூடன்ஸ்கிட்டேயிருந்து கிடைச்சிட்டு இருக்கிற அனுபவங்களை வெச்சி, ஒரு புத்தகம் எழுதிட்டு இருக்கேன். அதை அடுத்த வருஷம் ஜனவரியில வர்ற சென்னை புத்தகக் கண்காட்சி சமயத்துல வெளியிடணும்னு ஒரு திட்டம் இருக்கு." என்கிறார் பகவான்.