👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகளை நிபுணர்கள் குழுவானது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு வழங்கியுள்ளது. தேசிய கல்வி ஆணையத்தை அமைப்பது, தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக கல்விக் கட்டணத்தை உயர்த்துவதை தடுப்பது போன்றவை அந்தப் பரிந்துரைகளில் அடங்கும்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சராக ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்ற நிலையில், கஸ்தூரிரங்கன் தலைமையிலான நிபுணர்கள் குழு, புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்தனர். இந்த நிபுணர்கள் குழுவில் கஸ்தூரி ரங்கன் தவிர்த்து, கணிதவியல் நிபுணர் மஞ்சுல் பார்கவா உள்ளிட்ட 8 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
அந்த நிபுணர்கள் குழு சமர்ப்பித்துள்ள புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அறிவுப்பூர்வ விவகாரங்களுக்கும், வரலாற்றுக்கும் இந்தியர்கள் அளித்துள்ள பங்களிப்பின் காரணமாகவே, தற்போதைய பள்ளிக் கல்விகளிலும், புத்தகங்களிலும் அவர்கள் குறித்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கணிதம், வானியல், தத்துவம், உளவியல், யோகா, கட்டுமான தொழில்நுட்பம், மருத்துவம், நிர்வாகம், அரசியல், சமூகம் உள்ளிட்ட துறைகளுடன், இந்திய அறிவுசார் அமைப்புகளை பாதுகாப்பதும் இதில் அடங்கும்.
நாட்டில் உள்ள கல்வியமைப்பின் தொலைநோக்குப் பார்வையை தொடர்ச்சியாக, அதே சமயம் நிலையாக மேம்படுத்துதல், அமல்படுத்துதல், மதிப்பிடுதல், திருத்துதல் போன்றவற்றை செய்யக் கூடிய வகையிலான புதிய உச்ச அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும். அதை ராஷ்ட்ரீய சிக்ஷா ஆயோக் அல்லது தேசிய கல்வி ஆணையம் என்று குறிப்பிடலாம்.
அதேபோல், கல்வி மற்றும் கற்றலில் கவனத்தை மீட்டெடுக்கும் வகையில் மனிதவள மேம்பாட்டுத் துறையின் பெயரை மீண்டும், கல்வி அமைச்சகம் என மாற்றலாம்.
தனியார் பள்ளிகள் தங்களின் கட்டண அமைப்பை சுதந்திரமாக நிர்ணயித்துக் கொள்ளலாம். ஆனால், அவை தன்னிச்சையாக கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது. பள்ளி மேம்பாட்டு நிதி, உள்கட்டமைப்பு நிதி என்ற பெயரில் கல்விக் கட்டணத்தில் எந்தவொரு கணிசமான உயர்வும் இருக்கக் கூடாது.
கட்டண அதிகரிப்பு சதவீதத்தை, மாநில பள்ளிகள் ஒழுங்குமுறை ஆணையம் (எஸ்எஸ்ஆர்ஏ) என்ற புதிய ஒழுங்குமுறை ஆணையம் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நிர்ணயிக்கும். பொருளாதார நிபுணர் சாணக்யா, கணித மேதை பானினி, வானியல் ஆராய்ச்சியாளர் ஆரியபட்டா போன்றோர் பயின்ற பழங்கால பல்கலைக்கழகங்களான தட்சஷீலம் மற்றும் நாளந்தாவின் பிரபல பட்டதாரிகள், ஆராய்ச்சியாளர்கள் குறித்த கல்வி சேர்க்கப்படலாம்.
மாணவர்கள் ஒரு பாடத்தில் தேர்வு எழுதிய பிறகு, மீண்டும் அதே பாடத்தை படித்து அதைவிட சிறப்பாக எழுத விரும்பினால் அதற்கு அனுமதிக்கலாம் என்பது போன்ற பரிந்துரைகள் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
தற்போது நடைமுறையில் உள்ள தேசிய கல்விக் கொள்கையானது, கடந்த 1986-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு, பின்னர் 1992-ஆம் ஆண்டு திருத்தப்பட்டது.
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கஸ்தூரிரங்கன் தலைமையிலான நிபுணர்கள் குழுவானது, முன்பு ஸ்மிருதி இரானி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோது, முன்னாள் அமைச்சரவைச் செயலர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் உருவாக்கப்பட்ட குழுவின் அறிக்கையையும் கவனத்தில் கொண்டு வரைவு அறிக்கையை வழங்கியுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U