உங்களை முட்டாள்களாக்கும் ஆன்லைன் மோசடிகள்! எச்சரிக்கை!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 20, 2019

உங்களை முட்டாள்களாக்கும் ஆன்லைன் மோசடிகள்! எச்சரிக்கை!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தொழில்நுட்ப வளர்ச்சி மனிதனின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும், விரைந்து செயலாற்ற உதவுவதாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் வடிவமைக்கப்படுகிறது. ஆனால், நடைமுறை வாழ்க்கையில் நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடிகள் பெருகிவருவது இந்தக் கருத்துக்கு நேர்மாறானதாக உள்ளது.தீக்குச்சியை வைத்து விளக்கை ஏற்றி வெளிச்சமும் தரலாம், தீப்பந்தம் ஏற்றி வீட்டையும் எரிக்கலாம். யாரிடம் தீக்குச்சி உள்ளது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியது. தொழில்நுட்ப வளர்ச்சியும் அப்படித்தான் ஆகிவிட்டது.
சமீபகால உதாரணங்களாக சில சம்பவங்களை சொல்லலாம். ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்த மதுரை தம்பதிகள் தற்கொலை. சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் கடலூர் மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த அருள்வேல் ரம்மி ஆட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். உபெரில் பிரியாணி வாங்க ஆசைப்பட்டு ரூ.40,000 இழந்த சென்னை கல்லூரி மாணவி பிரியா அகர்வால். ஏடிஎம்களில் பணம் நிரப்பும் ஊழியர்கள் ரூ.13லட்சம் திருடி ஆன்லைனில் ரம்மி விளையாடிய சம்பவம் என ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வடிவங்களில் மோசடிகள் நிகழ்கின்றன. இப்படி ஆன்லைன் கேம்கள், ஆப்களில் என சமீபகாலமாக பணம் பறிக்கும் கும்பல் அதிகமாகிக்கொண்டேயிருக்கிறது. புளூவேல் கேம் மட்டுமல்ல இப்படி உயிரையும் பணத்தையும் பிடுங்கும் பல ஆன்லைன் ஆப்கள், லிங்க்குகள் என நம்மைக் குறிவைத்து பல ஆபத்துகள் நாளுக்கு நாள் பெருகிவருகின்றன. நாம் அவ்வளவு முட்டாள்களா? அல்லது இந்த ஆன்லைன் கழுகுகள் புத்திசாலிகளா? எனக் கேள்விகள் வைத்தால் முதலில் முட்டாள்கள் நாம்தான் அந்த முட்டாள்தனத்தை இம்மாதிரியான ஆன்லைன் தளங்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்கிறார் ஆன்லைன் வர்த்தகத் தொழில்நுட்ப நிபுணரான எம்.கணபதி. ‘‘பணம் வேணும் அதிலும் உட்கார்ந்த இடத்திலிருந்து பணம் வேண்டும். இந்த எண்ணம்தான் இன்று உயிரைக் குடிக்கத் தொடங்கியிருக்கிறது. புதிதாக ஒரு கடை திறந்தால் அங்கே ஆஃபர்கள், அன்பளிப்புகள் என சொன்னால் கூட்டம் குவியும் அல்லவா. அதே பாணிதான். இரண்டு சட்டை ரூ.500 என்றதும் நாமும் முண்டியடித்துக்கொண்டு போய் நிற்போம்.
அந்தச் சட்டையின் மதிப்பு ரூ.200 கூட இருக்காது என்பது நம் ஆறாம் அறிவுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், பக்கத்து வீட்டுக்காரர்கள், நண்பர்கள் தெரிந்தவர்கள் ‘இங்கே பார்த்தியா 500 ரூபாய்க்கு நான் ரெண்டு சட்டை எடுத்துட்டேன்’ என பெருமை பீத்துவதில் ஆரம்பிக்கிறது நம் பிரச்னை. இதற்கே இப்படி எனில் ஒரு கேம் அதை விளையாடினால் ரூ.50 கிடைக்கும் என்றால் விடுவோமா? எல்லாமே ஆரம்பத்தில் உங்களுக்கு ஆஃபர் விலையில் ரெண்டு சட்டை கொடுப்பது போன்ற ரகம்தான். அங்கே கூட நாம் பெரும் அளவில் ஏமாறமாட்டோம். ஆனால், ஆன்லைன் உலகம் வேறு. முதலில் நீங்கள் ரூ.10 போட்டு விளையாடி உங்கள் அக்கவுன்டில் ஒரு நூறு ரூபாய் விழுந்தாலே மனம் அப்படியே அந்த கேம் பக்கம் செல்ல ஆரம்பிக்கும். காரணம், கைகளில் சுலபமாக இருக்கும் மொபைல். தீரவே தீராத டேட்டா நெட்வொர்க்குகள் என நமக்கும் நாம் ஏதோ இதில் பெரிதாக இழக்கப் போவதில்லை என நினைத்துக்கொண்டு விளையாட ஆரம்பிக்கிறோம். ஆஹா! ரூ.10க்கு நூறு வரவா... அட இந்த ரூ.100ம் அனாமத்தாக வந்ததுதானே என அதையும் போடுவோம். இப்படி அதிர்ஷ்டமிருந்தால் உங்களுக்கு ரூ.5,000 வரை கூட கிடைக்கும். அதன் பிறகுதான் ஆட்டமே ஆரம்பம். சாதாரண கார்டு கேம் நண்பர்களுடன் உட்கார்ந்து விளையாடினாலே அதில் மறைத்து, ஒளித்து என அவ்வளவு ஏமாற்று வேலை செய்யலாம். சும்மாவா சொன்னார்கள் ‘சூது கவ்வும்’ என்று’’ என ஆன்லைன் மோகத்தால் நிகழும் மோசடி நிலவரத்தை மேலும் விளக்கினார் கணபதி.
‘‘யாரோ ஒரு குழு உருவாக்கிய கேம், அந்த கேமை எப்படி நீங்கள் விளையாட வேண்டும் என அனைத்தும் அவர்களே புரோகிராம் செய்தது. இதில் என்ன புத்திசாலித்தனமாக நீங்கள் விளையாடினாலும் அவர்கள் ஒரு கோட் கிரியேட் செய்தோ அல்லது ஒரு சின்ன கோடை மாற்றினாலோ அவர்கள் ஜெயித்தவர்களாகத்தானே முடிவு வரும். சரி, உடன் விளையாடுபவரும் நம்மைப் போலவே தனிநபர் என 100% நம்மால் தீர்மானமாக சொல்லமுடியுமா?! ஆன்லைனைப் பொறுத்தவரை எதையுமே நீங்கள் 100% உண்மை என சொல்லவே முடியாது. மேலும் பணம் பறிபோனாலும் தகுந்த ஆதாரம் கிடைக்கும் முன் அவர்கள் நெட்வொர்க்கே மாறியிருக்கும் அல்லது ஆதாரங்களே திரட்ட முடியாது என்பது போல்தான் அவர்களின் செயலிகளும் உருவாக்கப்பட்டிருக்கும். எல்லாவற்றிற்கும் மேல் ‘Conditions Apply’ இந்த ஒற்றை வார்த்தையில் செயலிக்குச் சொந்தக்காரர்கள் எதையும் எப்போதும் மாற்றிக்கொள்ளலாம்’’ எனக் கூறும் கணபதி நம் வங்கிக் கணக்கை எப்படி பாதுகாப்பது, இம்மாதிரியான போலிகளில் சிக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்பதையும் விவரித்தார்.
‘‘வெறும் பேசவும், மெஸேஜ்களுக்கும் மட்டுமே மொபைல் பயன்பாடு இருந்தவரை எந்தப் பிரச்னைகளும் இல்லை. என்றைக்கு ஸ்மார்ட் போன்கள் அறிமுகம் ஆகியதோ அன்றே அத்தனை பிரச்னைகளும் வீடு தேடி இல்லை நம் கைகளைத் தேடி வரத் தொடங்கிவிட்டன. தேவையற்ற லிங்க்குகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அப்படியே ஓபன் செய்தாலும் புராடக்ட்களை வாங்க பெரும்பாலும் கேஷ் ஆன் டெலிவரிகளைப் பயன்படுத்துங்கள். மேலும் யார் போன் செய்து வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டாலும் கொடுக்க முடியாது என கறாராக சொல்லிவிடுங்கள். மேலும் இப்படியான விவரங்கள் கேட்பவர்கள் பெரும்பாலும் உங்களைப் பதற்றப்பட வைத்து, பயம் ஏற்படுத்தி ஒருவித அவசர சூழலை உருவாக்கிதான் உங்களை ஏமாற்றுவார்கள். எந்த வங்கிகளும் வாடிக்கையாளர்களிடம் அவ்வளவு அவசரமோ, அல்லது பதற்றமோ ஏற்படுத்த மாட்டார்கள். முக்கியமாக OTP எண்ணை எக்காரணம் கொண்டும் பகிராதீர்கள். பொதுவான இடங்களில் கிடைக்கும் இலவச இன்டர்நெட் சேவைகள், இணையதள மையங்களில் வங்கிக் கணக்கு பயன்பாடு இவற்றை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள்’’ என்கிறார். மேலும் தொடர்ந்த அவர், ‘‘ஒருமுறை பணம் பறிபோகிறது என்றால் போட்ட காசை எடுக்கிறேன் பேர்வழியாக மீண்டும் இறங்கினால் இன்னும் அதிகமாகத்தான் பணம் பறிபோகும். அப்படி ஒரு பத்து ரூபாய் இழந்தாலும் சரி சம்பந்தப்பட்ட செயலி அல்லது இணையதளத்தில் உள்ள உங்கள் அக்கவுன்டை அழித்துவிட்டு குறிப்பிட்ட செயலியை அல்லது இணையதளத்தை மொபைலிலிருந்தும் அழித்துவிடுங்கள். பிரவுஸரில் இணையதளத்தைப் பயன்படுத்தியிருப்பின் பிரவுஸரில் சென்று HISTORY DELETE என்னும் ஆப்ஷனைக் கொண்டு அனைத்தையும் அழித்துவிடுங்கள். ஏனெனில் பத்து ரூபாய்தானே என நீங்கள் விட்டால் அது பத்தாயிரம் வரை கூட போகும்.
எவ்வளவோ சினிமாக்கள், அறிவுரைகள், விழிப்புணர்வுகள் என சொன்னாலும் ஒருபக்கம் ஏமாற்றும் பேர்வழிகள் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏமாறுபவர்கள் ஏமாந்துகொண்டுதான் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேல் மொபைல் இன்று ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தத் தொடங்கிவிட்டது. குடும்பத்துடனான பந்தம் குறைந்து தனிமையை ரசிக்கக் கற்றுத்தர ஆரம்பித்துவிட்டது. சிறுவயதிலேயே மொபைல் பயன்பாட்டைப் பெற்றோர்கள் முடிந்தவரை தவிர்க்கப்பாருங்கள். கணினி எனில் உங்கள் கண்பார்வையில் அவர்களைப் பயன்படுத்தவிடுங்கள். தனியறையில் கணினி பயன்பாடு அறவே கூடாது என மாற்றுங்கள். இதிலேயே குறைந்தபட்சம் அடுத்த தலைமுறையைக் கொஞ்சம் கட்டுப்படுத்தவாவது செய்யலாம்’’ என்று முன்னெச்சரிக்கை ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளோடு முடித்தார் ஆன்லைன் வர்த்தகத் தொழில்நுட்ப நிபுணர் கணபதி.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews