பிறந்த நாள் பரிசாக மரக்கன்றுகள்... பசுமையில் திளைக்கும் மதுரை அரசுப் பள்ளி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 05, 2019

பிறந்த நாள் பரிசாக மரக்கன்றுகள்... பசுமையில் திளைக்கும் மதுரை அரசுப் பள்ளி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பசுமைபடை மூலம் பள்ளி மாணவர்களிடம் உற்சாகத்தைக் கொண்டு சேர்க்கும் ஆசிரியர் ஹரிபாபு ஒரு பசுமை நாயகனாக வலம் வருகிறார். 'மண்ணை அடையாளப்படுத்த செம்மண் நிறத்தில் ஷூ, பனைமரத்தின் தேகத்தை உணர்த்த கறுப்பு பேன்ட், பசுமையைப் பாதுகாக்க வேண்டும் என்பதை உணர்த்த பளிச்சிடும் பச்சை நிறச் சட்டை, எல்லாவற்றிற்கும் தலைவன் இயற்கைதான் என்று சொல்ல பச்சை நிறக் கிரீடம் போன்ற தொப்பி' - இந்தத் தோற்றத்தில் மாணவர்கள் மத்தியில் வலம்வருகிறார், ஆசிரியர் ஹரிபாபு. மதுரை ஆனையூர் அரசு உயர்நிலைப் பள்ளி, பல்வேறு இடங்களில் மழைநீர் சேகரிப்பு... மரக்கன்றுகள் பரிசளிப்பு உள்ளிட்ட இயற்கை சார்ந்த சமூகப் பணிகளைச் சத்தமில்லாமல் செய்துவருகிறது. அப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஹரிபாபு மற்றும் தலைமை ஆசிரியர் செந்தில்குமார் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்களின் உதவியோடு மாணவர்கள் பல்வேறு களப்பணிகளைச் செய்துவருகின்றனர். இதற்காக மாணவர்கள் பல்வேறு பசுமை விருதுகளைப் பெற்றுவருகின்றனர். இந்நிலையில் ஆனையூர் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றோம். பசுமை வணக்கத்துடன் நம்மிடம் பேசிய ஹரிபாபு, "ஆனையூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு நபரும் பசுமையின் விரும்பிகள். வீட்டில் வீணாகும் பால் பாக்கெட்டுகளைக்கூட விதைகளை வளர்த்தெடுக்கும் தொட்டியாக மாற்றிவிடுவார்கள். பிளாஸ்டிக்கைத் தூக்கி எரியக்கூடாதென்று, மை பேனாக்கள் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். பிறந்தநாளுக்குக் கொடுக்கும் சாக்லேட் எந்தச் சத்துகளையும் தராமல், மண்ணுக்கு பிளாஸ்டிக் குப்பைகளை மட்டுமே வழங்குவதால், அதற்கு மாற்றாகக் கடலைமிட்டாய், எள்ளு மிட்டாய், பேரீச்சம் பழம் என்று ஆரோக்கியமானவற்றை வழங்குகின்றனர். மரக்கன்றுகள் நடுவது, நெகிழிகள் அகற்றுவது, கண்மாய்கள் தூர்வாருவது எனப் பல்வேறு செயல்பாடுகளைச் செய்துவருகிறது எங்கள் பள்ளி. இதனால், பல்வேறு பசுமை விருதுகளும் கிடைத்துள்ளன. தலைமை ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் கொடுக்கும் ஒத்துழைப்பு பெரும் ஆதரவாக இருக்கிறது.
மரங்களே இல்லாத எங்கள் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்துள்ளோம். ஆனையூர் பகுதியில் பல்வேறு மழை தரும் மரங்களை வளர்த்தெடுத்துள்ளோம். ஒவ்வொரு மாணவரின் வீட்டிலும் மரம் வளர்க்க வேண்டும் என ஆர்வத்தையும் தூண்டுகிறோம். நான் அறிவியல் ஆசிரியர் என்பதால் எனக்கு இயற்கைமீது அதிக ஆர்வம் உண்டு. அதனால் எங்கள் பள்ளியின் தேசியப் பசுமைப் படை ஒருங்கிணைப்பாளராக இருந்து, மாணவர்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்துகிறேன். ராகத்தோடு பசுமைப் பாடல்களை மாணவர்கள் மத்தியில் பாடுவதால் மாணவர்களுக்குச் என்னைப் பிடிக்கும். பசுமைச் செயல்பாடுகளின்போது பச்சை நிற உடை அணிவேன். அதுபோக, வாரந்தோறும் புதன்கிழமை கண்டிப்பாகப் பச்சை நிற உடையில்தான் வருவேன். ஆனால் எந்தச் சட்டை போட்டாலும் பசுமைப் படை பேட்ஜ்ஜை எடுக்கமாட்டேன். அதுதான் எனக்கும் என் பள்ளிக்கும் உள்ள அடையாளமாக நினைக்கிறேன். விடுமுறை நாள்களில் கடைக்குச் சென்றாலும் பொதுமக்கள் 'என்ன இந்த பேட்ஜ்' என்று என்னிடம் கேட்பார்கள். உடனே கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் இயற்கை சார்ந்த விழிப்புணர்வை அவர்களிடம் புகுத்திவிடுவேன். பள்ளி மட்டுமல்லாமல், எல்லா இடங்களுக்கும் இயற்கைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைக் கொண்டுசெல்வேன். பள்ளியில் புதன்கிழமை பசுமைப் படை கூட்டம் நடைபெறும்போது 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பசுமைப் படை சீருடையில் அணிந்து கலந்துகொள்வார்கள். அதில், செயல்முறை விளக்கங்கள் நடத்துவேன். ஆண்டுக்கு 12 முறை ஆனையூர்ப் பகுதியில் பசுமைப் படை கூட்டங்களைக் கண்டிப்பாக நடத்திவிடுவோம். மாணவர்களுக்குச் சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு புத்தகங்களிலிருந்து பாடங்கள் நடத்தியுள்ளேன். இதனால் எங்கள் மாணவர்கள் சுற்றுச்சூழல் தொடர்பான கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, விநாடி வினா என்று எல்லாப் போட்டிகளிலும் வெற்றிகளைக் குவித்துவருகின்றனர்.
ஆண்டுதோறும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினத்தன்று மாணவர்களுக்குப் பழ மரக்கன்றுகள் வழங்குகிறேன். இதனை தங்களது வீட்டில் வளர்த்து மாணவர்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மகிழ்கின்றனர். பழ மரக்கன்றுகள் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், பறவைகளுக்கும் உணவு எடுத்துக்கொள்ளப் பயன்படுகிறது. இப்படிச் சங்கிலி தொடரான பயன்களை இயற்கையால் மட்டும்தான் அளிக்க முடியும். இதனால் இயற்கையைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் உலக சுற்றுச்சூழல் தினம், ஓசோன் தினம், உலக ஈரநில தினம், சிட்டுக்குருவி தினம், காடு தினம், தண்ணீர் தினம் என்று எல்லாத் தினங்களையும் கொண்டாடுகிறோம். அது தொடர்பான விஷயங்களை விவாதிப்பது, பிரச்னைகளை எவ்வாறு சரி செய்வது எனச் செயல்முறை விளக்கங்கள் கொடுப்பேன். இதன் விளைவால் கடந்த 2 வருடத்தில் மட்டும் 1,200 மரக்கன்றுகளை மதுரை முழுதும் நட்டு வளர்த்துள்ளோம். இவ்வாறான செயல்பாட்டிற்கு எங்கள் பள்ளி 2016-ல் சிறந்த பசுமைப் படை பள்ளி என்ற சுற்றுச்சூழல் விருதையும், 20 ஆயிரம் ரொக்கப் பரிசையும் பெற்றது. அரசு சார்பாக நடத்தப்பட்ட கலை அருவி நிகழ்ச்சியில் பறை இசையில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றது. இதேபோல் தனியார் நிறுவனங்களிடமும், தொண்டு நிறுவனங்களிடமும் பல்வேறு சுற்றுச்சூழல் விருதுகளை எங்கள் பள்ளி பெற்றுவருகிறது. இதில் அரியவர் விருது, இயற்கை ஆர்வலர் விருது, சான்றோர் விருது, லட்சிய ஆசிரியர் விருது, பசுமை விருது, நன்னெறி ஆசிரியர் விருது, பசுமை நாயகன் விருது என்று பல்வேறு விருதுகள் என்னுடைய செயல்பாட்டிற்குக் கிடைத்தன. இந்த விருதுகளை என்னுடைய மாணவர்களுக்கும், எங்கள் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் கிடைத்த வெற்றியாகத்தான் எண்ணுகிறேன். அவர்கள் ஒத்துழைப்பு இல்லை என்றால் சமூகப் பணிகள் செய்திருக்க முடியாது" என்றார்.
தலைமை ஆசிரியர் செந்தில்குமார், "எங்கள் பள்ளி மாணவர்களிடம் மரங்களை வளர்க்க வேண்டும் எனத் தொடர்ந்து விழிப்புணர்வு செய்கிறோம். மழை நீர் சேகரிப்பது, பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்புகள் பற்றி எங்கள் மாணவர்கள் பெற்றோர் களிடம் கொண்டு செல்கின்றனர். என்னுடைய பிறந்தநாள் அன்று பலா மரங்கள் கொடுத்துள்ளேன். எங்கள் பள்ளி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கண்மாய்கரைகளில் பனை விதைகள் 50க்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைத்துள்ளோம். மேலும் விதைப் பந்துகளை நாங்களே தயார் செய்து பல்வேறு இடங்களிலும் விதைக்கிறோம். இதனால் எங்கள் சிறந்த பசுமை பள்ளியாக பாராட்டப்படுகிறது", என்று பெருமையுடன் தெரிவித்தார். பசுமைபடை மூலம் பள்ளி மாணவர்களிடம் உற்சாகத்தைக் கொண்டு சேர்க்கும் ஆசிரியர் ஹரிபாபு நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர். பள்ளி மாணவர்களின் செயல்பாட்டிற்குச் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews