போக்குவரத்து ஊழியர்களுக்கென்று மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்ட கதை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 13, 2019

போக்குவரத்து ஊழியர்களுக்கென்று மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்ட கதை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
போக்குவரத்து, தொழில்நுட்பம் இந்த இரண்டின் காரணமாக மட்டுமே பரந்து விரிந்த உலகம், கைகளுக்கு அடக்கமாகியிருக்கிறது. ஒரு பகுதியின் முன்னேற்றமே அதன் போக்குவரத்து வசதிகளைக்கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ தினமும் ஏதோ ஒரு போக்குவரத்தை நாம் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். ரயில், விமான சேவைகள் என அதிவேகச் சேவைகள் இருந்தாலும், அதிகமானோர் பயன்படுத்துவது அரசுப் பேருந்துகளைத்தான். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் சுமார் 1.5 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களின் பிள்ளைகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக, ஈரோடு பெருந்துறை, சித்தோடு ஆகிய இடங்களில் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன. இந்தக் கல்லூரிகள் தொடங்கப்பட்ட வரலாறு சுவாரஸ்யமானது.
1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த சமயம், அவர் அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் சு.முத்துசாமி. தான் சார்ந்துள்ள போக்குவரத்துத்துறை தொழிலாளர்களின் வாரிசுகளுக்காகப் பொறியியல் கல்லூரி ஒன்று தொடங்கலாம் எனத் தோன்றவே, அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். எம்.ஜி.ஆரிடம் இருந்து ஒப்புதலும் கிடைத்தது. கல்லூரியைத் தொடங்குவதற்கு, போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர் முதல் நிர்வாக இயக்குநர்கள் வரை தங்கள் சம்பளத்தில் மாதம் 10 ரூபாய் கல்லூரிக்காகச் செலுத்த வேண்டும். அவர்களின் வாரிசுகள் அந்தக் கல்லூரியில் படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி இந்தத் தொகையை ஒவ்வோர் ஊழியரும் செலுத்த வேண்டும் என உத்தரவு. இப்படியாக, ஒவ்வோர் ஊழியரும் மாதம் 10 ரூபாய் வீதம் 60 மாதங்களுக்கு 600 ரூபாய் கொடுத்துள்ளனர். அந்தத் தொகையை முதலீடாகக்கொண்டு, தற்போது பெருந்துறை ஐ.ஆர்.டி.டி மருத்துவக் கல்லூரி மற்றும் சித்தோடு ஐ.ஆர்.டி.டி சாலை மற்றும் பொறியியல் கல்லூரி ஆகிய இரண்டு கல்லூரிகள் இயங்கிவருகின்றன. இங்கு போக்குவரத்துத் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு மட்டுமன்றி, கணிசமான எண்ணிக்கையிலான இடங்கள் பிற மாணவர்களுக்கும் ஒதுக்கப்படுகின்றன. இரண்டு கல்லூரிகளிலும் அரசு நிர்ணயிக்கும் கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
ஐ.ஆர்.டி.டி மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 100 எம்.பி.பி.எஸ் இடங்கள் இருக்கின்றன. அதில், மாநில ஒதுக்கீட்டுக்கு 55 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 இடங்களும் வழங்கப்படுகின்றன. மீதம் 30 இடங்கள் போக்குவரத்துத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வின் அடிப்படையில்தான் இந்த இடங்கள் நிரப்பப்படுகின்றன. இதேபோல், சித்தோடு ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லூரியில் ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில், எலெட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம், மெக்கானிக்கல் என ஏழு இளநிலை பொறியியல் படிப்புகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் மொத்தமுள்ள 60 இடங்களில் 21 இடங்கள் போக்குவரத்துத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 39 இடங்கள் அண்ணா பல்கலைக்கழகக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இதுமட்டுமன்றி மூன்று முதுநிலை பொறியியல் பாடப்பிரிவுகளும் உள்ளன. ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் 20 இடங்கள் என மொத்தம் 60 இடங்கள் உள்ளன. அவற்றில் 35 சதவிகித இடங்கள் போக்குவரத்துத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக ஒதுக்கப்படுகின்றன. சிறப்பான சூழல், தேவையான அடிப்படை வசதிகள் எனத் தனியார் கல்வி நிறுவனத்துக்கு இணையாக இந்தக் கல்லூரிகள் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல அதிரடி மாற்றங்களைச் செய்து, தற்போது தொல்லியல் துறையின் ஆணையரான உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் இந்தக் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. போக்குவரத்துத்துறை அமைச்சர் சு.முத்துசாமி இந்தக் கல்லூரி உருவாகக் காரணமான அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களிடம் பேசினோம். ``போக்குவரத்து தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் மற்றவர்களுக்குமாகச் சேர்த்து, Institute of Road Transport and Technology (IRTT) என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரியைத் தொடங்க நினைத்தேன். இதற்காக ஒவ்வொரு போக்குவரத்து ஊழியர்களிடமும் மாதம் 10 ரூபாய் என 60 மாதம் வசூலிக்கத் திட்டமிட்டோம். இதை அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களிடம் சொல்ல, `ஊழியர்கள் இதற்கு ஒத்துழைப்பார்களா?’ என யோசித்து பிறகு சம்மதித்தார்.
போக்குவரத்து ஊழியர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என அப்போது இருந்த ஊழியர்கள் சுமார் 75,000 பேருக்கு கடிதம் எழுதினேன். தொ.மு.ச உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, தி.மு.க-வின் முன்னாள் தலைவரான கலைஞர் கருணாநிதி இதைத் தெரிந்துகொண்டு, `நல்ல முயற்சிக்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்’ எனத் தொழிற்சங்கங்களுக்கு உத்தரவிட, பிரச்னை சுமுகமானது. `போக்குவரத்துக் கழகத்துக்கும் கல்லூரிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?' என அப்போதைய நிதித்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.அதையும் மீறி, போக்குவரத்து ஊழியர்கள் ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்ட ஐ.ஆர்.டி.டி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரியில் பலர் படித்து, இன்று நல்ல நிலையில் இருப்பதைக் கேட்கையில் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews